பராபரக் கண்ணியில் உதிர்ந்த மலர்கள்

சென்னையில் உள்ள தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் எளியேன் உடனாளராகப் பணியாற்றும்போது ஸ்ரீ தாயுமான சுவாமிகள் பாடியருளிய சித்தமவுனி வட பால் மவுனி (27.26) எனத் தொடங்கும்
பராபரக் கண்ணியில் உதிர்ந்த மலர்கள்

சென்னையில் உள்ள தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தில் எளியேன் உடனாளராகப் பணியாற்றும்போது ஸ்ரீ தாயுமான சுவாமிகள் பாடியருளிய சித்தமவுனி வட பால் மவுனி (27.26) எனத் தொடங்கும் பாடலில் ஓர் ஐயம் நேர்ந்தது. வடவால்  மவுனியே உண்மைப்பாடம் என்பது எனது கருத்தாகும்.

தாயுமானவரும் "தென்பாலின் முகமாகி வடவால் இருக்கின்ற செல்வமே' என்று ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைப் பாடியுள்ளார்; 12:10. 560 எஃப் என்ற தொடர் எண்ணுள்ள சுவடியில் மட்டுமே "வடவான் மவுனி' என்ற உண்மைப்பாடம் கண்டேன்; வடவான் மவுனி என்றது வடவிருட்சமாகிய ஆலமர் செல்வன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையே. தென்முகக் கடவுளை, "ஆல்கெழு கடவுள்' (256 ஆம் அடி) என்று திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. 

மேலே குறிப்பிட்ட சுவடியில் (560  எஃப்) தாயுமானவர் பாடல்கள் பதிப்புக்களில் இல்லாத பின்வரும் பராபரக்கண்ணியை (389) எளியேன் காணநேர்ந்தது:
"உன்னியுன்னிப் பார்த்(து) உருப்படுத்தி 
                                                          உன்னைநான்
சின்னமாய்ச் செய்த பிழைக்(கு) 
                           என்செய்வேன் பராபரமே'
"உன்னியுன்னி' என்ற அடுக்குத்தொடரை, "ஓர் உறவும் உன்னியுன்னி' என்றும் தாயுமானவர் பாடலில் (உடல்குழைய) காணலாம். பராபரக்கண்ணிகள் பதிப்புப்படி 389. இந்தச்சுவடியில் (560 எஃப்) இலக்கிய மரபுக்கு இசையுமாறு 390ஆம் கண்ணி பின்வரும் வாழ்த்துப் பாடலாகும்:
"மூர்த்தியெல்லாம் வாழியருள் 
                                மோனகுரு வாழியன்பர், 
வார்த்தையென்றும் வாழியன்பர்வாழி  
                                                               பராபரமே'. 
இத்துடன் பராபரக்கண்ணி முற்றும் என்ற குறிப்பு மூலச்சுவடியில் உள்ளது பதிப்பில் இது 229ஆம் கண்ணியாகப் பின்
வருமாறு உள்ளது:
"மூர்த்தியெல்லாம் 
   வாழியெங்கள் மோனகுரு  
         வாழியருள் 
வார்த்தையென்றும்  
                      வாழியன்பர் வாழி  பராபரமே'. 
கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் "ஆறிரு தடந்தோள் வாழ்க' என்று தொடங்கும் வாழ்த்துடன் நிறைகின்றது. பைங்கிளிக்கண்ணியிலும் மூலச்சுவடியின் (560 எஃப்) படியைப் பதிப்புடன் ஒப்புநோக்கியதால் பின்வரும் இரண்டு உண்மைப்பாடங்கள் கிடைத்தன:

ஆவிக்குள் ஆவியெனும் அற்புதனார் 
                                                      சிற்சுகந்தான் 
பாவிக்கும் கிட்டுமோ பகராய் நீ
                                                பைங்கிளியே !
 பதிப்புக்களில் "பகராய்' என்ற மோனை "சொல்லாய்' என்றுள்ளது.

"ஆறான கண்ணீர்க்கென் அங்கம்வங்கம் ஆனதையும் கூறாத தென்னோ குதலை மொழிப் பைங்கிளியே'  இது பதிப்புகளில் "அங்கபங்கம்' என்றுள்ளது. தாயுமானவர் பாடல்கள் மூலச்சுவடி (560 எஃப்) நனி சிறந்தது. 

இச்சுவடியின் மேற்காணும் படியை எனது வேண்டுகோளை ஏற்று மனமுவந்து நல்கியவர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையக் காப்பாட்சியராவார். அவருக்கு எனது மனங்கனிந்த நன்றி. 

தாயுமான சுவாமிகள் பாடல்களின் தொகை "விண்ணுறுந்தேவர்' எனத் தொடங்கும் பாடலால் (திருப்பனந்தாள் காசிமடம் பதிப்பு) (1963) 2ஆம் பதிப்பு) "எண்ணுறுங்கண்ணிகள் எண்ணூற்றறுபத்தைந்து' என்றதாலும் தெரியவருகின்றது 

இப்பதிப்பில் 40 முதல் (தந்தைதாய்) 54 (ஆனந்தக்களிப்பு) வரை கண்ணிகள் என்ற குறிப்புள்ளது. பதிப்புக்களில் 839 கண்ணிகளே உள்ளன. "உன்னியுன்னி' என்ற கண்ணியையே யான் பிரதி செய்ததால் 25 கண்ணிகள் பதிப்புக்களில் உதிர்ந்த மலர்களாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com