தனித்தமிழ் இயக்கமும் மறைமலை அடிகளும்

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் மறைமலை அடிகளார் என்பதும் அவருக்கு அந்த எண்ணம் ஏற்பட அவர் மகள் நீலாம்பிகை அம்மையார்தான் காரணம் என்பதும் தமிழ் உலகம் அறிந்த ஒன்று.
தனித்தமிழ் இயக்கமும் மறைமலை அடிகளும்

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் மறைமலை அடிகளார் என்பதும் அவருக்கு அந்த எண்ணம் ஏற்பட அவர் மகள் நீலாம்பிகை அம்மையார்தான் காரணம் என்பதும் தமிழ் உலகம் அறிந்த ஒன்று.

அத்தகைய மறைமலை அடிகளார்தான் "தமிழர்கள் தங்கள் தாய்மொழியோடு வேறொரு அயல் மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழின் பெருமையை அந்த அயல்மொழியாளர்கள் அனைவரும் அறியும் வகையில் பரப்ப முடியும், இல்லையென்றால் நமக்குள் மட்டுமே தமிழைப் பேசிக் கொண்டிருக்க முடியும்' என்று கூறினார்.

மறைமலை அடிகள் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்றிலும் பெரும் புலமை பெற்றவர். அதனால்தான் ஆங்கிலத்தில் இருந்த எடிசனின் அறிவியல் பற்றிய கருத்தமைந்த புத்தகங்களையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் அனைவரும் எடிசனின் விஞ்ஞான நுட்பத்தை அறிந்து கொள்ளச் செய்தார்.

வடமொழியில் சிறந்த புலமை பெற்றிருந்த காரணத்தால்தான் காளிதாசரின் சாகுந்தலத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்து காளிதாசரின் காவியப் புலமையை நமக்குணர்த்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திரர் இதைப் பலபடப் பாராட்டிக் கூறி அடிகளாரின் சாகுந்தலம் பற்றிக் கல்லூரி மாணாக்கரிடையே கட்டுரைப் போட்டி நடத்திப் பரிசளித்துச் சிறப்பித்தார்.

நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே மறைமலை அடிகளின் சாகுந்தலத்தையும், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலையும் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப் பாலை ஆராய்ச்சி நூல்களையும் படித்திருக்கிறேன்.

மறைமலை அடிகளார் தாம் எழுதிய அனைத்து நூல்களுக்கும் ஆங்கிலத்தில்தான் முன்னுரை எழுதினார். ஏனென்றால் தமிழ் தெரியாதவர்கள் அந்த முன்னுரையைப் படித்தால் அத்தகைய சிறப்புக்குரிய தமிழைத் தாமும் படிப்பார்கள் என்பதற்காகத்தான்.

இப்படிப் பல மொழிகளில் புலமையிருந்தாலும் அவரவர் தங்கள் தாய் மொழியில்தான் அனைத்தையும் படிக்க வேண்டும் என்ற கருத்துடையவராய் இருந்தார். ஆக தனித் தமிழ் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பவர்கள் ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு எதிர்ப்பானவர்கள் அல்லர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்ற பாரதியின் கருத்தை நிறைவேற்றியவர் அடிகளார்தான்.

1927 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா இரண்டு நாட்கள் கரந்தையில் நடைபெற்றது. மறைமலை அடிகளார்தான் அதற்குத் தலைமை வகித்தார். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்றவர்களெல்லாம் அதில் கலந்து கொண்டார்கள்.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பேசும் போது "சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோ டிசைபாடல் மறந்தறியேன்' என்ற அப்பர் பாடலை எடுத்துக்காட்டி "சலம் என்ற வடசொல்லைக் கலந்து அப்பர் பாடியிருக்கிறார். ஆகவே சைவப் பற்றாளர்களாகிய நாமும் வடசொல்லைக் கலந்து எழுதலாம் அதில் தவறில்லை' என்றார்.

உடனே மறைமலை அடிகளார் எழுந்து "சலம்' என்ற சொல் வடசொல் என்று யார் சொன்னது "சலசல மும்மதம் பொழியும்' என்று சங்கப் பாடலிலே கூறப்பட்டுள்ளது. சலம் என்பது தமிழ்ச் சொல்தான். சலசல என்ற ஓசையுடன் ஓடுவதால் அதற்கு சலம் என்று பெயரிட்டார்கள். சலம் என்பது காரணப்பெயர். இதை வடமொழியாளர்கள் "ஜலம்' என்று ஆக்கிக் கொண்டார்கள்' என்று ஆணி அடித்தாற்போல் கூறினார். தனித்தமிழ் உணர்வு நாடெங்கும் பரவ இதுவே அடிப்படைக் காரணமாக அமைந்தது.

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மறைமலை அடிகளாரும் அவர் மகள் நீலாம்பிகை அம்மையாரும் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தபோது.

பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும் 


என்ற வள்ளலார் பாடலைப் பாடி, "இதில் உற்ற தேகத்தை என்பதற்குப் பதிலாக உற்ற யாக்கையை என்ற நல்ல தமிழ்ச் சொல் போட்டிருந்தால் இன்னும் இனிமை அதிகமாக இருக்கும் நீலா' என்று தன் மகளைப் பார்த்து அடிகளார் கூறினார்.

மேலும் இதைப்போன்ற வட சொற்கள் அதிகம் கலந்ததால் அதற்கு நிகரான பல தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து விட்டன என்றும் இன்னும் பல சொற்கள் மறைந்துவிட்டன என்றும் கூறியிருக்கிறார்.

அப்படியானால் நாம் இனிமேல் அயல் மொழிச் சொற்களை நீக்கி தூய தமிழில் எழுத வேண்டும் பேச வேண்டும் என்றும் அதை இன்றே தொடங்கலாமே என்றும் நீலாம்பிகை அம்மையார் கூற அன்றே அடிகள் அதைச் செயல்படுத்தத் தொடங்கினார்.

"வேதாசலம்' என்ற தம் பெயரை "மறைமலை அடிகள்' என்றும் தாம் நடத்தி வந்த "ஞான சாகரம்' என்ற இதழை "அறிவுக் கடல்' என்றும் "சமரச சன்மார்க்க நிலையம்' என்ற தம் மாளிகைப் பெயரைப் "பொதுநிலைக் கழகம்' எனவும் மாற்றினார். இது நடந்தது 1916இல்.

அடிகளாருக்கு முன்பே தனித்தமிழ் உணர்வு படைத்தவர்கள் பலர் இருந்தார்கள். இவரைவிட வயதில் மூத்தவர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார். தனித்தமிழ்ப் பற்றின் காரணமாகத் தம் பெயரைப் "பரிதிமாற் கலைஞர்' என்று மாற்றிக் கொண்டார். 

மறைமலை அடிகள் 1876இல் பிறந்து 1950இல் மறைந்தார். தனித்தமிழ் உணர்வு பலரிடம் இருந்தாலும் அன்றைக்குத் தனித்தமிழ் உணர்வை ஓர் இயக்கமாக மாற்றியவர் மறைமலை அடிகளார்தான். இலக்கியத் தேடலில் உ.வே.சா.வின் அரும்பெரும் முயற்சியைப் பலபடப் பாராட்டியவர் அடிகளார். 

அவருக்குப் பிறகு பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார் "தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கித் தூய தமிழ் வளர்ப்புத் தொண்டு புரிந்தார். அதன்பின் பெருஞ்சித்திரனாரால் தொடங்கப் பெற்ற உலகத் தமிழ்க் கழகத்திற்கு தேவநேயப் பாவாணர் தலைவராய் இருந்து தனித்தமிழை வளர்த்தார். பாவாணரே ஒரு தமிழ் இயக்கமாக இருந்தவர்தான்.

மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தை வரவேற்றுப் பாராட்டியவர்களில் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வாழ்க மறைமலை அடிகள் புகழ்.

ஜூலை 15 மறைமலை அடிகள் பிறந்தநாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com