புதுக்குருதி பாய்ச்சிய புரட்சிக்கவி!

தமிழை உயிர் என்று சொன்ன முதல் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான். இயற்கையின் பிறப்பே தமிழ் என்பதால் "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றார் போலும்.
புதுக்குருதி பாய்ச்சிய புரட்சிக்கவி!

தமிழை உயிர் என்று சொன்ன முதல் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான். இயற்கையின் பிறப்பே தமிழ் என்பதால் "இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றார் போலும்.
விரிந்த வானே, வெளியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே
திரிந்த காற்றும் புனலும் - மண்ணும்
செந்தீ யாவும் தந்தோய்
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!
புவியும் - வானும் அடங்கியவற்றுள் திகழும் அனைத்தும் புத்தெழுச்சி தரும் புதுமை அதுவே. அதையே பொலிவுறு இயற்கை என்கிறார் பாவேந்தர்.
மேலும், அசைவும், ஒலியும், அலையும், இசையும், நசையும், நிலமும், உயிரும், கலையும், பொருள்களோடு பைந்தமிழும் இயற்கைதாமே. இயற்கையோடுதான் தன் கவியுலகின் வாழ்வை வளமாக வாழ்ந்திருக்கிறார் பாவேந்தர்.
வானம்பாடி பறப்பதனைக் காண்கிறார்,
வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிக இனிமை தந்ததுவோ?
எனத் தொடங்கி விரிக்கிறார்.
இன்பம் எங்கே? இதோ இங்கே!
காற்றிலெல்லாம் இன்பம் - அந்தக்
கடல்முரசில் இன்பம்
ஆற்றுவெள்ளம் ஊற்றுப் புனல்
அசைவிலெல்லாம் இன்பம்
நாற்றிசையும் இன்பம் இதோ
நல்ல நிலாத் தோட்டம்....
இங்கெல்லாம்தான் நல்லின்பம் கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு நொடியும் அசையும் காற்றை, எழுப்பும் ஓசையை, மலரும் மலர்களை, தாவும் மான்களை, கத்தும் புள்ளினங்களை, இடிக்கும் ஓசையை, ஒளிரும் மின்னலை, பாயும் நீரை, சலசலக்கும் அருவியை, வீசும் தென்றலை, காயும் கதிரை, குளிரும் நிலவை, ஏன், வண்டினத்தின் ரீங்காரத்தையும் நுகர்ந்தார் பாவேந்தர். செந்தமிழ்க் கவிக் கனிகளைப் புசித்தனர் பாரோர்.
கதிரவன் வெங்கதிரோனாக விரையும் பொழுதில் "கானல்' நீர்க் காட்சியை நாம் காண்பதுண்டு. இக்காலங்
களில் நில வறட்சியும், நீர் வற்றலும் இயல்பாகும். நிலம் நீரின்றிக் காய்ந்தால் ஏற்படும் மாற்றமே பாலை ஆகும். பாலை நிலத்தின் கொடுமை எங்ஙனம் இருக்கும் என்பதை கானல் விளைவாக எடுத்தியம்புகிறார்.
குன்றின்மேல் நிற்கிறார் கவிஞர்...
குன்றின் மீது நின்று கண்டேன்,
கோலமே! என்ன கோலமே!
பொன் ததும்பும் அந்தி வானம்
மாலை நேரம், சாயுங்காலம் வானம் பொன் நிறத்தால் தீட்டிய ஓவியம் போலத் தன் உள்ளத்தைக் கவர்ந்த காரணத்தால் கவிஞர் தான் உணர்ந்த நிலையைத் தன் வசந்த வரிகளால் வசப்படுத்தி அக்காட்சியைக் கற்போர் மனத்தை மயங்கச் செய்யும் வண்ணம் கவி வரையும் அருந்தமிழ் ஆற்றலை இயற்கையாகவே பாவேந்தர் பெற்றுவிளங்குவதை நாம் அறியலாம்.
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்...
இயற்கையின் தோற்றமே தமிழ் - அத்தோற்றத்தின் விளைவே உலக மொழிகளின் பிறப்பு என்பதை, உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வழங்கும் மொழிகளில் பல சொற்களுக்கான வேர்ச்சொல் தமிழில் இருப்பதாக மொழிஞாயிறு பாவாணர் குறிப்பதிலிருந்து புரட்சிக் கவிஞரின் கவிதைக்கு நாம் பொருளுணரலாம்.
ஒரே தன்மையுடைய கதிரவனை இரண்டு இடங்களில் இரண்டு விதமாகக் கவிஞர் கவிப்படுத்துகிறார். குடும்ப விளக்கில் கதிரவன் கீழ்த்திசையில் தோன்றும்போதே இல்லத் தலைவி கூந்தல் முடித்து, முகம் கழுவி, முற்றத்திற்கு நீர் தெளித்து அழகான கோலமிட அவ்வேளை உதித்த பகலவன் தலைவியைப் பாராட்டும் நோக்கில் பொன் போன்ற ஒளியைப் பரிசாகக் கொடுத்தாராம்.
அரிசிமாக் கோலம் அமைத்தனள் அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி
(குடும்ப விளக்கு, 14-15)
இன்னொரு இடத்தில் பரிதியின் நடுக்கம் கூறுகிறார். இருண்ட வீடு எனும் நூலில் தலைவி கதிரவன் நடு உச்சிக்கு வந்தபோது முகம்கூட கழுவாமல், கூந்தல் விரித்து சிலிர்த்த முடி முள்ளம்பன்றி போல் இருக்க அவள் தலை நிமிர்ந்ததும் பகலவன் அவள் தோற்றம் கண்டு கண்கள் நடுங்கினான் என்கிறார்.
கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள்
காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின
(இருண்ட வீடு, 23-24)
இங்கு, பாவேந்தர் காட்டுவது நம் அன்றாட பணிக்கான ஓர் ஒழுங்கமைப்பு. சீரான கட்டமைப்பு. எத்தனை மணிக்கு வேண்டுமென்றாலும் எழலாம். எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் உறங்கலாம் என்ற ஒழுங்கற்ற முறையை கடைப்பிடிக்கும் இன்றைய இளையோர் மனம் மாற இவ்வடிகள் உதவும்.
"புறா' என்னும் பறவையின் காதலியல்பு பழந்தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுகிறது.
அன்பு கொள் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
மென் சிறகா லாற்றும் புறவு
(கலித்தொகை -11)
வெம்மையில் இருந்து தன் அன்புப் பெடையைக் காத்த ஆண் புறாவின் அன்பு இதில் பேசப்படுகிறது. புறாக்களில் பல வகை உண்டு. அவை அறிவு மிக்கவை. பல கல் தொலைவில் இருந்து கூட தம் இடத்துக்கு வந்து சேரும். ஒரு ஆண் புறா ஒரு பெண் புறாவுடன் மட்டுமே கூடி வாழும்.
தலை தாழ்த்திக் குடுகு டென்று
தன்னைச் சுற்றும் ஆண்புறாவைக்
கொலை பாய்ச்சும் கண்ணால் பெண்ணோ
குறுக்கிற் சென்றே திரும்பித்
தலைகாட்டித் தரையைக் காட்டி
இங்குவா - என அழைக்கும்
மலை காட்டி அழைத்தாலுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்?
பறவையியல் அறிவுடையோர், பறவை வளர்ப்போர் அறியும் நுண்ணிய செய்தியைக் கூட கூற இவரால் எப்படி முடிந்தது. காதல் கொண்ட ஆண் புறா தான் விரும்பிய பெண் புறாவைச் சுற்றி வரும். முதலில் இதை எதிர்ப்பது போல் பெண் புறா கண்களால் எச்சரிக்குமாம். பின் அதன் மேல் ஆசை கொண்டு தலையைத் தாழ்த்தி அழைக்குமாம். இக்காட்சிகள் பற்றிய வரிகள் படிக்கும்போது நம்மையும் அதன் அகவாழ்க்கைக்குள் அழைத்துச்
செல்கிறார்.
கனியிடை ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் - எனினும் தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்
பாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கையை முன் வைத்து இன்பத் தமிழை முன்னிறுத்தும் பாங்கு அளவிடற்
கரியது.
பலாச் சுளை, கரும்புச் சாறு, மலரில் உறையும் தேன், நன்கு காய்ச்சிய பாலின் சுவை, தென்னையின் குளிர்ந்த இளநீர் எனச் சுவையான இயற்கையான பொருள்களைக் கூறி இவை எல்லாவற்றையும் விட எம்மொழி தமிழ்மொழி இனிமையானது என்கிறார்.
பாரதிதாசன் தமிழுக்குப் புதுக்குருதி பாய்ச்சிய புரட்சிக் கவிஞன். சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கையில் விளைந்த தமிழ்த் தேறலைப் பருக வைத்த இயற்கை தமிழ் ஏந்தல் பாவேந்தர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு மூலமாக இருந்த பாவேந்தர் பாரதிதாசனைப் போற்றுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com