பகை முடிக்கும் பாசறைகள்!

பாசறை காலத்தில் ஆண்மை மேலோங்கிய போர்த்தொழில் வினைஞராகப் படை வீரர்கள் விளங்கியதை சங்க இலக்கியம் எடுத்துரைக்கிறது.
பகை முடிக்கும் பாசறைகள்!


பாசறை காலத்தில் ஆண்மை மேலோங்கிய போர்த்தொழில் வினைஞராகப் படை வீரர்கள் விளங்கியதை சங்க இலக்கியம் எடுத்துரைக்கிறது. அரசனின் வெற்றியைத் தம் வெற்றியாக உணர்ந்து யான் வேந்தன் நெறியைப் பூண்பவன், வாகை சூடுபவன், நாட்டின் பெருமிதச் செயன்மைக்கு அர்ப்பணிப்பவன் என்ற இயல்பான குணநலன்கள் தொல் தமிழ்ப் பாசறை மறவர்களிடத்தில் சிறந்தோங்கியது.  
பாசறை என்பதன் பொருள்கோடலில் மொழிஞாயிறு தேநேயப் பாவாணர் பகை மேற்சென்ற படை தங்குமிடம் என்று உரைக்கிறார். திவாகர நிகண்டில் துன்பம் என்றும், பசிய இலைகளால் வேயப்பட்ட சிறுவீடு என்றும் பாடிவீடு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. 
பருந்து பறக்கல்லாப் பார்வற் பாசறை என்கிறது மதுரைக்காஞ்சி.
பாசறை அமைவிடத்தில் உயர்ந்த பருந்துகள் கூட வானில்  பறக்காது. காரணம், புலர்பொழுதிலும் மறைபொழுதிலும் அங்கு எழும் முரசொலியே ஆகும். 
மரங்களை வேரோடு வீழ்த்தக் கூடிய வலிமை படைத்த யானையை மழ களிறு என்பர்.  அது பிளிறும் ஒலி, வீரர்கள் தங்கள் பகையை வெட்டி வீழ்த்துவதற்கான ஆற்றலைத் தரும் என்கிறது 
பதிற்றுப்பத்து.  
அவ்வாறான மழக்களிறுகள் மந்தையாய் விளங்கும் பாசறைகளிடையே அம்புகள் உறையும் அம்பறாத்  தூணியைப் போல் பாசறையில் வீரர்கள் நெறி கொண்டிருப்பார்கள்.  மேலும் பாசறையில் பகைப்புலம் விளங்கி கொண்டேயிருக்கும் என்கிறது சிலம்பு.
பகைப்புலம் புக்குப் பாசறையிருந்த 
(சிலம்பு 26-180)
பகைவனை வென்று வேட்கை கொள்ளும் அரசர் பகைவனின் ஆளுகைக்குட்பட்ட இடத்திலேயே பாசறை அமைப்பர். எதிரி நாட்டின் மண்ணிலிருந்தே அவனை எதிர் கொள்ளும் பேராற்றலை, திறனை மன்னர்கள் 
பெற்றிருந்தனர். 
ஓடாப் பூட்கை வேந்தன்  பாசறை (அகம் 1008)
கேட்டியோ பூட்கை வேந்தன் பாசறை 
                                                                           (புறம் 289-8)
பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே 
                                                                               (பரி 19-35) 
மிகச்சிறந்த பரிகளின் படையைக் கொண்ட மூவேந்தருள் முத்தமிழுக்கு முதன்மையானவர் வேந்தர் பாண்டியர் ஆவார். ஆல்கெழு கடவுள் புதல்வர், அறுவர் பயந்த ஆறமர் செல்வர், ஆன்றோர் சொல்மலை, தமிழ்க்
கடவுள் குடியிருக்கும் குன்றின் கீழ் நிலப்பரப்பு பாண்டியரின் பாசறை போல விளங்குகிறது என்கிறது பரிபாடல்.  
பாசறைகள் பெரும்பாலும் காவல் ஏந்துகள் உள்ள இடமாக அமையும். அவ்வாறு அமையும் இடத்தில் வீரர்கள் ஓலைகளாலும், மூங்கில்களாலும் பாசறைகளை அமைத்தனர். இவ்வாறு அமைக்கப்படும் பாசறைகள், இயல்பாகவே நீரரண், காடு, மலையரண்கள் உள்ளதாகவும் பாசறையைச் சுற்றி முள்வேலியும், வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் இரவு, பகலாகத் தொடர்ந்து காவல் காப்பதனால், ஒற்றர்கள் புகாதபடியும் அமையும். அப்பகுதிகள் பிற்காலத்தில் பாடி, காட்டூர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டன.    
பொதுவாகக் கூதிர்காலமும் வேனிற்காலமும் போர் செய்தற்கேலாக் காலமெனக் கொண்டாராதலின் இக்காலத்தே மன்னரும் படைமறவரும் பாசறைக்கண் இருத்தல் மரபாகக் கொள்ளப்பட்டது. இப்பாசறையை கூதிர்ப்பாசறை, வேனிற் பாசறை என இருவகையாகப் 
பிரிக்கலாம். 
அருந்தொழில் புரிவோர், அரசன் ஆனைக்கிணங்க போர்த்தொழில் புரிய புறப்பட்டபொழுது துயரத்தை ஒழித்து வெற்றி ஒன்றே நம் மன்னனின் நினைவு என்பதால் "எம் நினைவு உங்கள் உள்ளத்தை வாட்டாமல் இருக்க என் வாழ்த்தை நீங்கள் ஏற்றல் வேண்டும்' என மறத்தமிழச்சி தன் மணாளனை வேண்டுகிறாள்.  
இந்த அன்புடையாளின் அகவாழ்த்தை எண்ணி புற வாழ்க்கையின் புகுந்த வீடான பாடி வீட்டின் ஓர் அங்கமான பாசறையில் மறவன் நினைந்து நிமிருவான்.  இதைப் பாசறைப் புலம்பலாகக் கருதாமல் இல்லாளின் இன்பச்சொற்களால் செவிமடுத்த வீரன் அருந்தெழில் நெறியில் புறப்படுகையில் அவன் மனதில் அஃது உளச்
செறிவை எற்படுத்தினாலும் அக்கணப்பொழுதின் பிரிவின் தாக்கத்தை உணர்த்தினாலும் பாசறைவாசத்தின்போது இயற்கையின் ஊடே அவன் 
தன்னைக் காலத்தோடு ஆட்படுத்திக் கொள்ளும் சூழலை மறவர்களின் பாசறை பெற்றிருக்கும் .  
பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் 
தணியின் என்பது ஐங்குறுநூறு (442.1) பாசறை மறவன் "எமது அரசன் கடுஞ்சினம் கொண்டு போர்த் தொழில் புரிவதற்கான காலம் தணிந்து விட்டதால் தனித்திருக்கும் என் இல்லவளை, என்னை ஏற்றவளை, அருந்ததியாளை விரைந்து காண்பேன்' என்கிறான்.    
போர்ச் சிந்தனையைத் தம் வாழ்வியல் கூறாகக் கொண்டு விளங்கும் தமிழர் தம் அருந்தொழில் வேட்கையான புறப்பக்கத்தில் அகநோக்கு இழைந்தாலும் புறத்திலும் அகம் முன்னிலையில் விஞ்சியிருப்பது புறமே என்பது 
முடிவாகிறது.
  இவ்வாறான போர் ஒழிந்துவிடின், இதோ நான் வருவேன் என்கிறான் மறவன்.  எவ்வாறு என்றால்...... 
நனிசேய்த்தென்னாது, நற்றேர் ஏறிச் சென்று
 இலங்கு நிலவின் இளம்பிறை போல
காண்குவெம் தில்லவள் கவின்பெறுசுடர்நுதல்  
(ஐங்கு. 433)
"வேந்தன் அருந்தொழில் முடித்தார் எனும் அகம் மகிழ்ந்த பொழுது என் மனமானது மிகச் சிறந்த தேர்க்காலுடன் வடிவமைக்கப்பட்ட நல்ல தேரில் ஏறி விரைந்து வரும்.  நிலவின் கவினுரு காட்சியாம் மூன்றாம் பிறையான இளம்பிறை போல் விளங்குகிற ஒளிரும் சுடர் போல் விளங்கும் உன் நெற்றியைக் காண்பேன் மனம் மகிழ்வேன்' என்கிறான் மறவன்.
பாசறையில் நோக்கம், பகையொழிப்பும் பெருவெற்றியுமே. ஆண்மையாளர்கள் கொண்ட பாசறைக்கு, தமிழ் மன்னர்கள் அகம் - புறம் சார்ந்த காவலர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதை நம் இலக்கியங்கள் எடுத்துமொழிவதை நெஞ்சில் நிறுத்துவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com