எனது ஞானாசிரியர் சி. விசுவநாத ஐயர்!

எனது ஞானாசிரியர் சி. விசுவநாத ஐயர்!

மகாகவி பாரதியாருக்கு ஐந்து வயதானபோது, அவரின் தாயார் லக்ஷ்மி அம்மாள் காலமானார். மறுமணச் சிந்தையே எழாது வாழ்ந்துவந்தார், சின்னசாமி ஐயர். என்றாலும், அவருடைய உற்றார்-உறவினர்கள் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.

மகாகவி பாரதியாருக்கு ஐந்து வயதானபோது, அவரின் தாயார் லக்ஷ்மி அம்மாள் காலமானார். மறுமணச் சிந்தையே எழாது வாழ்ந்துவந்தார், சின்னசாமி ஐயர். என்றாலும், அவருடைய உற்றார்-உறவினர்கள் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அவர்களின் அறிவுரையின்படி சின்னசாமி ஐயர் மறுமணத்திற்கு இணங்கினார்.1889-ஆம் ஆண்டில் சின்னச்சாமி ஐயர் இரண்டாம் தாரமாக வள்ளியம்மையை மணந்துகொண்டார். 1894-ஆம் ஆண்டு வள்ளியம்மை ஓர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்; அக்குழந்தைக்கு லக்ஷ்மி என்று பெயரிட்டனர். 1896-ஆம் ஆண்டு வள்ளியம்மைக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விசுவநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. 
1901 முதல் 1915 முடிய விசுவநாதன் எட்டயபுரம் மன்னர் பள்ளிக்கூடத்தில் மெட்ரிக்குலேஷன் வரை படித்தார்; 1915-1916-ஆம் ஆண்டுகளில் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியில் இன்டர்
மீடியட் முடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி. ஏ. (சரித்திரம்); 1920-1921ஆம் ஆண்டில் சென்னை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி  படிப்பை முடித்தார். 1922-ஆம் ஆண்டு மானாமதுரையில் இருந்த ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் சரித்திர ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் தலைமை ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார்.
பாரதியின் படைப்புச் செல்வங்கள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாகப் பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்ட பெருமக்கள் பலராவர். திரு.வி.கிருஷ்ணசாமி ஐயர், 
பரலி.சு.நெல்லையப்பர்; சுதேசமித்திரன் காரியாலயத்தார், புதுவையில் இயங்கிவந்த இந்தியப் பதிப்புச் சாலையினர்  ஆகியோரின் பங்களிப்பு கணிசமானது.
பாரதியின் மனைவியான செல்லம்மாள், தம் சகோதரர் அப்பாதுரை அவர்களுடைய துணையுடன் சென்னை திருவல்லிக்கேணியில் "பாரதி ஆச்ரமம்' என்ற பிரசுர நிலையத்தைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் சார்பில், பாரதியின் நூல்கள் முழுமையும் வெளியிடத் திட்டம் வகுக்கப்பட்டது. 
முதல் கட்டமாக 1922-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் "சுதேச கீதங்கள்" என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் பிரசுரமாயின. "சுதேச கீத'த்தின் முதல் தொகுதியில் பாரதியின் 90 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இரண்டாம் தொகுதியில் 80 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
முதலிரு  தொகுதிகளும் சிறந்த முறையில் அமைந்திருந்தன; இத் தொகுதிகளுக்குப் பத்திரிகை உலகில் வரவேற்பும் இருந்தன. "நவசக்தி', "தனவைசிய ஊழியன்', "ஹிந்து' போன்ற பத்திரிகைகளும் நூல் தொகுதிகளைப் பாராட்டி எழுதின. ஆனாலும், புத்தக வியாபாரம் உற்சாகம் தருவதாக இல்லை.
செல்லம்மாள் நிறுவிய "பாரதி ஆச்ரமம்' பாரதி நூல்களை வெளியிடும் பணியை இரண்டு தொகுதிகளைப் பதிப்பித்ததோடு நிறுத்திக் கொண்டு விட்டது.நூல்கள் போதிய அளவில் விற்பனையாகாமல் செல்லம்மாள் வீட்டில் தேங்கிக் கிடந்தன; அச்சில் வெளிக்கொண்டுவரத் திட்டமிட்டிருந்த பாரதியின் கையெழுத்து பிரதிகளும் முடங்கிக் கிடந்தன. செல்லம்மாள் செய்வதறியாது திகைத்தார்.
பாரதியின் உறவினரான ஹரிஹர சர்மாவும், பாரதியின் இளைய சகோதரர் சி. விசுவநாத ஐயரும் உதவி செய்ய முன்வந்தனர். விசுவநாத ஐயர் பாரதி நூல்களை வெளியீடு செய்வதற்கென்றே "பாரதி பிரசுராலயம்' என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். 
ஹரிஹர சர்மாவையும், பாரதியின் இளைய மகள் சகுந்தலாவின் கணவர் நடராஜனையும் விசுவநாத ஐயர் தம் கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொண்டார். விசுவநாத ஐயரின் கூட்டுப் பொறுப்பில் அமைந்த "பாரதி பிரசுராலயம்' பாரதியின் நூல்களை வெளியிடும் பணியை ஏற்றுக்கொண்டது முதலாகப் பாரதியின் நூல்கள் தொடர்ந்து வெளிவரலாயின. பாரதி நடத்திய - தொடர்புகொண்ட இதழ்கள், கைப்பிரதிகள் எங்கெங்குக் கிடைக்கும் என்பதைத் தேடும் முயற்சியையும் விசுவநாத ஐயர் மேற்கொண்டார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், பாரதியின் பாடல்கள் எழுச்சியூட்டக்கூடியவையாக இருந்ததால், பிரிட்டிஷ் அரசு பாரதியின் கவிதைகளுக்குத் தடை விதித்தது. "பாரதி பிரசுராலயம்' பலமுறை காவல்துறையின் சோதனைக்கும் உட்பட்டது. 1938, 1941ஆண்டுகளில் "பாரதி பிரசுராலய'த்தின்  கூட்டாளிகளான ஹரிஹர சர்மாவும், நடராஜனும் தொழிலில் லாபம் இல்லை என்று காரணம் கூறி விலகிக் கொண்டனர்
ஆனால் விசுவநாத ஐயரோ மனம் தளராமல் துணிவுடன் செயல்பட்டார். சோதனைகளை எல்லாம் கடந்து, 1949-ஆம் ஆண்டு வரை பாரதி நூல்களின் பதிப்பாளராக விசுவநாத ஐயர் திகழ்ந்தார். 1923-ஆம் ஆண்டு முதற்கொண்டு 1949-ஆம் ஆண்டு வரை "பாரதி பிரசுராலயம்' பாரதியின் நூல்களை வெளியிட்டது.
எனது வேண்டுகோளுக்கு இணங்க விசுவநாத ஐயர்  தமது பசுமை நினைவுகளை இப்படி நினைவுகூர்ந்தார்: "நான் பாரதியாரின் உடன்
பிறப்பாகத் தோன்றியது ஒரு தற்செயலான சம்பவம். அதுபோல, பாரதியின் நூல்களை வெளியிட நேர்ந்ததும் மற்றொரு தற்செயலான சம்பவம். சந்தர்ப்பவசத்தால் இந்த மாபெரும் பணியை ஏற்க நேர்ந்தது.
ஏற்ற பிறகுதான் இதில் உள்ள கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டேன். நான் பாரதியின் சகோதரன் என்ற காரணத்தாலும், பாரதி நூல்களை வெளியிட்டு வந்தவன் என்ற காரணத்தாலும் என்னை பிரிட்டிஷ் அரசு கண்காணித்து வந்தது.
என் கடிதங்களை எல்லாம் போலீஸ் கமிஷனர் காரியாலயம் பார்வையிட்டு அனுப்பியது. எனக்கு அரசு நடத்திவந்த கல்வி ஸ்தாபனங்களில் உத்தியோகம் மறுக்கப்பட்டது. இத்தனை இன்னல்களுக்கிடையே நான் பாரதியார் நூல்களை வெளியிட நேர்ந்தது பற்றி எனக்கு வருத்தமே இல்லை. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த பேறு' என்றார்.
பாரதியின் இளவலான இவர், பாரதியின் நூல்களை மட்டுமே பதிப்பிக்கவில்லை, குறிப்பிடத்தக்க ஆங்கில நூல்களையும் எழுதி உள்ளார். "பாரதி அண்ட் ஹிஸ் வொர்க்ஸ்' என்ற நூலை1929 -ஆம் ஆண்டு எழுதி பிரசுரம் செய்தார். பாரதியின் ஆங்கில எழுத்துக்களை "அக்னி அண்ட் அதர் பொயம்ஸ் அண்ட் டிரான்ஸ்லேஷன் அண்ட் எஸ்úஸஸ் அண்ட் அதர் புரோஸ் ஃபிராக்மென்ட்ஸ்' நூலின் திருத்திய விரிவாக்கப் பதிப்பையும் வெளியிட்டார். 1949-ஆம் ஆண்டு பாரதியின் நூல்களை அரசுடைமையாக்கத் தமிழக அரசு முடிவு செய்தது.
பெரியவர் விசுவநாத ஐயரின் தொடர்பு எனக்கு 1979-ஆம் ஆண்டு ஏற்பட்டது. அவரைப் பாராமலேயே - எனக்கு அவர் பதிப்பித்த பாரதி நூல்களைப் படித்து, நானும் பாரதி நூல்களை வெளியிடுவதையே வாழ்க்கைப் பணியாக மேற்கொண்டேன். அவரையே எனது ஞானாசிரியராகவும் வரித்துக்கொண்டேன்.
 சந்தர்ப்பவசத்தால் சின்ன அண்ணாமலையின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அவரது ஆலோசனைப்படி சென்னை வாழ்க்கையை மேற்கொண்டேன். பின், அவரது அறிவுரைப்படி பதிப்பகம் ஒன்றைத் தொடங்கினேன். இந்தத் தருணத்தில், 11-12-1962 அன்று பாரதியின் 81-ஆவது பிறந்தநாளை தமிழக அரசு கொண்டாட இருப்பதாக பத்திரிகைகளில் அறிவிப்பு வெளிவந்தது.
அதைப் பார்த்ததும் மகாகவி பாரதியின் மகிமைகளை விளக்கிக் காட்டும் வகையில், நூல் ஒன்றை வெளியிடக் கருதினேன். அதற்காக மகாகவியின் குடும்பத்தவர், புகழ் பரப்பியோர், நண்பர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரின் கட்டுரைகளைத் தேடிப் பெற்றேன். 
எனது முதல் நூலான  "தமிழகம் தந்த மகாகவி' 11-12-1962 அன்று வெளியாகி, மாபெரும் வரவேற்பைப் பெற்றது.  மூதறிஞர் ராஜாஜி, நாமக்கல் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன், கவியோகி சுத்தானந்த பாரதியார், பரலி 
சு. நெல்லையப்பர், அறிஞர் வெ. சாமிநாத சர்மா, ம.பொ.சி., சின்ன அண்ணாமலை ஆகியோரோடு மற்றும் பல அறிஞர்களின் பாராட்டையும் பெற்றது.
இனி, பாரதி நூல்களைத் தவிர, பிற நூல்களை வெளியிடுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். ஆரம்ப காலத்தில், "பாரதி பிரசுராலயம்' வெளியிட்டிருந்த நூல்களினின்றும் தெரிந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளையே நான் வெளியிட்டேன்.
இந்த நிலையில் 1977- ஆம் ஆண்டு செப்டம்பர் மாத "கலைமகள்' இதழில் விசுவநாத ஐயர் "கவி பிறந்த கதை' என்று ஓர் கட்டுரை எழுதி இருந்தார். அக்கட்டுரையில் பாரதிக்கு விரிவான, ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாறு ஒன்று தேவை என்ற தம் கருத்தை வலியுறுத்தி இருந்தார். அக்கட்டுரையைப் படித்த நான், அப்பொழுது மானாமதுரையில் வசித்து வந்த விசுவநாத ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
என் நூல்கள் மூலம் என்னைப் பற்றி அறிந்திருந்த விசுவநாத ஐயர் என்னைப் பார்க்க விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அவருடைய கடிதம் கிடைத்தவுடன் நான் மானாமதுரை சென்றேன். அவருடன் உரையாடினேன். பேச்சினிûடையே நான் பாரதி வரலாற்று நூல் வெளியிடுவது பற்றிப் பேசினேன். என்னிடம் அவர், "பாரதிக்கான வரலாற்றுப் பணியை, தனிநபர் ஒருவர் மட்டும் செய்துவிடக்கூடிய பணியாக நான் நினைக்கவில்லை. இந்தப் பணிக்குப் பலவிதங்களிலும் தகுதியான அறிஞர்களைக் கொண்ட குழு ஒன்று அமைத்துச் செயல்பட வேண்டும் என்பதே என் ஆசை. இதை நான் எழுதியக் கட்டுரையிலேயே தெளிவாகத் தெரிவித்தும் இருக்கிறேன்' என்றார். அவருடன் உரையாடும்போது, "தங்கள் வசம் இருக்கும் செய்திகளைக் கொண்டோ அல்லது ஏற்கெனவேயே வெளிப்பட்டுள்ள நூல்களில் இடம்பெற்றுள்ள பிழைகளைக் களைந்தோ நூலொன்று வெளியிடப்பட வேண்டியது அவசியம்' என்றேன்.
ஆனால், அவர் விரிவான நூல் வெளியிடுவதையே விரும்பினார். நானும் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்பினேன். இந்த நிலையில்,13-11-1979 அன்று அவரிடமிருந்து கடிதம் வந்தது. "பாரதி வாழ்க்கை வரலாறு சம்பந்தமாகச் சில விஷயங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இன்னும் சேகரிக்க வேண்டியவை ஏராளமாக உள்ளன. இந்தப் பணிக்குப் பல நாட்களும், பணமும், என்னுடன் ஒத்துழைப்பதற்குச் சரியான மனிதர்களும் தேவை' என்று அவர் தம் கடிதத்தில் 
குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தைப் பெற்ற நான் உடனேயே மானாமதுரை சென்றேன். அவரை சந்தித்து, "நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். முதலில், உங்களிடம் உள்ள ஆவணங்களை முறைப்படுத்திக் கொள்ளுங்கள்; எவ்வெவ்வற்றைத் தேடிப்பெற வேண்டும் என்பதற்கும் குறிப்புக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நூலை வெளிக்கொணரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்று உறுதியளித்தேன்.
இப்படி நான் ஏங்கிக்  கொண்டிருந்த நிலையில், விசுவநாத ஐயர் எனக்கு 11-10-1981 அன்று எழுதிய கடிதத்தில், "பாரதியின் வாழ்க்கை வரலாற்றுக்கு உருக்கொடுப்பதற்கு முயன்று வருகிறேன். இப்பொழுது செய்வது பூர்வாங்க வேலை. இதனின்றும் முழு உருவத்தைச் சிருஷ்டி செய்து, அதற்கு உயிரும் அளிக்க வேண்டும். நாம் சந்தித்துச் சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்' என்று எழுதியிருந்தார்.
மகாகவி பாரதியின் நூற்றாண்டு தொடக்க விழாவின்போது, பாரதியின் படைப்புகள் யாவும் சிறந்த முறையில் பதிப்பிக்கும் பொறுப்பை தமிழக அரசே மேற்கொள்ளப்போவதாக அறிவிப்பு வந்தது. 11-12-1981 அன்று தமிழக அரசின் சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பாரதி நூற்றாண்டு தொடக்க விழா எட்டயபுரத்தில் நடைபெற்றது. அப்போது விசுவநாத ஐயரின் பாரதி சேவையைப் பாராட்டி அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். விசுவநாத ஐயருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
எட்டயபுர விழாவில் பாரதி நூல்கள் - புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசின் சார்பில் நான் அழைக்கப்பட்டேன். அப்போது, பாரதியின் விருது பெற்ற விசுவநாத ஐயர் கண்காட்சிக்கு விஜயம் செய்தார், கண்காட்சியைப் பார்வையிட்டு பிரமித்துப் போனார். தம்முடன்  வந்திருந்தவர்களிடம் என்னைப் பற்றி "இவர் பாரதி பேரில்  பக்தி கொண்டவர்; என்னைப்போலவே பாரதியின் நூல்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். இவர் என்னுடைய பிள்ளை மாதிரி' என்று என்னை அறிமுகப்படுத்தினார். 
பாரதி வரலாற்று நூலைப் பதிப்பிக்கும் பொறுப்பைச் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது. 1982 டிசம்பர் 11-ஆம் தேதி பாரதி நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போது "பாரதி மலர்' மட்டுமே வெளியிடப்பட்டது.
சில மாதங்களுக்குப் பின்னர், விசுவநாத ஐயர் நோய்வாய்ப் பட்டார். விசுவநாத ஐயரின் உடல்நிலை பற்றிய செய்தியை அறிந்ததும் நானும்,  "சேக்கிழார் அடிப்பொடி' டி.என். இராமச்சந்திரனும் மானாமதுரைக்குச் சென்றோம்.
விசுவநாத ஐயர் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். எங்களைக் கண்டதும் படுக்கையினின்றும் எழுந்து உட்கார்ந்து கொண்டார்."இந்த ஆண்டுக்குள் பாரதிக்கான வரலாற்று நூல் வெளிப்படவில்லையானால், அந்தப் பொறுப்பை நீங்கள் இருவரும் ஏற்க வேண்டும்' என்று சொல்லி, தாம் அதுவரை சேர்த்து வைத்திருந்த ஆவணங்களை எங்களிடம் ஒப்படைத்தார். 
ஆனால், டி.என். இராமச்சந்திரன் பாரதி பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்  பணியில் தீவிர கவனம் செலுத்தவேண்டி நேர்ந்ததால், பாரதி வரலாற்றுப் பணியை அவர் என்னிடமே ஒப்படைத்து விட்டார். 
இடையில் ஒரு முறை விசுவநாத ஐயர் ஒப்படைத்த ஆவணங்களில் சில சந்தேக நிவர்த்திக்காக மானாமதுரை சென்று வந்தேன்.
தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், தளர்ச்சியாக இருந்த நேரத்திலும் எனக்குள்ள சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தார்.
ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் விசுவநாத ஐயர் 17-7-1984 அன்று காலகதி அடைந்துவிட்டார். இந்தச் செய்தி எனக்குப் பேரிடியாக அமைந்துவிட்டது. 
விசுவநாத ஐயரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், நூலை எப்பாடுபட்டாவது வெளியிடுவதுதான் சிறந்தது என்பதாக நான் உணர்ந்தேன். பாரதி பற்றிய பழைய வரலாற்று நூல்களைத் தேடிப் பெற்றேன். எல்லா ஆவணங்களையும் ஒன்றுதிரட்டிப் பார்த்தபோது எனக்கே மலைப்பாக இருந்தது.
1984-ஆம் ஆண்டில் பாரதியின் இளவல் விசுவநாத ஐயரின் நல்லாசிகளுடன் நான் ஏற்றுக்கொண்ட இந்த வரலாற்று நூல் பணி 1996 டிசம்பர் மாதத்தில் நிறைவுபெற்றது.

நாளை (ஜூலை 17) 
சி. விசுவநாத ஐயர் நினைவுநாள்.
கட்டுரையாளர்: 
பாரதி இயல் ஆய்வாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com