இந்த வாரம் கலாரசிகன் - (15-05-2022)

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருளிடமிருந்து வந்திருக்கும் வாட்ஸ்ஆப் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வாரம் கலாரசிகன் - (15-05-2022)

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருளிடமிருந்து வந்திருக்கும் வாட்ஸ்ஆப் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. "தமிழ்மண்' பதிப்பகம் இளவழகனாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தலைமையில் நடைபெற இருக்கிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி.

புத்தகங்கள் பதிப்பிப்பது என்பது வெறும் தொழிலல்ல. அதில் ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும், ஆத்ம திருப்தியும் எல்லாவற்றுக்கும் மேலாக சாதனைப் பெருமிதமும் இருப்பவர்களால்தான் தொடர்ந்து வெற்றிபெற முடியும். "தமிழ்மண்' இளவழகனாரின் குறிக்கோள் அவை மட்டுமல்லாமல் வித்தியாசமானதாகவும் இருந்தது.

கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பங்களிப்பு நல்கிய பேரறிஞர்களின் படைப்புகளை எல்லாம், ஒன்றன் பின் ஒன்றாகத் தொகுத்து அவர் வெளியிடத் தொடங்கியபோது, நான் மலைத்துத்தான் போனேன். ஒரு நாள் இரவு அவர் "தினமணி' அலுவலகத்துக்கு வந்து ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எனது அறைக்குக் கொண்டு வந்தார். "என்ன இது?' என்று நான் கேட்பதற்குள், அதைத் திறந்து அந்தப் பொக்கிஷத்தை என் மேஜையில் அடுக்கத் தொடங்கினார். "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து "திரு.வி.க. தமிழ்க் கொடை' என்று வெளிக்கொணர்ந்திருந்தார் அவர்.

மறைமலையடிகள் (மறைமலையம்), பாரதிதாசன் (பாவேந்தம்), தேவநேயப்பாவாணர் (பாவாணம்), க.அப்பாதுரையார் (அப்பாத்துரையம்) என்று வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அவர் வெளிக்கொணர்ந்த தொகுப்புகள், காலப் பெட்டகங்கள். வெ.சாமிநாத சர்மாவின் படைப்புகள் உள்பட, தமிழுக்கு உரமூட்டிய அறிஞர்கள் எவரையும் அவர் விட்டுவைக்காமல், வருங்காலத்துக்கு அவர்களது எழுத்தை பத்திரப்படுத்திய முயற்சிக்காக அவரைத் தமிழகம் கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறது.

இளங்குமரனாரின் படைப்புகளை அவர் இருக்கும்போதே தொகுத்து வெளியிட்ட நிகழ்வில் நீதியரசர் அரங்க. மகாதேவனும் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று விழைந்து, அழைத்துப் பெருமைப்படுத்திய இளவழகனாரை நான் எப்படி மறக்க முடியும்?

தனது வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையாகவும், தனது பதிப்புத்துறை வாழ்க்கையின் தலைசிறந்த பங்களிப்பாகவும் அவர் கருதியது, அறிஞர் அண்ணாவின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து வெளியிட்ட பணியைத்தான். "அண்ணா அறிவுக்கொடை' என்கிற தலைப்பில் அவரது எழுத்து, பேச்சு, படைப்புகளை எல்லாம் தேடிப்படித்துத் தொகுத்து வெளியிடும் முயற்சி குறித்து எத்தனை முறை அவர் என்னிடம் பேசினார் என்பதற்குக் கணக்கே கிடையாது.

44,000 பக்கங்கள் அடங்கிய "அண்ணா அறிவுக்கொடை' இப்போது 123 தொகுதிகளாக முழுமை பெற்று வெளியாக இருக்கிறது. இளவழகனார் இருக்கும்போதே, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "அண்ணா அறிவுக்கொடை' தொகுப்பை வெளியிட்டது ஒருவகையில் நல்லதாகிவிட்டது. அந்தத் தொகுப்பை வெளியிட அவருக்கு உதவிய வி.ஐ.டி.வேந்தர் கோ.விசுவநாதன் குறித்து இளவழகனார் நன்றிப் பெருக்குடன் என்னிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

இளவழகனார் மறைந்தபோது, கொள்ளைநோய்த் தொற்றுக் காலம். அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஹ இயலவில்லை. அந்தக் குறை இந்த ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வால் தீர்கிறது. வருகிற சனிக்கிழமை சென்னை தி.நகரில் உள்ள பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடக்க இருக்கும் "தமிழ்மண்' இளவழகனாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் "அண்ணா அறிவுக்கொடை' தொகுப்பாசிரியர் செந்தலைந.கவுதமனும், இளவழகனாரின் மகள் முனைவர் தமிழமுது இளவழகனும் எனது நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.


----------------------------------------------------


முகலாய சாம்ராஜ்ஜியத்தின் உச்சகட்டமும், வீழ்ச்சியின் ஆரம்பமும் ஒளரங்கசீப்பின் காலம்தான். ஏறத்தாழ ஒட்டுமொத்த இந்தியாவையும் தனது ஆளுமைக்கு உட்படுத்திய முகலாயச் சக்கரவர்த்தி ஒளரங்கசீப்தான் என்று கூறலாம். கொடுங்கோலன், மதவெறியன், இந்துக்களை வெறுத்தவன், கோயில்களை இடித்தவன் என்று பலராலும் தூற்றப்படும் முகலாய அரசனும் ஒளரங்கசீப்தான்.

அதிகம் வெறுக்கப்பட்டும், தூற்றப்பட்டும், சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டும் கூட ஒளரங்கசீப்பை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியவில்லை. புதுதில்லியில் அவரது பெயரில் இருந்த சாலையின் பெயர் இப்போது "ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் சாலை' என்று மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தில்லியின் வரலாற்றை ஒளரங்கசீப்பின் காலத்தைக் குறிப்பிடாமல் எழுதிவிட முடியாது.

ஆட்ரே ட்ரஷ்கெ எழுதிய "ஒளரங்கசீப்' என்கிற ஆங்கில புத்தகத்தை அதே பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் ஜனனி ரமேஷ். மூலப் புத்தகத்தில் உள்ள பல பகுதிகள் இதில் விடுபட்டிருக்கின்றன என்றாலும், எந்தவொரு முக்கியமான நிகழ்வும், ஒளரங்கசீப் தொடர்பான பதிவுகளும் விடுபடாமல் பார்த்துக் கொண்டிருப்பது அவரது சாமர்த்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒளரங்கசீப்பின் கொடுங்கோலன் முகமும், அதே நேரத்தில் அவருக்கிருந்த இன்னொரு முகமும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1654-இல் ராஜபுத்திர மன்னர் ராணா ராஜ் சிங்குக்கு ஒளரங்கசீப் பிறப்பித்த "நிஷான்' (ஆணை) அவரை வித்தியாசமாகச் சித்தரிக்கிறது - ""மன்னர்கள் பூமியில் இறைவனின் பிரிதிநிதிகள் என்பதால் மதச் சமூகங்களுக்கு இடையே அமைதியை உறுதிப்படுத்தக் கடமைப்பட்டவர்கள்''

1659-இல் ஒளரங்கசீப் வெளியிட்ட சட்டம் - ""முகலாய சாம்ராஜ்யம் நீடித்து நிலைக்க பிராமணர்கள் பிரார்த்தனை செய்ய வசதியாக அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் தனித்து விட்டுவிட வேண்டும்''.

ஒளரங்கசீப் நல்லவரா, கெட்டவரா? இந்த சர்ச்சைக்கு முடிவே கிடையாது. ஆனால், அந்த சர்ச்சைக்குப் பல தரவுகளை இந்தப் புத்தகத்திலிருந்து பெற முடியும்.

 ----------------------------------------------------
 

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் தாமரைபாரதி என்கிற பெ.அரவிந்தன் எழுதிய "உவர் மணல் சிறுநெருஞ்சி' என்கிற கவிதைத் தொகுப்பு. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் இந்தத் திருக்கோவிலூர் கவிஞரின் இரண்டாவது தொகுப்பு இது. அதிலிருந்த "காலமயக்கம்' என்கிற கவிதை இது -

இருபதில் பார்த்தபோது
எப்படி இருந்தாயோ
அப்படித்தான்
இருக்கிறாய் நாற்பதிலும்.
இருப்பாயென்றே நம்புகிறேன்
அறுபதிலும்..
என்ன,
காலம்தான் கொஞ்சம்
கிழடு தட்டிவிட்டது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com