பெரியபுராணத்தில் ஞானநெறி

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துரைப்பது திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் ஆகும். 
பெரியபுராணத்தில் ஞானநெறி


அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துரைப்பது திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் ஆகும். அறுபத்து மூன்று தனியடியார்களோடு ஒன்பது தொகையடியார்களையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் தெய்வச் சேக்கிழார். 
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளில் நின்று ஒழுகியவர்கள். இந்த நான்கு நெறிகளும் அனைவரிடமும் இருந்தது. ஞானநெறியில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர் இருவர். ஒருவர் வாயிலார் நாயனார்; மற்றொருவர் பூசலார் நாயனார். 
ஞானத்திற்கு அடிப்படை ஈசன்பால் அன்பேயாகும். ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் (திரு
ஞானசம்பந்தர்) என்கிறார் தெய்வச் சேக்கிழார். திருவண்ணாமலைப் பதிகத்தில் (முதல் திருமுறை) ஞானத்திரளாய் நின்ற பெருமான் என்று சிவலிங்க வடிவத்தைத் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார். 
ஞானமேயான அம்பலத்தைத் திருஞானசம்பந்தர் பெற்றிருந்தார் எனத் தெய்வச்சேக்கிழார் குறிப்பிடுகிறார். திருமந்திரம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளைத் தொகுத்துச் சொல்கிறது என்கிறார் சேக்கிழார். 
சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர் வாயிலார் நாயனார். இவர் வரலாற்றைப் பத்துப் பாடல்களில் குறிப்பிடுகிறார் தெய்வச் சேக்கிழார். முதல் ஆறு பாடல்களில் மயிலாப்பூரின் வளங்களை எடுத்துக்காட்டுகிறார். 
சிவபெருமானை மனத்தகத்தே எழுந்தருளச் செய்து அன்பினாலே திருமஞ்சனம் காட்டி உணர்வினாலே ஒளிவிளக்கேற்றி நெஞ்சுக்குள்ளே நினைவாலயம் எழுப்பி வழிபட்டவர் வாயிலார். இவரைத் தபோதனர் என்று அழைக்கிறார் தெய்வச் சேக்கிழார். 
மறவாமை யான்அமைந்த மனக்கோயில் 
        உள்ளிருத்தி
உதி தனைஉணரும் ஒளிவிளக்குச் சுடர்ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி 
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து     அர்ச்சனை செய்வார் (4091) 
என வாயிலாரின் வழிபாட்டைத் தெய்வச் சேக்கிழார் எடுத்துரைக்கிறார். 
சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று படிநிலைகளைக் கடந்து ஞானத்தில் முழுமையாக ஊன்றி நின்றவர் வாயிலார். ஆராத அன்பினாலே இறைவனை நாளும் அர்ச்சனை செய்தவர். இதனை,
நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள்
ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால்
பேராத நெறி பெற்ற பெருந்தகையார் (4093)
எனத் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். 
ஞானநெறியில் நின்ற இருவரும் சென்னையிலும் சென்னைக்கு மிக அருகிலும் வாழ்ந்திருக்கின்றனர். 
சென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூரில் வாழ்ந்தவர் பூசலார். இவர் வரலாற்றைத் தெய்வச் சேக்கிழார் பதினெட்டுப் பாடல்களில் சொல்கிறார். 
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே என்று தாயுமானசுவாமிகள் குறிப்பிட்டிருப்பது போல நெஞ்சகத்தைக் கோயிலாக்கி நினைவை ஆராதிக்கும் பொருளாக்கி அன்பையே அபிடேக நீராக்கி வழிபாடு நிகழ்த்தியவர் பூசலார். 
இவருடைய திருவுருவம் திருநின்றவூரில் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை இருதயாலீஸ்வரர் கோயிலின் கருவறையில் இருப்பது இவருடைய பெருஞ்சிறப்பாகும். இக்காட்சி திருநின்றவூரைத் தவிர வேறெந்த சிவன் கோயிலிலும் காண இயலாத சிறப்பாகும். 
இவர் திருக்கோயில் கட்டுவதற்குச் செல்வம் இல்லாமையால் உணர்வினால் ஆலயம் கட்டியதை,
அன்றினார் புரமெரித்தார்க்கு ஆலயம் எடுக்க
         எண்ணி
ஒன்றும் அங்கு உதவாதாக உணர்வினால் 
        எடுக்குந் தன்மை
நன்றென மனத்தினாலே நல்ல ஆலயந்தான் செய்த
நின்ற ஊர்ப் பூசலார் தம் நினைவினை 
        உரைக்கல் உற்றாம்  (4176)
என்று சேக்கிழார் கூறுகிறார். 

இவருடைய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த செய்தி ஒன்று உண்டு. நினைவால் கோயில் எழுப்பினார் என்றால் ஏதோ ஒரு நிமிடத்தில் அல்லது ஐந்து நிமிடத்தில் கட்டிவிட்டார் என்பது பொருளல்ல. தெய்வச் சேக்கிழார் மிகநுட்பமாக இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார். ஒரு பெரிய ஆலயம் கட்டுவதற்கு எவ்வளவு ஆண்டுகள் தேவைப்படுமோ அத்தனை ஆண்டுகள் மனத்தால் நினைவால் படிப்படியாகக் கோயிலைக் கட்டியுள்ளார். 
சான்றாக, பத்து ஆண்டுகள் கோயிலைக் கட்டுவதற்குக் காலமாகும் என்றால் அப்பத்து ஆண்டுகளும் தியானத்தில் இருந்தவாறே ஒவ்வொரு செங்கல்லையும் கருங்கல்லையும் அமைத்து அமைத்துச் சிலைகளை நிறுவி, வண்ணங்கள் பூசி மனத்திற்குள் கோயிலைக் கட்டியிருக்கிறார்.
மனத்தினாற் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
எனைத்தும் ஓர் பொருட்பேறு இன்றி என்செய்            கேன் என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம்             எல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் 
        திரட்டிக் கொண்டார் (4180)

இவ்வாறு மனத்திலே கோயில் கட்டிய பூசலாரின் பெருமையை விளக்குவதற்காக சிவபெருமான், 

தொண்டரை விளக்கத் தூயோன் அருள்செய (4186)
முடிவு செய்தார். 

அவ்வாறு அவர் முடிவு செய்வதற்குக் காரணம் நெடிதுநாள் நினைந்து நினைந்து இவர் கோயில் கட்டியதே ஆகும். இதனைத் தெய்வச் சேக்கிழார்,
நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த (4185) 
திருக்கோயில் எனக் குறிப்பிடுகிறார். 
இவர் பெருமையை மேலும் விளக்குவதற்காகக் காஞ்சிபுரத்தில் அன்று ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன் காடவர்கோன் கட்டிய கச்சித் திருக்கோயிலுக்குச் செல்லாமல் பூசலார் கட்டிய திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவிற்கு இறைவன் வந்துவிடுகிறார். 
இறைவன் பூசலார் கட்டிய மனக்கோயிலை நாடிவந்ததற்கு அருமையான காரணத்தைச் சொல்கிறார் தெய்வச்சேக்கிழார். இரவு பகல் என்று பாராமல் இறைவன்பால் உள்ள பேரன்பினால், பெருங்காதலினால் இந்த மனக்கோயிலைக் கட்டிமுடித்ததே காரணமாகும் என்பதை,  
காதலிற் கங்குற் போதுங் கண்படாது எடுக்கல் உற்றார் (4181) 
என்னும் அடியில் சேக்கிழார் குறிப்பிடுகிறார். 
தான் எவ்வாறு கோயில் கட்டினேன் என்பதைப் பல்லவ மன்னவன் காடவர்கோனுக்குப் பூசலார் எடுத்துரைப்பதாகத் தெய்வச் சேக்கிழார் காட்டுகிறார். 
முன்வரு நிதியிலாமை மனத்தினால் முயன்ற             கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தவாறு 
        எடுத்துச் சொன்னார் (4190)
ஞானநெறியில் நின்ற இவ்விருவரின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த செய்திகள் இரண்டு உள்ளன. ஒன்று, நடைமுறையில் நம்மால் பத்து நிமிடங்கள் கூட தியானநிலையில் இருக்க முடியவில்லை. ஆனால் இவ்விருவரும் பல ஆண்டுகள் தொடர்ந்து ஒருமுகப்பட்ட சிந்தனையோடு இறைவனை நினைந்து நினைந்து நினைவாலயம் எழுப்பியவர்கள். அதனால் இறைவனே இவர்களைத் தேடி ஓடி வருகிறான். 
தியானம் என்பது பத்து நிமிடம், ஒரு மணிநேரம் இருப்பதல்ல. பல்லாண்டு காலமாக தொடர்ந்து தைலதாரை போல (எண்ணெய் ஒழுக்குப்போல) இறைவனைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே தியானமாகும். அத்தியான வழியே ஞானநெறியாகும்.  
மற்றொன்று, இவ்விருவருக்கும் அவரவர் பிறந்த ஊரிலேயே திருக்கோயில்கள் உள்ளன. வாயிலாருக்குச் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள் தனிசந்நிதி உள்ளது. பூசலாருக்கு அவர் பிறந்த ஊரான திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் கோயிலில் தனிசந்நிதி உள்ளது. இவருக்கு இருக்கும் தனிச்சிறப்பு கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கத்திற்கு அருகில் இருக்கும் சிறப்புப் பெற்றவர். 
ஞானநெறி என்பது ஊசிமுனையில் நின்று தவம் செய்வதுபோல. முடிந்தவர் முயலலாம். அவ
ரவர் பட்ட பாட்டிற்கேற்பப் பலன் உலகியலில் கிடைக்காமல் போனாலும் போகலாம். ஆனால் அருளியலில் நிச்சயமாகப் பலன் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com