இந்த வாரம் கலாரசிகன் - (17-12-2023)

அகவை 90 எட்டிய பாரதியியல் ஆய்வாளர் பெரியவர் சீனி. விசுவநாதனுக்கு, எனது நண்பர் மெய். ரூஸ்வெல்ட், இந்திய - ரஷிய ஊடகக் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த வாரம் கலாரசிகன் - (17-12-2023)


அகவை 90 எட்டிய பாரதியியல் ஆய்வாளர் பெரியவர் சீனி. விசுவநாதனுக்கு, எனது நண்பர் மெய். ரூஸ்வெல்ட், இந்திய - ரஷிய ஊடகக் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பாராட்டு விழாவில், சீனி. விசுவநாதனின் அடியொற்றி பாரதியாரின் படைப்புகளைத் தேடிப்பிடிக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத் தலைவர் முனைவர் ய. மணிகண்டனும் என்னுடன் கலந்துகொண்டார்.

முனைவர் ய. மணிகண்டன் உரையாற்றும்போது தெரிவித்த செய்தி ஒன்று என்னை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்ல, நெகிழவும் செய்துவிட்டது. நாம் திட்டமிடாமலேயே காலம் தனது திட்டமிடலைச் செவ்வனே நிறைவேற்றுகிறது என்பதைத்தான் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், 1919-ஆம் ஆண்டில், பாரதியார் சில நாள்கள் தென்காசியில் தனது நண்பர் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீட்டில் தங்கியிருந்தார். அவரது இளைய சகோதரர்தான் 'தினமணி' நாளிதழின் முதல் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம். அப்போது, டி.எஸ். சொக்கலிங்கம் தென்காசியில் 'ஸ்டார் கம்பெனி' என்றொரு கடையை நடத்தி வந்தார்.

தனது நண்பரின் தம்பி நடத்தும் கடை என்பதாலும், சொக்கலிங்கம் எழுத்தார்வம் மிக்க இளைஞர் என்பதாலும் ஒருநாள் அவரது கடைக்கு வந்தார் பாரதியார். பேசிக் கொண்டிருக்கும்போது, 'தம்பி எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்' என்று கேட்டிருக்கிறார் (1919-இல் ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 16 ரூபாய்!).

'எதற்காக அவ்வளவு பெரிய தொகை' என்று டி.எஸ். சொக்கலிங்கம் கேட்டபோது, 'உனக்குத் தெரியாது தம்பி... உலகத்திலேயே அமெரிக்காவில்தான் சிறந்த முறையில் அச்சிடுகிறார்கள். எனது கவிதைகளை அச்சிட்டுப் புத்தகமாகப்போட வேண்டும். 50 ஆயிரம் ரூபாய் அச்சுக்கூலி. 50 ஆயிரம் ரூபாய் அந்தக் கவிதைகளுக்குச் சித்திரம் போட... அப்படி ரூ. 1 லட்சம் தேவைப்படுகிறது...' என்றாராம் சுப்பிரமணிய பாரதி.

பாரதியார் கேட்ட அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கும் வசதி டி.எஸ். சொக்கலிங்கத்துக்கு அப்போது இருக்கவில்லை. காலம் உருண்டது. டி.எஸ். சொக்கலிங்கம் இதழியலாளரானார் என்பதுடன், 'தினமணி' நாளிதழின் முதல் ஆசிரியராகவும் இருந்து, தமிழ் இதழியல் வரலாற்றில் இடம் பிடித்தார்.

'அன்று மகாகவி பாரதியார் கேட்டபோது அவருக்குக் கொடுக்க டி.எஸ். சொக்கலிங்கத்திடம் ஒரு லட்ச ரூபாய் இருக்கவில்லை. இப்போது நூறு ஆண்டுகள் கடந்து வைத்தியநாதன் 'தினமணி' ஆசிரியர் பொறுப்பேற்று, ஆண்டுதோறும் பாரதியின் படைப்புகளைத் தேடிப்பிடித்து உலகம் அறியச் செய்யும் பாரதியியல் ஆய்வாளர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கி மகாகவி பாரதியார் விருதும் தந்து கெளரவிக்கிறார்...' என்று முனைவர் ய. மணிகண்டன் சொன்னபோது, ஒரு நொடி என் மெய் சிலிர்த்தது. 'தினமணி' வழங்கும் மகாகவி பாரதியார் விருதுக்கு இப்படியும்கூட ஒரு காரணம் இருக்கும் என்பதை நிச்சயமாக நான் நினைத்துப் பார்க்கவில்லை.

பாரதியாரின் கனவு நிறைவேறுகிறதா, தனது ஆசையை அவர் நிறைவேற்றிக் கொள்கிறாரா, இல்லை எங்கள் முதல் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம்தான் இந்த அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறாரா தெரியவில்லை... அவர்களது கனவு நிறைவேற நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் என்பதினும் பெரும்பேறு என்னவாக இருந்துவிட முடியும்?

-----------------------------------------------------


'தினமணி' நடுப்பக்கக் கட்டுரையாளர்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருபவர் இன்சுவை. சமூகக் கண்ணோட்டத்துடனும், ஆழ்ந்த தேசப்பற்றுடனும், வருங்கால சமுதாயத்தின் மீதான அக்கறையுடனும் எழுதப்படும் அவரது கட்டுரைகளின் வாசகர்களில் நானும்கூட ஒருவன். சிலருடைய கட்டுரைகளை நான் படித்துப் பார்ப்பதில்லை. படித்துவிட்டால், அச்சு வாகனம் ஏறி 'தினமணி' நாளிதழைப் படிக்கும்போது சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதுதான் அதற்குக் காரணம்.

'ஒரு கட்டுரையின் உயிர்நாடி எடுத்தாளப்படும் கருத்தில் மட்டுமல்ல, அதைப் பதிவு செய்வதிலும்தான் உள்ளது. எண்ணங்கள் சிதறாமலும், கருத்துகள் நீர்த்துப் போகாமலும் எழுதும்போதுதான் கட்டுரை பேசப்படுகிறது. நான் என் அனுபவங்களை என் எழுத்தில் பகிர்கிறேன். இந்த சமூகம் மாறுமா என்று ஏங்குகிறேன்' என்று தனது முன்னுரையில் எழுதும் இன்சுவை, 'எனக்கு பல அடையாளங்கள் இருந்தாலும் 'தினமணி' நாளேட்டின் நடுப்பக்கக் கட்டுரையாளர் என்று அடையாளம் காணப்படுவதுதான் சிறப்பு' என்று 'அன்பை விதைக்கும் அன்னையர்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

'தினமணி' நடுப்பக்கத்தில் வெளியான 31 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 'பொதுச் சொத்து திருடுவதற்கல்ல!', 'சாலைகள் மாடுகளுக்கு அல்ல!', 'தேர்தல் என்பது திருவிழா அல்ல!' உள்ளிட்ட கட்டுரைகளுக்கு வந்த வாசகர் கடிதங்கள் ஏராளம். தனித்தனியாகப் படிக்கும் சுகம் வேறு. தொகுப்பில் படிக்கும் போது கிடைக்கும் சுகம் வேறு. நேர்த்தியான தொகுப்பு மட்டுமல்ல, தேவையான பதிவுகள் அடங்கிய தொகுப்பும்கூட!

-----------------------------------------------------


விமர்சனத்திற்கு வந்திருந்தது கவிஞர் தபசி எழுதிய 'ஜான் கீட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை' என்கிற கவிதைத் தொகுப்பு. திருச்சிவாசியான இந்தக் கவிஞர் மத்திய சரக்கு, சேவை வரித்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றுபவர். அந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தது 'இது என்ன திறந்த வீடா?' என்கிற தலைப்பிலான இந்தக் கவிதை - 
பாராளுமன்றத்தை
பிரதமர் திறக்க வேண்டுமா
குடியரசு தலைவர்
திறக்க வேண்டுமா
என்றொரு சர்ச்சை 
ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கதில் அக்கறையில்லை.
யாருக்கு அது மூடியிருக்க வேண்டும் 
என்று கேளுங்கள் சொல்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com