
பழந்தமிழ் இலக்கண, இலக்கிய மீட்சிக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடித்தளமிட்டு, இருபதாம் நூற்றாண்டுக்கு விதையாய், வேராய் நூற்றாண்டின் முதல் நாளிலேயே தமிழ் மண்ணுள் நிறைந்த பெருமகனார்தான் சி.வை. தாமோதரனார் (1832-1901). "கோடிப் புலவர்கள் கூடி இசைத்தாலும் கூறுதற்கு அரிய பெரும் புகழ் கொண்டவர் சி.வை.தா.' எனமாயூரம் வேதநாயகரும், "தாமோதரம் பிள்ளை சால்பை எடுத்துச் சாற்ற எவர் தாமோதரமுடையார்?' எனப் பரிதிமாற்கலைஞரும், "தொல்காப்பியம் முதலான தொன்னூல்களைப் பதிப்பித்து ஒல்காப்புகழ்மேவிய தாமோதரச் செல்வர்'என உ.வே.சா.வும் போற்றி இசைக்கின்ற பெரும் புலமையும்அருந்தொண்டும் இரண்டற இயைந்த பைந்தமிழ்ப் பதிப்பியல் முன்னோடி சி.வை.தா.
ஈழத்திருநிலம் தமிழியலுக்கு ஆறுமுகநாவலர், ஆனந்தகுமாரசாமி, சுவாமி விபுலானந்தர், சி.கணபதிப் பிள்ளை, தனிநாயக அடிகள், சு.வித்தியானந்தன், க. கைலாசபதி, கா.சிவத்தம்பி என எண்ணற்ற அறிஞர் பெருமக்களைஅளித்திருக்கின்றது. இந்த ஒப்பற்ற நிரலில் ஆறுமுக நாவலருக்கு அடுத்தும், தமிழ்மண் பயந்த தலையாய அறிஞர் உ.வே.சா.வுக்கு முன்னும் என்னும் நிலையில் திகழ்பவரே சி.வை.தா.
உலகம் விதந்து உச்சரிக்கும் டையோனிசியஸ் திராக்சு, பாணினி முதலிய இலக்கணிகளுக்குத் தொன்மை நிலையில் இணையாகவும் அவர் தம்மினும் விசாலத்தால் மேம்பட்டும் மிளிர்கின்ற தொல்காப்பியரின் தொல்காப்பிய இலக்கணத்தை முன்னோடியாகவும் முழுமை நிலையிலும் உரைகளோடும் தமிழுலகுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பதிப்பித்தளித்த பெரும் பணி சி.வை.தா.வின் பணியாகும்.
தமிழின் செவ்வியல் தகைமையை நிலைநிறுத்தும் சங்கப் பனுவல்களில் ஒன்றான "கலித்தொகை'யை 1887-ஆம் ஆண்டில் ஓலைச்சுவடியிலிருந்து முதன்முறையாகப் பதிப்பித்து வழங்கிப் பழந்தமிழ்க் கருவூலத்திற்குக் கைகாட்டியவர் அவர்.
இந்த வரலாற்று முதன்மையைக் கருத்தில் கொண்ட திரு.வி.க., பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர் என்று மதிப்பிட்டுரைத்தார்.
தமிழில் நிகழ்ந்த பதிப்பு முயற்சிகளையெல்லாம் எண்ணிப் பார்த்த வையாபுரிப் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ்ச் செல்வப் புதையலை முதலில் அகழ்ந்தெடுத்து உதவும் பெருமுயற்சியை மேற்கொண்டார் என மொழிந்திருக்கின்றார்.
தமிழின் தொன்மை, பெருவளம், தனித் தன்மை, தனித்தியங்கும் ஆற்றல் முதலியவற்றைத் தெளிவாக உணர்ந்திருந்த அவர் இவற்றை முன்னோடியாக அறிவார்ந்த நிலையில் முன்வைத்து முழங்கியவராகவும் விளங்கினார். இலக்கணத் துறையிலே தொல்லிலக்கணமாகிய தொல்காப்பியத்தோடு நின்றுவிடாமல் இறையனார் அகப்பொருளையும், வீரசோழியத்தையும், இலக்கண விளக்கத்தையும் பதிப்பித்து அளித்துத் தமிழிலக்கண வளத்தைத் தமிழ் கூறுநல்லுலகம் உணர வழி செய்தார்.
சூளாமணி, தணிகைப்புராணம், முதலிய இலக்கியங்களையும் பதிப்பித்தார்.
பதிப்புப் பணிகளுக்கிடையில் அவர் புரிந்த மகத்தான திருப்பணி ஒன்றுண்டு. அது"கட்டளைக் கலித்துறை' என்னும் யாப்பிலக்கண நூலைப் படைத்ததேயாகும். தமிழ் இலக்கண வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு சில புதுமைகளைச் சந்தித்தது.
கவிதை வளம் நிரம்பிய மொழியாகிய தமிழின் பாவடிவங்கள் ஒவ்வொன்றைக் குறித்து ஒவ்வொரு நூல் தோன்றியது. இக்காலகட்டத்தில்தான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வண்ணம் என்னும் ஒரு பாவடிவத்திற்கு "வண்ணத்தியல்பு' என்னும் இலக்கண நூலைப் படைத்தார்.
தி.வீரபத்திர முதலியார் விருத்தம் என்னும் ஒரு பாவடிவத்திற்கு "விருத்தப்பாவியல்' என்னும் நூலைப் படைத்தார். ஏறத்தாழ அதே காலத்தில் சி.வை.தா. "கட்டளைக் கலித்துறை' என்னும் எழுத்தெண்ணிப் பாடும் ஒரு பாவடிவத்திற்கே ஓர் இலக்கண நூலைப் படைத்தார்.
இந் நூல் புதிய இலக்கணக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது.பதிப்பியல் நுட்பங்களோடு தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் மாபெரும் பதிப்புப் பங்களிப்பு, இலக்கண நுட்பங்களோடு தமிழ் இலக்கண வரலாற்றில் இலக்கண ஆக்கம், தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் புலமை முயற்சிகள் என்றெல்லாம் வாழ்வைத் தமிழுக்காகவே அர்ப்பணித்த இத்தலை மகனார் ஈழத்தில் தோன்றித் தமிழகத்தில் நெடுங்காலம் வாழ்ந்தவர். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஓலைச்சுவடிகளைத் தேடிஅலைந்தவர்; அரும்பாடுபட்டுக் கண்டறிந்தவர். ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டவர். அக்காலத்தில் அவர் தமிழுலகின் முதன்மையான பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவராகவும் விளங்கினார்.
அவர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சென்னை மாநகரில் திருவேட்டீஸ்வரன்பேட்டை என்னும் பகுதியில் ஒரு தமிழ்ச் சங்கம் செயல்பட்டிருக்கின்றது. அந்தத் தமிழ்ச் சங்கம் ஒரு புத்தக சாலையையும் தோற்று வித்திருக்கின்றது. இவையெல்லாம் இன்று எண்ணிப் பார்க்கும்போது அரிய வரலாற்றுக் குறிப்புகளாகத் தோன்றுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்ச் சங்கம், நூலகம் முதலிய முயற்சிகள் பற்றிய பதிவுகள் வியப்பூட்டுவனவாகவும் ஆங்காங்கு சிலர் தமிழின் நலம் நாடி அரும்பணிகள் ஆற்றிய வரலாற்றை உணர்த்துவனவாகவும் உள்ளன.
1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் நடந்த இந்தத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவிலே சி.வை.தாமோதரம் பிள்ளை தலைவராக வீற்றிருந்தார் என்னும் அருஞ்செய்தியும், சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராகிய ஸ்ரீநிவாசாசாரியார் என்பவர் தமிழ் மொழியை வளர்ப்பது குறித்து ஒரு சொற்பொழிவை ஆற்றினார் என்னும் செய்தியும்,சி.வை.தா. தலைமை ஏற்று ஆற்றிய சொற்பொழிவில் இடம் பெற்ற கருத்துகளும் 132 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது சுதேசமித்திரன் இதழிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.
தமிழின் முதல் நாளிதழாக மலர்ந்த"சுதேசமித்திர'னை நிறுவியவர் ஜி.சுப்பிரமணிய ஐயர். "சுதேசமித்திரன்' இதழ் வார இதழாகவும், வாரம் இருமுறை இதழாகவும் நடைபோட்டு நாளிதழாக வடிவம் பெற்றது. இவ்விதழ் முதற்கட்டத்தில்சி.வி. சுவாமிநாதஐயர் என்பவரின்ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்தது. அக்காலத்தில் 1891ஏப்ரல் 17ஆம் தேதி இதழில்சி.வை.தாமோதரம் பிள்ளைஆற்றிய சொற்பொழிவு விவரம் வெளிவந்திருக்கின்றது.
அந்தச் சொற்பொழிவில் பழைய ஏட்டுப் பிரதிகளை அச்சில் பதிப்பிக்கும்போது பிழைகள் ஏற்படுவது குறித்தும், தமிழ் நூல்களை இக்காலத்தில் சேகரிப்பது மிகவும் அருமையானது எனவும், புத்தக சாலை ஏற்படுத்தும் முயற்சியின் பயன் குறித்தும், தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம் படிக்கச் செய்வதால் தமிழ் பேசவும் தெரியாமல் பலர் இருக்கின்றார்கள் எனவும், ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ் சுய பாஷை எனவும், இலக்கியத்தை அனுசரித்தே இலக்கணம் தோன்றியுள்ளதால் முதலில்அனைவரும் இலக்கியத்தில் தேர்ச்சியடைய வேண்டுமெனவும், பாடல்களைச் சந்தத்துடன் அறிந்து வாசித்தால் ஆழ்ந்த கருத்துகளை அறிந்து கொள்ளல் எளிதாகுமென்றும் உரையிலே எடுத்துரைத்திருக்கின்றார்.
அவருடைய பேச்சு எப்படி இருந்தது என்பதனை "சுதேசமித்திரன்', "தமிழ் பாஷையைப் போல் இனிமையான பாஷை இல்லை எனத் துலங்கும் படியும் மனதில் பதியும் படியும்' சி.வை.தா.வின் பேச்சு இருந்ததாகப் பதிவு செய்திருக்கின்றது.
ஆண்டு விழாக் கூட்டத்திற்கு வந்தவர்களையெல்லாம் சி.வை.தா.வின் பேச்சு மகிழ்ச்சிக் கடலிலே மூழ்கச் செய்ததாம். தமிழ் குறித்த அரிய செய்திகளையெல்லாம் உரையிலே எடுத்துச் சொல்லியதோடு தாம் அந்தத் தமிழ்ச் சங்கத்துக்கு இனி அடிக்கடி வருவதாகக் கூறியதோடு சில புத்தகங்களைத் தருவதாகவும், தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்வதாகவும் சொன்னார் எனவும் "சுதேசமித்திரன்' எழுதியிருக்கின்றது. அவர் விரிவாகப் பேசிய செய்திகளையெல்லாம் அப்படியே எழுத நமக்குச் சக்தியில்லை என்றும் பத்திரிகையின் இடமும்போதாதென்றும் ஓர் அளவில் முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துச் செய்தி நிறைவு பெற்றிருக்கின்றது.
நூல் வெளியீட்டு நிலைகளில் சி.வை.தா. தமிழின் தொன்மையை உணர்த்த ஆற்றிய பணிகளைத் தமிழுலகம் ஓரளவு அறியும். மக்கள் மன்றத்திலும் சி.வை.தா. தமிழின்சிறப்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் விரிவாகவும் உரைத்திருக்கின்றார் என்னும் வரலாறு முதன்முறையாக இப்போது வெளிப்படுகின்றது.
சி.வை.தா. என்னும் மாபெரும் ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தைப் புதிதாகக் கிடைத்துள்ள இந்தச் சொற்பொழிவு நமக்கு உணர்த்துகின்றது.
ஜன.1- சி.வை.தா. நினைவு நாள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.