இந்த வாரம் கலாரசிகன் - (31-12-2023)

இன்று பேரூர் தமிழ் மன்றத்தின் 10}ஆம் ஆண்டு இலக்கியப் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஒருநாள் முன்னதாகவே கோவை வந்துவிட்டேன்.
இந்த வாரம் கலாரசிகன் - (31-12-2023)

இன்று பேரூர் தமிழ் மன்றத்தின் 10-ஆம் ஆண்டு இலக்கியப் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஒருநாள் முன்னதாகவே கோவை வந்துவிட்டேன். கடந்த ஒருவார நிகழ்வுகளை அசை போட்டபடி, சேரன் விரைவு ரயிலில் சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, சட்டென ஒரு பொறி தட்டியது. 

தனது "நீர்வழிப் படூஉம்' நாவலுக்காக இந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவர் "காலச்சுவடு' இதழில் ஆசிரியராக இருந்தார் என்று தெரியுமே தவிர, நான் அவரைச் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. சமகால இலக்கிய ஆளுமை ஒருவரை நேரில் சந்திக்காமல் இருப்பது குறையாகப்பட்டது. 
கோவை ரயில் நிலையத்தில் இறங்கியதும் முதல் வேலையாக தினமணியின் திருப்பூர் மாவட்ட நிருபர் தர்மலிங்கத்தை தொடர்புகொண்டு எழுத்தாளர் தேவிபாரதி ஊரில்தான் இருக்கிறாரா என்று விசாரிக்கப் பணித்தேன். அவர் காங்கயத்தில் இருக்கிறார் என்று நினைத்தால், அங்கிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் நந்தக்காடையூர் அருகேயுள்ள புதுவெங்கரையாம்பாளையம் என்கிற குக்கிராமத்தில் இருப்பதாகத் தகவல் தந்தார் நிருபர் தர்மலிங்கம். 

எப்படியிருந்தாலும் சந்தித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து கோவையிலிருந்து கிளம்பிவிட்டேன். கோவை பதிப்பின் துணை செய்தி ஆசிரியர் ம.விஸ்வநாதன், நிருபர் பேட்ரிக், புகைப்படக் கலைஞர் அஜய் ஜோசப் ஆகியோருடன் புதுவெங்கரையாம்பாளையம் நோக்கி பயணம் தொடங்கியது. நந்தக்காடையூரில் எங்களுக்கு வழிகாட்ட தர்மலிங்கமும், காங்கயம் நிருபர் எம். கோசலைராமனும் இணைந்து கொண்டனர். 

குக்கிராமம் என்றால் அப்படியொரு குக்கிராமம். தேநீர் குடிக்க வேண்டுமென்றால்கூட சுமார் 2 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். அங்கே தேவிபாரதி வசிப்பது, சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த மிகச் சாதாரணமான வீட்டில். நாங்கள் ஏன் அவரைச் சந்திக்க இவ்வளவு தொலைவு வந்திருக்கிறோம் என்கிற வியப்புடன் வரவேற்றார் தேவிபாரதி என்று எழுத்துலகில் அறியப்படும் ராஜசேகரன். 
அவருடன் காங்கயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் அவரது நண்பர் மூர்த்தியும் உடனிருந்தார். "சாகித்திய அகாதெமி' விருது கிடைத்ததற்காக தேவிபாரதியை வாழ்த்த விழைந்த எனக்கு அங்கே ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நேற்று அவரது பிறந்தநாளும்கூட! 

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்று, முழு நேர எழுத்தாளராகவும் இதழியலாளராகவும் மாறிவிட்டவர் தேவிபாரதி. ஏற்கெனவே "நிழலின் தனிமை', "நட்ராஜ் மகராஜ்', "நொய்யல்' உள்ளிட்ட நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ள தேவிபாரதி, இப்போது முழு நேர எழுத்தாளராக அவரது சொந்த கிராமத்தில், பரபரப்பையும் புகழ் வெளிச்சத்தையும் விரும்பாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்னைகளையும், சமுதாயச் சூழலையும் எழுத்தில் பதிவு செய்யும் அவரது புனைவுகள் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கப்படுபவை அல்ல. எழுத்தே தவம் என்று கருதும் அவரைப் பார்த்தபோது, பகவத் கீதை சொல்லும் "கர்மயோகி' என்கிற வார்த்தையின் அர்த்தம் எனக்குப் புரிந்தது.
சுமார் ஒரு மணி நேரம் அவரது கிராமத்து வீட்டின் முற்றத்தில், காற்றாட அமர்ந்து அளவளாவி மகிழ்ந்தோம். பிரான்ஸ், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் படைப்பாளிகள் மூன்று மாதங்கள் வரை புறச்சூழல்களில் இருந்து விடுபட்டு அமைதியாகத் தங்கி சிந்திக்கவும், எழுதவும் வழிகோலப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் சென்று வந்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் தேவிபாரதி. 
மலையாள மகா கவிகளில் ஒருவரான வள்ளத்தோளுடைய நினைவிடத்தை மிகச் சிறப்பாக கேரளத்தில் பராமரிக்கிறார்கள். ரம்மியமான சூழலில் எழுத்தாளர்கள் அங்கே தங்கி எழுதவும், கலந்துரையாடவும், புத்தகங்களை வெளியிடவும் வழிகோலப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் படைப்பாளிகளுக்கும், இலக்கியவாதிகளுக்கும் புறச்சூழலிலிருந்து விடுபட்டு இயங்க இலக்கியச் சோலை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்றதொரு அமைப்பை மகாகவி பாரதியின் பிறந்த மண்ணில் நாம் எப்போது அமைக்கப் போகிறோம் என்கிற கேள்வி என்னில் எழுந்தது. 
எழுத்தின் வீரியம் எத்தகையது என்பதன் அடையாளம்தான் இந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது தேவிபாரதிக்கு வழங்கப்பட்டிருப்பது. புதுவெங்கரையாம்பாளையத்தை இந்தியாவின் இலக்கிய வரைபடத்தில் இடம்பெறச் செய்ததற்காக அவரைப் பாராட்டுவதா, இல்லை புதுவெங்கரையாம்பாளையத்தில் தானுண்டு, தனது எழுத்துத் தவமுண்டு என்று வாழ்ந்து வரும் தேவிபாரதியை அடையாளம் கண்டு விருது வழங்கிய சாகித்திய அகாதெமியைப் பாராட்டுவதா? இரண்டையும்தான்! 

-----------------------------------------------

சென்னை புத்தகக்காட்சி திருவிழா இன்னும் மூன்று நாள்களில் தொடங்க இருக்கிறது. கண்காட்சியில் உள்ள "தினமணி' அரங்கில் "இந்த வாரம்' தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. 
12 ஆண்டு கால தமிழ் இலக்கிய நிகழ்வுகளின் பதிவு என்று சொல்வதா? வாரம் ஒரு புத்தகம் என்று எடுத்துக்கொண்டாலும், சுமார் 800 முக்கியமான புத்தகங்கள் குறித்த விமர்சனம் என்பதா? ஆளுமைகளுடனான என் சந்திப்புகள் குறித்த தகவல்கள் என்று சொல்வதா? நூற்றுக்கணக்கான கவிஞர்களையும், புதுக் கவிதைகளையும் அறிமுகப்படுத்திய சங்கப் பலகை என்பதா - எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். 
தலைசிறந்த தமிழறிஞர்களாகப் போற்றப்படும் ச.வே.சுப்பிரமணியன், தமிழண்ணல், தெ.ஞானசுந்தரம், இளங்குமரனார், சிலம்பொலி செல்லப்பன், ஒளவை நடராசன் ஆகியோர்  "இந்த வாரம்' தொகுப்பில் உள்ள 6 புத்தகங்களுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். 
தனித்தனி புத்தகங்களாக இல்லாமல் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படும் ஆறு புத்தகங்கள் கொண்ட "இந்த வாரம்' தொகுப்பின் விலை ரூ.2,400. தினமணி அரங்கத்தில் மட்டுமல்லாமல் அல்லயன்ஸ்,  ரஹ்மத், முல்லை,  விஜயா, வானதி, விழிகள், கண்மணி உள்ளிட்ட பதிப்பக அரங்குகளிலும் "இந்த வாரம்' விற்பனைக்கு வைக்கப்பட இருக்கிறது. 


எங்கே எப்போது படித்தேன் என்று நினைவில்லை. குறித்து வைக்கவும் மறந்துவிட்டேன். எழுதியவர் கவிஞர் அரிமதி இளம்பரிதி என்று நினைவு. கவிதை வரிகள் சட்டென நினைவுக்கு வந்தது. பகிர்ந்து கொள்கிறேன். 
வரதட்சணையோடு வந்த செருப்புகாலைக் கடித்தது...

பழிவாங்கிய மாமனார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com