மதியணி புனிதன் நன்னாள்

சைவத்திருமுறைகள் பன்னிரண்டையும் நமக்கு வழங்கிய அருளாளர்கள் இருபத்தேழுபேர். அதைப்போலவே, இருபத்தேழாக நட்சத்திரங்களும்  அமைந்திருப்பது அரிய ஒற்றுமை.
மதியணி புனிதன் நன்னாள்

சைவத்திருமுறைகள் பன்னிரண்டையும் நமக்கு வழங்கிய அருளாளர்கள் இருபத்தேழுபேர். அதைப்போலவே, இருபத்தேழாக நட்சத்திரங்களும் அமைந்திருப்பது அரிய ஒற்றுமை. அவற்றுள் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே "திரு' என்னும் அடைமொழியை முன்னதாகப் பெற்றுச் சிறப்புடன் விளங்குகின்றன. ஒன்று திருவாதிரை; மற்றொன்று திருவோணம்.

திருவாதிரை சிவபெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் திருவோணம் திருமாலுக்குரிய நட்சத்திரமாகவும், விளங்குவதாலேயே "திரு' என்னும் அடைமொழிப் பெற்றுச் சிறப்புப் பெற்றுள்ளன என்று கூறலாம். சிவபெருமானைப் பாடியருளிய நாவுக்கரசரும் "ஆதிரைநாள் உகந்தான்' என்றும், "ஆதிரை நன்னாளன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். திருவாதிரையைப் பற்றிக் கூறிய சேக்கிழாரும் "மதியணி புனிதன் நன்னாள்' என்று சிறப்பித்துள்ளார். 
போர்க்களத்தில் உறவினர்களைக் கொல்லவேண்டுமே என்று அஞ்சிய அர்ச்சுனனுக்கு, கண்ணபிரான் பகவத்கீதையை உபதேசித்தபோது, "மாதங்களில் மார்கழியாகவும், நாள்களில் திருவாதிரையாகவும் நான் விளங்குகின்றேன்' என்கிறார்.
தமது மூன்றாவது வயதிலேயே ஞானப்பாலை உண்டு தேவாரம் பாடியவர் திருஞானசம்பந்தர் எனப்படும் ஆளுடைப்பிள்ளை. இவர் ஞானக்குழந்தையாக பகவதியார் வயிற்றிலிருந்து திருவவதாரம் செய்ததும், திருவாதிரைத் திருநாளிலேயே என்பதை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய 
                                                                             உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய 
                                                                      நல்லோரை எழத்   
திருக் கிளரும் ஆதிரை நாள் திசை 
                                                               விளங்கப் பர சமயத்
தருக்கு ஒழியச் சைவம் முதல் வைதிகமும் 
                                                                           தழைத்து ஓங்க
சேக்கிழார் பெரியபுராணத்தை அநபாயச் சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்றுச் சிதம்பரத்திற்குச் சென்று "உலகெலாம்' என்று நடராசப் பெருமானே அடியெடுத்து அசரீரியாக உணர்த்த, சித்திரை மாதத்தில் திருவாதிரையில் பாடத்தொடங்கி, அடுத்த ஆண்டுச் சித்திரை மாதத் திருவாதிரையில் அரங்கேற்றியதாக உமாபதி சிவாச்சாரியார் தமது சேக்கிழார் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வைணவ ஆன்றோர்களுள் மிகவும் சிறந்தவராகப் போற்றப்படும் "இராமாநுஜர்' அவதரித்த நாளும் திருவாதிரைத் திருநாளேயாகும்.

சூரியன் ஒரு தடவை உதித்து மறைந்து, மறுநாள் காலையில் தோன்றுவது வரையில் மக்களாகிய நமக்கு ஒருநாளாகும். அவ்வாறே மகரசங்கராந்தியாகிய தை மாதம் தொடக்கம் மார்கழி மாதம் முடியவுள்ள காலம் தேவர்களுக்கு ஒருநாளாகும். தேவர்களுக்கு, தை மாதம் தொடக்கம் முதல்  ஆனி மாதம் முடியவுள்ள ஆறு மாதங்கள் பகலாகவும், ஆடி மாதம் தொடக்கம் முதல்  மார்கழி வரையில் உள்ள ஆறுமாதங்கள் இரவாகவும், கொள்ளப்படுகின்றது.

மார்கழி மாதம் தேவர்களுக்கு வைகறையாகிய நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள காலமாக அமைந்து சிறப்புப் பெறுகின்றது. தூக்கம் விழித்தெழுந்து மனதில் எவ்விதமான சலனமும் இன்றித் தெளிவாக இருக்கும் நேரமே வைகறைப் பொழுது. ஆகவே, தேவர்களும் இறைவனை வழிபட்டு வணங்குவர். மனிதர்களாகிய நமக்கும் அக்காலமே சாலச் சிறந்தது என்பதாலேயே மார்கழி மாதம் சிறப்புடையதாகின்றது.

சங்க இலக்கிய நூலாகிய "பரிபாடலில்' 
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கல மேற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடி

என்னும் வரிகள் மார்கழியின் சிறப்பினையும், ஆதிரையின் பெருமையினையும் எடுத்துக் கூறுகின்றது.

இதன் பொருள், "சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில், முழுநிலாக் காலத்தில் பொருந்தி வரும் திருவாதிரைத் திருநாளில், மெய்நூலாகிய வேதங்களை நன்கு உணர்ந்த அறவோர்கள் திருவாதிரைக்குரிய தெய்வமான சிவபெருமானுக்குத் திருவிழாவைச் செய்ய, சிவபெருமானுக்கு வழிபாட்டுக்குரியதான பொருட்கள் நிரம்பிய பொற்கலங்களை ஏந்துவர். 

"இப்பூமியானது சூரியவெப்பத்தால் பாதிப்படையாது மழையினால் குளிர்ச்சியடைவதாக' என்று வாழ்த்தி 'அம்பா ஆடல்' என்னும் விரதத்தை கடைபிடிக்கும் கன்னிப்பெண்கள், முதிய பெண்களின் உதவியோடு பனிநிறைந்த விடியற்காலையில் நீராடுவர்'  என்பதாகும்.

பரிபாடலில் கூறப்பட்ட  "அம்பா ஆடல்' என்பதே "பாவை நோன்பு' என்பது அறிஞர் கருத்து. இத்தகைய விரதம் கன்னிப்பெண்களால் உலகிற்கு நன்மை தருவதாகிய "மழைவளம்' வேண்டியும், தம்முடைய நன்மைக்குரியதான, நல்லதகுதி நிரம்பிய கணவரை அடைவேண்டியும், வைகறையில் எழுந்து, ஒருவரையொருவர் துயிலெழுப்பி ஆற்றங்கரை சென்று நீராடி, உலகஅன்னைவாகிய உமையம்மையை வழிபாடு செய்வதாகும். 

திருப்பாவையிலும்  "நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து'  என்று வேண்டுவதைக் காணலாம். இச்செய்தியை  திருவாதவூரடிகள் புராணத்தில் உள்ள  செய்யுள் பின்வருமாறு கூறுகின்றது. 

மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் 
                                                                     திங்கள் தனில் 
ஆதிரைமுன் னீரைந்தே ஆகிய தினங்கள்
                                                                                  எல்லாம் 
மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் 
                                                                          விடிவதான
போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் 
                                                               ஆடல்செய்வார்
மார்கழித் திருவாதிரையைத் தழுவிய பத்து நாட்களும் தினமும் அதிகாலையில் இந்நீராடல் நடைபெறும். 

இத்தகைய சிறப்பமைந்த திருவாதிரைத் திருநாளையும், தேவர்களின் வைகறைக்காலமாகிய மார்கழி மாதத்தில்  சிவபெருமானையும், பெருமாளையும்  வழிபட்டுப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com