தொல்காப்பியர் எனும் மெய்ப்பாட்டியல் அறிஞர்!

உள்ளத்து உணர்ச்சிகளின் செயற்பாட்டால் மனித மனத்தில் தோன்றும் முக்கிய உளப்பாடுகளை தொல்காப்பியர் எண் வகையாகப் பகுத்துள்ளார்.
தொல்காப்பியர் எனும் மெய்ப்பாட்டியல் அறிஞர்!

உள்ளத்து உணர்ச்சிகளின் செயற்பாட்டால் மனித மனத்தில் தோன்றும் முக்கிய உளப்பாடுகளை தொல்காப்பியர் எண் வகையாகப் பகுத்துள்ளார். உணர்ச்சியின் வெளிப்பாடு தான் உடலியக்க மெய்ப்பாடு என்றால் மிகையாகாது. மெய்யின் கண் தோன்றலின் மெய்ப்பாடாடயிற்று என்பார் இளம்பூரணர்.
சொல்ல வந்ததை அப்படியே கண்ணால் கண்டது போல் காதால் கேட்பது போல் உருவாக்கிக் கண்முன் நிறுத்துவதே மெய்ப்பாடு. ஒன்றைப் பற்றி ஆராயாமல் கூறியவுடனேயே அதன் பொருள் உடன் தோன்றி தெற்றென விளங்குவதே மெய்பாடாகும் என்றும் கூறலாம். இதை,
உய்த்துணர் வின்றித் தலைவரு
பொருண்மையின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்
( தொல். பொ. செய். 196)
எனும் நூற்பா தெளிவுபடுத்துகிறது.
மெய்ப்பாடென்பது சொற்கேட்டார்க்குப்
பொருள் கண் கூடாதல் (பேராசிரியர்)
மெய்ப்பாடென்று சொற்கேட்டோர்க்குப்
பொருள்கட் புலனாதல் (நச்சினார்க்கினியர்)
மெய்ப்பாடாவது நேராகக் கண்டது போலத்
தோன்றும் கருத்து (தண்டியலங்காரம்)
மேற்கண்ட கூற்றுகள் தொல்காப்பியத்தை உள் வாங்கி நிற்கின்றன.
அவ்வகையில் இன்றைய உலக உளவியலின் அடிப்படை கோட்பாடுகளும் தொல்காப்பிய வழி நோக்கி அமைந்துள்ளதையும் நாம் மறுக்கமுடியாது.
அயலக அறிஞர் சிக்மண்ட் பிராய்ட் ஒரு மருத்துவர், நரம்பியல் வல்லுநர். அவர், "மனிதர்தம் பிணிகளுக்கான காரணம் உடல் சார்ந்ததல்ல, உளம் சார்ந்தது' என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூறினார். மனிதர்கள் உளம் சார்ந்த மாறுபாடுகள், சூழல் காரணிகளின் அடிப்படையில் தான் ஏற்படுகிறது என்பதை உளவியல் அறிஞர்கள் கண்டறிவதற்கு முன்பாகவே தொல்காப்பியர் கண்டுணர்ந்தார்.

மனிதர் தம் உணர்ச்சிகளை அளவிட்டு அதற்கேற்றார் போல் பெயரிட்டு தந்த தொல்காப்பியர் உலகில் முதல் மாந்த மெய்ப்பாட்டியல் அறிஞர் என்று அறுதியிட்டு கூறலாம்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடேன்ப
(தொல். பொருள் 247)
மெய்ப்பாடுகள் தோன்றும் இடங்களை உரையாசிரியர்கள் சுவை என்பர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். காரணம் அகவுணர்வானது முகத்தின் வழி வெளிப்படும். நகை என்பது சிரிப்பு. மனிதரோடு மனிதரை இணைக்கும் ஆற்றல் கொண்டது. கவலையை விரட்டும் ஆற்றல் கொண்டது. அதனால் தான் வள்ளுவப் பெருந்தகை இடுக்கண் வருங்கால் நகுக என்றார்.
அழுகையை மனிதனின் முதல் மொழி எனலாம். கருவறைவிட்டு வந்தவுடன் தொடங்கும் மொழியான அழுகை ஈன்றாளை மகிழ்விக்கும் சுற்றத்தாரை குளிர்விக்கும்.
இளிவரல் பிறரால் இழிவாகப் பார்க்கப்படும் நிலை (அ) எளியனாதல் ஆகும். முகம் சுழித்தலால் உண்டாகும் முகமாற்றம் எனலாம். மருட்கை வியப்பெனலாம். எக்காலத்தும் தோன்றாததோர் பொருள் தோன்றிய வழி வியத்தல்.
அச்சம் என்பது உள்ளத்திற்கு துன்பம் விளைவிக்கும் உணர்வு. அச்சமானது வாழ்வின் முன்னேற்றத்தினைத் மட்டுப்படுத்தும் வேகத்தடையாகும் பெருமிதம் என்பது யாவரோடும் ஒப்பநில்லாது. மேம்படுதல் ஆகும். அச்சமானது எந்த அளவுக்கு ஒருவரை முடக்கிப் போடுகிறதோ அந்தளவு பெருமிதமானது ஒருவரை தன்னம்பிக்கையுறச் செய்யும்.

வெகுளி என்பது சினம். வெகுளிக்கு ஆட்படும் ஒருவர் தன்னிலைமறந்து அறிவையிழந்து மனம் போன போக்கில் செல்வார். உவகை என்பது மனவெழுச்சியுடனான மனமகிழ்ச்சிஎனலாம்.

பசி, தாகம், பாலுணர்வு, உறங்குதல், விழித்தல் முதலானவை உயிரினங்களுக்கு உள்ள பொதுவான அகத் தெழுச்சி உணர்வுகளாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன புறத்தாக்க உணர்வுகள் ஆகும்.

நகை நீ கேளாய் தோழிஎனும் அகநானூற்றுப் பாடலில் தாய் தன்னிடம் வெகுண்டதன் காரணம் அறியாமல் நகைக்கிறாள் தலைவி என நகையின் உட்கூறாகிய பேதைமை இங்கு சுட்டப்பெறுகிறது. கைகேயி கொண்ட வரத்தினால் இராமன் நாடிழந்து கானகம் செல்வதை எண்ணி உலக உயிர்கள் அனைத்தும் அழுது புலம்பியதாகக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் "நகர் நீங்கு படல'த்தில் சுட்டுகிறார்.

ஆடினர் அழுதனர் அழுத எழிசை
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர்
ஊடினர் அழுதனர் (கம்பராமாயணம்)
இளிவரல் என்பது இழிவாகும். காமப்பிணி கொண்ட தலைவி மழையுடன் வந்த வாடைக்காற்றை நோக்கி, நீ பெரும் மலையையே அசைக்கும் தன்மையுடையாய், எளியவளாகிய என்னை அலைப்பது ஏன் என்கிறாள்.
மருட்கை என்பது வியப்பு, மயக்கம் ஆகும். தலைவன் தலைவியுடைய இடையின் சிறுமை கண்டு வியந்து மயங்குகின்றான்.
கடையிற் சறந்த கருநெடுங்கண் பேதை இடையிற் சிறிய தொன்றில் அச்சம் எனும் உணர்வு கொள்ளும் தலைவி ஆறலைக்கள்வரை கண்டதால் அல்ல. அவன் மனங்கவர் கள்வனைக் கண்டதால் நான் கண்மூடித் திறக்கும் முன் மறைந்து விடும் கள்வன் நீ என்கிறாள்.
யாம் நின்னை வேரூஉதுங் காணுங்கடை
தேரியிழாய் (கலி. 87)
பெருமிதம் என்பது பெருமைகளோடு ஒப்ப நில்லாத பேரெல்லையாகும். போர்க்களத்தில் கண்ணனுக்குத் தானாற்றிய நற்பயன் ஆற்றல்களை வார்த்துக் கொடுத்த கர்ணனின் கொடை பெருமிதமாகும். வெகுளி எனும் சினம் பற்றி உரைக்கையில், இங்கு கும்பகர்ணனின் சினம் சுட்டப்பெறுலாம்.
கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன
(கும்பகர்ணன் 267)
கும்பகர்ணன் கொண்ட சினத்தால் அவன் கண்கள் குருதி கொப்பளித்து இருந்ததாம்.
உவகை எனும் மகிழ்ச்சி காமத்தால் ஏற்படும் போது ஏனையவற்றைக் காட்டிலும் அளவில் அதிகமே.
தொல்காப்பியர் சுட்டும் மெய்ப்பொருள் சங்க இலக்கியங்களில் மட்டும் அல்ல எக்காலமும் எழும் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து விளங்கிவருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com