சிலம்பு நினைவுறுத்தும் சங்கப்பாடல்கள்! 

சிலம்பின் பாடல்கள், ஆசிரியப்பா, கலிப்பா எனவும், உரை நடை  எனவும் அமைந்திருப்பினும்,  அணிக்கு அணி சேர்ப்பது போல 15 வெண்பாக்களும் அமைந்துள்ளன.  
சிலம்பு நினைவுறுத்தும் சங்கப்பாடல்கள்! 

சிலம்பின் பாடல்கள், ஆசிரியப்பா, கலிப்பா எனவும், உரை நடை  எனவும் அமைந்திருப்பினும்,  அணிக்கு அணி சேர்ப்பது போல 15 வெண்பாக்களும் அமைந்துள்ளன.  

அவற்றுள், அந்திமாலை சிறப்பு செய்த காதையின் நிறைவுப் பகுதியாக வரும் ஒரு வெண்பாவைப் பார்ப்போம்.
கூடினார் பால் நிழலாய் கூடார்பால் 
                                                                       வெய்யதாய்க்
காவலன் வெண்குடை போற்காட்டிற்றே 
                                                                                    - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர்மதி விரிந்து
போதவிழ்க்கும்  கங்குற்பொழுது.

கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் கோவலன் சென்றடைந்த பின்னர், மாலைப் பொழுது இவ்விருவரிடத்திலும் ஏற்படுத்திய தாக்கத்தை  இந்த வெண்பா சுட்டிக்காட்டுகிறது.

நட்பாகி சேர்ந்தவர்க்கு நிழலாகவும் பகையாகி சேராதவர்க்கு வெய்யதாகவும் விளங்கும் சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை போல திகழ்ந்தது திங்கள்.
அத்திங்கள் தனது கதிர்களை விரித்து மலர்களை நிறைய மலரச் செய்யும் இரவுப்பொழுதில் கோவலனை கூடிய மாதவிக்கு இன்பத்தையும் , அவனைப்  பிரிந்த கண்ணகிக்குத் துன்பத்தையும் அளித்தது.  

இவ்வெண்பாவின் முதல் இரண்டு அடிகள் புறநானூற்றுப் பாடல் ஒன்றினை  நினைவுபடுத்தும் . 
ஒளவையார், மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியைக்  காண வருகிறார்; வரும் வழியில் ஒரு காட்சி அவரை ஈர்க்கிறது. அரசனின் பட்டத்து யானையை சிறுவர்கள் சிலர் நீர்த்துறையில் குளிப்பாட்டி கொண்டிருக்கின்றனர். 
அவர்கள், ஆற்று நீரினை  பட்டத்து யானை மீது வாரி இறைக்கிறார்கள், தங்கப்பூண் அணிந்த நீண்ட தந்தங்களை தேய்த்துக் கழுவுகின்றனர்; யானையும், தனது தும்பிக்கையால் நீரை உறிஞ்சி சிறுவர் மீது பீய்ச்சியடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. 
இந்த விநோதக் காட்சியைக் கண்டு அதிசயித்த ஒளவை, மன்னனைக் கண்டதும்  இக்காட்சியை மையப்படுத்தி அரசனை வாழ்த்துகிறார் .  
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் 
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல 
இனியை பெரும! எமக்கே; மற்று அதன் 
துன்அருங் கடாஅம் போல 
இன்னாய், பெருமநின் ஒன்னா தோர்க்கே.
                                                                  (புறநானூறு. 94) 
ஊரில் உள்ள சிறுவர்கள் வெண்ணிற தந்தத்தை கழுவுவதற்கும் யானையை குளிப்பாட்டுவதற்கும் நீர் நிலையில் படியும் யானை போல நீ எங்களுக்கு இனிமையானவன்;  ஆனால் அந்த யானை மதம் கொண்ட நிலையைப் போல நீ உன் பகைவர்க்கு கொடுமையானவன்.

அதே வெண்பாவின் இறுதி வரி குறுந்தொகைப் பாடல் ஒன்றினை நமக்கு நினைவுபடுத்துவதாகும் .

பொருள் சேர்க்கப் புறப்பட்டுச் சென்ற தலைவனின் நினைவு,  தலைவியைப் பொழுதெல்லாம் வாட்டினாலும், உயிரைப் பிடித்துக் கொண்டு, தலைவி பகற்பொழுது என்னும் அகன்ற ஆற்றைக் கடந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறாள்; ஆயினும் என் சொல்ல, அவன் நினைவு இரவில் இன்னும் அதிகமாகத் துன்புறுத்துமே? கடல் போன்ற அந்த இரவினை எவ்வாறு கடப்பேனோ? பொழுதைக் கழிப்பேனோ என்று வாடிப் பாடுகிறாள். 

எல்லை கழிய முல்லை மலர
கதிர்சினம் தணிந்த கையறு மாலை 
உயிர்வரம்பாக நீந்தினம்  ஆயின்எவன் கொல் ?
வாழி தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே. (குறு. 387) 

தோழி நீ வாழி! சூரியன் மறைய முல்லை மலருமாறு சூரியக் கதிர்கள் வெப்பம் தணிந்து மாலைப்பொழுது வந்தபோது நாம் செயலற்று இருக்கிறோம். இந்த எல்லையைக் கடந்த பின்பு இரவு ஆகிய கடல் போன்ற மிகுதி காலத்தை எவ்வாறு கடப்போம் என தெரியவில்லை.

இவ்வாறு, ஒரு வெண்பா, இரண்டு சங்கப்பாடல்களை, குறிப்பாக,  புறம் - அகம் என இரு வகைப்  பாடல்களை ஒருசேர நினைவுபடுத்துவது, சிலம்பில் அமைந்த இந்த வெண்பாவின்  சிறப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com