ஒரு நாட்டை ஆளுகின்ற அரசன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருக்க வேண்டும், எப்படிப்பட்ட குணங்களை விலக்க வேண்டும் என்பதையும், மக்களை அரசன் எவ்விதம் பாதுகாக்க வேண்டும் என்பதையும் சான்றோர் பெருமக்கள் கூறிச் சென்றுள்ளனர்.
அவ்வகையில் அரசன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலுக்கு, புலவர் நரிவெரூஉத்தலையார் அறிவுறுத்துவதாகப் புறநானூற்றுப் பாடலொன்று அமைந்துள்ளது.
எருமை அன்ன கருங்கல் இடை தோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே (புறம். 5)
எருமை போன்ற கருமை நிறத்தையுடைய பெரிய பாறைகள் இருக்கக்கூடிய இடமெல்லாம் பசுக்கூட்டங்கள் போன்ற யானைக்கூட்டங்கள் திரிகின்ற காட்டிற்குரிய சேர மன்னனே. நீ வீரத்திலும் செல்வத்திலும் ஒப்பற்றவனாக இருக்கிறாய். ஆதலால் உன்னிடம் ஒன்று சொல்கிறேன். அருளும் அன்பும் அல்லாமல், நீங்காத நரகத்திற்குச் செல்லத்தக்க பாவமான செயல்களைச் செய்வோர் பலருண்டு. அப்படிப்பட்டவர்களுடன் நீ சேராதே. ஒரு வேளை சேர்ந்து விட்டால் நீயும் கெடுவாய்; உனது ஆட்சியும் கெடும். உன்னுடைய நாட்டையும் மக்களையும் குழந்தையைப் பாதுகாக்கும் தாய் போலக் கருத்துடன் பாதுகாக்க வேண்டும். இதுதான் நீ மனமிரங்கிச் செய்யவேண்டிய ஆட்சிமுறை. இது செய்வதற்கு அரிய செயலாகும். எனப் பாடியுள்ளார் புலவர்.
புலவர் அரசனுக்குக்குக் கூறிய அறிவுரையானது, ஆட்சியாளர்கள் எல்லாக் காலத்திலும் சரியானவர்களாக நடந்துகொள்ள வழிகாட்டுகிறது. அரசனே ஆனாலும் துணிந்து பேசுகின்ற திறம் இருந்த நிலை தமிழுக்கும் புலமைக்கும் கிடைத்த அடையாளம் எனக் கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.