இந்த வாரம் கலாரசிகன் - 16-07-2023
பிரம்மாண்டம் என்றால் அப்படியொரு பிரம்மாண்டம். இப்படியொரு நூலகம் கிடைப்பதற்கு மதுரை மாநகரம் இத்தனை காலம் தவமிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.


பிரம்மாண்டம் என்றால் அப்படியொரு பிரம்மாண்டம். இப்படியொரு நூலகம் கிடைப்பதற்கு மதுரை மாநகரம் இத்தனை காலம் தவமிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். நூற்றாண்டு கண்ட அமெரிக்கன் கல்லூரி, மதுரைக் கல்லூரி, செந்தமிழ்க் கல்லூரிகள் இருக்கின்றன என்றாலும், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் இருந்தாலும் பிரம்மாண்டம் என்று சொல்லும்படியான நூலகம் இதுவரையில் இல்லை. இப்போது தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறது.
நேற்று தமிழக முதல்வரால் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2,13,338 சதுர அடி பரப்பளவில், அடித்தளம், தரைத்தளம் உள்ளிட்ட ஏழு தளங்கள் ரூ. 134 கோடியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், ஓய்வறை, அவரவர் தங்களது சொந்த நூல்களைக் கொண்டுவந்து படிக்க வசதி, பல்வகை பயன்பாட்டு அரங்கம் என்றெல்லாம் வழிவகை செய்யப்பட்டிருக்கின்றன.
முதல் தளத்தில் நாளேடுகள், பருவ இதழ்கள் பிரிவு, குழந்தை நூலகம் உள்ளன. இரண்டாம் தளத்தில் முழுக்க முழுக்க தமிழ் நூல்கள் பிரிவு. கலைஞர் கருணாநிதியின் சேகரிப்பில் இருந்த நூல்களுக்கு என்று தனிப்பிரிவு. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சிக்கான பிரிவு. நான்காவது தளத்தில் சுமார் 30,000 புத்தகங்களுடனான பல்வகைப் பிரிவுகள். ஐந்தாவது தளத்தில் இணையவழி, எண்மவழி நூல்கள். ஆறாவது தளத்தில் பகுப்பாய்வு, நிர்வாகப் பிரிவு என்று ஒவ்வொரு பகுதியும் கவனமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
எங்களைப்போல பேனா பிடித்து எழுதுபவர்கள் குறைந்திருக்கலாம். ஆனால், தட்டச்சு செய்பவர்களும், இணையவழியில் படிப்பவர்களும் இல்லாமலா போய்விட்டனர்? எழுத்தும் மொழியும் இல்லாமல் கருத்துப் பரிமாற்றம் என்பது சாத்தியமில்லை எனும்போது, நூலகங்களின் தேவை என்பது நிரந்தரம். அதன் பயன்பாட்டு முறையில் மாற்றம் ஏற்படுமே தவிர, நூலகப் பயன்பாடு ஒருபோதும் தேவையற்றதாகி விடாது.
"கலைஞர் நூற்றாண்டு நூலகம்' வடிவம் பெற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலுவின் பங்களிப்பும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மதுரைக்குப் பயணித்து விடுவார் என்றும், நூலகக் கட்டடத்தை உருவாக்குவதில் அவரது முழுக்கவனமும் இருந்ததையும் அதில் தொடர்புடையவர்கள் தெரிவித்தனர்.
பிரம்மாண்டமான நூலகத்தை மதுரைக்கு மட்டுமல்லாமல், தமிழகத்துக்கே தந்து பெருமை சேர்த்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள். அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் புத்தகங்களைப் போலவே, பல தமிழறிஞர்கள் பொக்கிஷமாக சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களையும் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்' பாதுகாக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும். அந்த பொக்கிஷங்கள் பழைய பேப்பர் கடைகளுக்கு எடைபோடப்படும் அவலம் ஏற்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பெருமை சேர்த்திருக்கிறது!
------------------------------------------------
குன்றக்குடி ஆதீனகர்த்தர் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் நிழல் என்றுதான் குன்றக்குடி சிங்காரவடிவேலைக் கூற வேண்டும். தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் மேனாள் செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஐயாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரும் கலந்துகொண்டார். அவருடன் நண்பர் சிங்காரவடிவேலும் வந்திருந்தார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
அவர் எனக்கு அன்பளிப்பாகத் தந்த புத்தகம் அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான "மாதவம்'. பதினொரு சிறுகதைகள் அடங்கிய அந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு விதமான கதையம்சத்தைக் கொண்டது. நான் ரயிலில் சென்னைக்குத் திரும்பும்போது, திருநெல்வேலியில் படிக்கத் தொடங்கி, மதுரை சந்திப்பில் ரயில் நிற்பதற்குள் அத்தனைக் கதைகளையும் படித்து முடித்திருந்தேன்.
அந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் "அன்பிற்காகத்தான் ஐயா' கதை நான் ஏற்கெனவே படித்தது. தினமணி கதிரும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு பிரசுரமான சிறுகதை அது.
அடிகளாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர் என்பதால், துறவறத்தின் அருமையும், துறவியின் மனநிலையும் எப்படி இருக்க வேண்டும், இருக்கும் என்பதைத் தெரிந்தவர் சிங்காரவடிவேல். அதன் பிரதிபலிப்பை அவரது "துவராடை' சிறுகதையில் பார்க்க முடிகிறது.
தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் வெறும் கதையாக மட்டும் இருக்கவில்லை. சமுதாயத்துக்கு ஒரு செய்தியையும் விட்டுச் செல்கிறது. "மாதவம்' தொகுப்பை படித்துபோது அதை நான் உணர்ந்தேன்...
"தொகுதி முழுவதையும் படித்து முடித்த பிறகு சமுதாயம் குறித்து எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இது தாக்குப் பிடிக்கும் என்று நம்பிக்கைப் பெருமூச்சுவிட முடிகிறது. அதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி' என்று தனது அணிந்துரையை முடித்திருக்கிறார் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. அதைவிடச் சிறப்பான விமர்சனம் வேறு என்ன இருந்துவிட முடியும்?
------------------------------------------------
மே மாத "தூண்டில்' ஹைக்கூ இதழில் வெளியாகி இருந்தது கவிஞர் ம. திருவள்ளுவர் "ஹைக்கூ' குறித்து எழுதியிருந்த கட்டுரை. பாஷோ, பூஸன், இஸ்ஸா, ஷிகி என்னும் நால்வர் தொடங்கி வைத்த ஹைக்கூ எனும் குறுங்கவி வடிவம் இன்று பெரிய கவிதைக் களம் கண்டுவிட்டது.
"ஹைக்கூ என்பது கவிதை அன்று; இலக்கியமும் அன்று; அது நம்மை அழைக்கும் கையசைவு; பாதியாகத் திறந்த கதவு' என்று கூறும் கவிஞர் திருவள்ளுவர், இன்னொரு கருத்தையும் பதிவு செய்கிறார். "கவிஞன் இறங்கிக்கொள்ள வாசகன் ஏறிக் கொள்வான். அதுவே ஹைக்கூ' என்பது அவரது பார்வை. அவரது இந்தக் கவிதை உங்கள் பார்வைக்கும் வாசிப்புக்கும் சிந்தனைக்கும்...
குடிபெயரும் தீர்மானம்
நொடியில் கலைந்தது
வீட்டினுள் புதிய கூடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...