இந்த வாரம் கலாரசிகன் - (06-11-2022)

எங்களுக்குள் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், தமிழ் மொழி சார்ந்த பிரச்னைகளிலும், ஈழத் தமிழர் குறித்த நிலைப்பாட்டிலும் இருவரும் ஒரே கருத்துடையவர்களாக இருந்தோம்.
இந்த வாரம் கலாரசிகன் - (06-11-2022)


எங்களுக்குள் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், தமிழ் மொழி சார்ந்த பிரச்னைகளிலும், ஈழத் தமிழர் குறித்த நிலைப்பாட்டிலும் இருவரும் ஒரே கருத்துடையவர்களாக இருந்தோம். எனக்கு அவரது கொள்கை உறுதி பிடிக்கும். அவருக்கு எனது எழுத்தும், அதில் எனக்கிருந்த நேர்மையும் பிடிக்கும்.

மறைந்த தமிழறிஞர் திருச்சி க. நெடுஞ்செழியனும் நானும் நண்பர்களாக இருந்தது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். எங்களை இணைத்த பிணைப்பு திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன். என் மீது அவருக்கிருந்த தனிப்பட்ட அக்கறை குறித்துப் பலமுறை நெடுஞ்செழியன் வியப்பு தெரிவித்திருக்கிறார். உடல்நலம் குன்றி கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்ட இல்லத்தில் இருந்த பேராசிரியர் அன்பழகனைச் சந்திக்க நான் சென்றபோது, என்னுடன் இருந்தவர் நெடுஞ்செழியன் என்பதிலிருந்தே, எங்கள் பிணைப்பு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தந்தை பெரியார் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவர் என்று எத்தனையோ பொறுப்புகளைத் திறம்பட வகித்த க. நெடுஞ்செழியன் அடிப்படையில் ஒரு விவசாயியும்கூட. அவரது "விவசாயி' முகம் பலருக்கும் தெரியாது. விவசாயம் சார்ந்த எனது பல சந்தேகங்களை அவர் தீர்த்து வைத்திருக்கிறார். விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து எனக்கு செல்லிடப்பேசியில் பாடமே எடுப்பார்.

எங்கள் இருவரின் உறவுக்குப் பாலமாக இன்னும் சிலரைக்கூடக் குறிப்பிட வேண்டும். ஐயா பழ. நெடுமாறனிடம் என்னைப்போலவே அவருக்கும் இமாலய மரியாதை உண்டு. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் அவரைப் போலவே எனக்கும் அணுக்கத் தோழர். இவையெல்லாம்தான் கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும், எங்கள் இருவரையும் நட்பால் கட்டிப் போட்டிருந்தன.

திராவிடம் குறித்து, சனாதனம் குறித்து, ஹிந்துத்துவக் கொள்கைகள் குறித்து "தினமணி'யில் கட்டுரைகள் வெளிவந்தால், அதிகாலையில் பேராசிரியர் நெடுஞ்செழியனிடமிருந்து கண்டனம் எழும் என்று எனக்குத் தெரியும். அதற்கு மறுப்புத் தெரிவித்து அவரிடமிருந்து கட்டுரையும் வந்துவிடும். 

ஒரு தடவை, "எதற்காக இப்படிப்பட்ட கட்டுரைகளை தினமணி வெளியிட வேண்டும்? அதற்கு ஏன் விளம்பரம் தருகிறீர்கள்' என்று கேட்டார். "அப்படிக் கட்டுரைகள் வருவதால்தானே, அதற்கு மாற்றுக் கருத்தை நீங்கள் பதிவு செய்ய முடிகிறது...' என்கிற என் பதிலைக் கேட்டதும் சிரித்து விட்டார். இப்படித்தான் தொடர்ந்தது எங்கள் இருவருக்குமிடையேயான நட்பு...

வெளியில் தெரியாத - அவர் தெரிவித்துக் கொள்ளாத - ஒரு செய்தி உண்டு. அவரது மகன் பண்ணன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஈழப் போராட்டத்தில் வீரமரணம் எய்தினார். புறநானூற்றுத் தாய் போல, இந்தத் தந்தை அதைப் பெருமிதத்துடன் தாங்கிக் கொண்டார். 

வெள்ளியன்று நம்மிடமிருந்து விடை பெற்றார் நண்பர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன். விடிவெள்ளி மறைந்தது.

"தினமணி' நாளிதழின் இணைப்பாக வெளிவந்து கொண்டிருந்த "இளைஞர்மணி'யில், அப்போது முதன்மை உதவி ஆசிரியராக இருந்த வ.மு. முரளியின் "அக்கினிக் குஞ்சுகள்' தொடர் வெளிவரும்போதே, அந்த இணைப்பில் எதைப் படிக்கிறேனோ இல்லையோ, அந்தக் கட்டுரைகள் அச்சு வாகனம் ஏறியதும் படித்துவிடுவது என் வழக்கம். ஒன்று, இரண்டு என்று தொடங்கித் தொடர்ந்து 120 வாரங்கள், அதாவது ஏறத்தாழ இரண்டாண்டுகள் அந்தக் கட்டுரைத் தொடர் வெளியானது.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்திடமிருந்து ஒருநாள் கடிதம் ஒன்று வந்தது. "தினமணி' இணைப்பில் "அக்கினிக் குஞ்சுகள்' என்கிற தலைப்பில் வெளிவரும் இந்திய விஞ்ஞானிகளின் வரலாறு குறித்த கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று விரும்பினார் அவர். அதற்கான அனுமதி கோரித்தான் கடிதம் வந்திருந்தது. அந்தத் தொகுப்பை அருட்செல்வர் நா. மகா
லிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட விழைகிறது எனும்போது அனுமதி மறுப்பது எங்ஙனம்?

ஆரியபட்டர், வராகமிஹிரர்,  பாஸ்கரர், பிரம்மகுப்தா என்று தொடங்கிய அந்தத் தொடர், விஞ்ஞான மூதாதையருடன் முடிந்துவிடவில்லை. நோபல் விருதாளர்கள், நவீன அறிவியல் மேதைகள், இஸ்ரோ விஞ்ஞானிகள் என்று ஒருவர் விடாமல் பதிவு செய்திருப்பது, தொகுப்பாகப் படிக்கும்போது இப்போது பிரமிப்பு ஏற்படுத்துகிறது. கட்டுரைகளைப் படித்தபோது ஏற்படாத மலைப்பு மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் தொகுப்புகளைப் படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

கட்டுரை எழுதும்போது முதன்மை உதவி ஆசிரியராக இருந்த வ.மு. முரளி, இந்தத் தொகுப்பு வெளிவரும்போது தருமபுரி பதிப்பின் துணை செய்தியாசிரியராகி விட்டார். பாமரருக்கும் புரியும் விதத்தில், தமிழ்வழிக் கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள் விரும்பிப் படிக்கும் பாணியில் கட்டுரைகளை எழுதி இருப்பதுதான் அவரது எழுத்தின் சிறப்பு.

என்னுள் ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது. "அக்கினிக் குஞ்சுகள்' நூல் வடிவம் பெற அனுமதி கேட்டுக் கடிதம் எழுதிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும், இளவல் வ.மு. முரளியும் என்னிடம் பலமுறை கேட்டும்கூட அதற்கு அணிந்துரை எழுதிக் கொடுக்காமல் போனது தவறு என்பதைப் புத்தகங்களைப் பார்த்தபோது உணர்ந்தேன். தவறுதான், ஒப்புக்கொள்கிறேன். "அன்றாட எழுத்துப் பணி' என்று சமாதானம் கூறித் தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை.

கவிதை ஒன்று கண்ணில் பட்டது. யார் எழுதியது என்று பார்த்தேன் - கவிஞர் இளவேனில். நான் ரசித்ததை உங்களுடன் பகிர்கிறேன் - 

குருவி விட்டுச் சென்ற
எச்சத்தின் வேர்களில் 
சுவாசத்தை
இறுகப் பற்றியபடி
பூமியைப் பிளந்து
வெளிவரத் துடிக்கிறது
ஒரு பெருங்காடு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com