ஆனையும் ஆனைமுகனும் 

தமிழில் யானைக்குப் பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களை அமைத்து ஆனைமுகக் கடவுளை புலவர்கள் சிலர் போற்றியுள்ளனர்.
ஆனையும் ஆனைமுகனும் 


தமிழில் யானைக்குப் பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களை அமைத்து ஆனைமுகக் கடவுளை புலவர்கள் சிலர் போற்றியுள்ளனர்.

ஒரு சமயம் காளமேகப் புலவர் திருவலஞ்சுழி திருத்தலத்திற்குச் சென்று விநாயகரை வழிபட்டார். அப்போது அவர்,

பறவாத தும்பி கருகாத 
            வெங்கரி பணிபுரண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்கம் 
                                        இந்து நுதல்
நிறவாத சிந்தூரம் பூசாக் களபம் 
                         நெடுஞ்சுனையில்
பிறவாமல் வலஞ்சுழிக்கே 
                        வரப்பெற் றனனே

என்று தும்பி, தந்தி, மாதங்கம், சிந்தூரம், களபம் ஆகிய யானையின் பெயர்களை அமைத்துப் போற்றினார்.

காளமேகம் போன்றே திரிகூட ராசப்பக் கவிராயரும் தமது குற்றால தலபுராணத்தின் காப்புப் பாடலில்,

கங்கையார் ஆம்பலை பூங்கவுரி நுதற்
     சிந்துரத்தை கயிலை யாளி
செங்கையார் மாதங்கத் 
                                     திருமுனியைத்
     தே வேந்தர் திக்கு வேந்தர்
பங்கயாசனம் முதலோர் 
                                                முடி மலர்த்
     தும்பியை வலவை 
                                           பருவப் பாரக்
கொங்கை களபத்தைச் 
                                        செண்பகக்
     குஞ்சரத்தை மனக்கூடம் 
                                      சேர்ப்போம்
என்று ஏற்றுப் போற்றியுள்ளார்.

அரும்பாத்தை வேத விநாயகர் பிள்ளைத்தமிழ் ஆசிரியரும்,
அகல் நீர் வேலை கடந்து ஓடி
     அலையாக் கும்பம் 
                             ஆனையினால்
அடங்கா நாகம் வீணையினால்
     அசையாத் தந்தி நிறுத்து உதைத்துப்
பகராது உயர்ந்த மாதங்கம்
     பறவாத் தும்பி காயாரா
பருங்கோட்டு அத்தி மாதர்மூலை
     படியாக் களபம் படியில் விலை
நிகழா ஒரு சிந்திரந் தலத்தில்
     நிறுவாக் கம்பம், அருங்குளத்தில்
நேரா ஆம்பல் வடுக்கள் படா
     நெடுங்கா இளமா என்றுபல
புகழால் உலகும் அரும்பாத்தை
     புரிவாழ் களிறே! வருக!
பொருள்சேர் வேத விநாயகமாம்
     புனிதா வருக வருகவே!
எனப் போற்றுகிறார்.

யானையைக் குறிக்கும் தும்பி, கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல், யாளி, முனி, கயம், கும்பம், நாகம், அத்தி, கம்பம், இளமா  ஆகிய பெயர்களில் ஆனைக்கடவுளைப் போற்றியுள்ள புலவர்களின் ஆற்றல் நம்மை வியக்க வைக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com