உரைகாரரை நினைந்து உருகும் உ.வே.சா.! 

"உரையாசிரியர்கள், நூலின் பெருமையை நன்குணரும்படி செய்யும் உபகாரிகள்' என்கிறார் டாக்டர் உ.வே. சாமிநாதையர்.
உரைகாரரை நினைந்து உருகும் உ.வே.சா.! 

"உரையாசிரியர்கள், நூலின் பெருமையை நன்குணரும்படி செய்யும் உபகாரிகள்' என்கிறார் டாக்டர் உ.வே. சாமிநாதையர். அவருடைய என் சரித்திரம் நூலில் இடம் பெறும் இந்த ஒருவரிக் குறிப்பு உரையாசிரியர் பற்றிய அவரின் அனுபவங்களை நம்மை மீண்டும் அசைபோட வைக்கிறது. 
பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற தமிழ்ப் பெருநூல்களைப் பதிப்பித்தபோது உரையின் மூலம் அவ்வவ்வுரையாசிரியரின் இயல்புகளை ஆராய்ந்து உணர்ந்து அவர் பதிவு செய்திருக்கும் பகுதிகள் மூலத்தை உரையுடன் படிப்பதற்கு முன்னர்ப் பன்முறை படித்தறிய வேண்டியவை; மனம் பதித்துக்கொள்ள வேண்டியவை. 
குறிப்பாகப் பத்துப்பாட்டைப் பதிப்பித்த போது குறிஞ்சிப் பாட்டில் கண்ட குறையை நிறைவு செய்வதற்கு அவர்பட்ட பாட்டினையும் அதற்கு மூலமும் உரையுமாக அமைந்த ஏடுகள் உதவிய பாங்கினையும் என் சரித்திரத்தில் விளக்கி (பக்.648650) எழுதியிருக்கிறார் அவர்.
பத்துப்பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு எந்தக் குறையுமின்றி முழுமையாக நமக்குக் கிடைத்திருக்கிறது. அதில் கபிலர் குறிப்பிடும் மலர்கள் 99 என்பது இன்று திட்டவட்டமாக நமக்குத் தெரிந்த ஒன்று. 
ஆனால் பதிப்பு முயற்சியில் உ.வே.சா. ஈடுபட்ட போது குறிஞ்சிப்பாட்டு ஏடுகளில்  அப்பகுதியில் சில அடிகள் விடுபட்டிருந்தன. கபிலர் பூக்களின் பெயர்களை அடுக்கிச்சொல்லும் அழகிய பகுதி அது. அவருக்குக் கிடைத்த எல்லா ஏடுகளிலும் இவ்விடுபாடு ஒத்திருந்தது. 
விடுபட்ட அடிகள் எததனை என்று நிச்சயிக்க முடியாத நிலையில், "திருவிழாக் கூட்டத்தில்  குழந்தையைப் பிரிந்த தாயினைப் போலப் பரிதவித்த' உ.வே.சா.வுக்கு   அவரின் விடாத தேடுதல் முயற்சிக்குக் கடைசியில் பலன் கிடைத்தது. 
தருமபுர ஆதீன மடத்தில், மூலமும் உரையுமாக இருந்த ஒற்றை ஏடுகளில் விடுபட்ட பகுதியை அவர் கண்டறிந்தார். இங்ஙனம் குறிஞ்சிப் பாட்டின் குறைநீங்கி நிறைவு பெற்ற தமது அனுபவத்தை "உதிர்ந்த மலர்கள்' எனும் கட்டுரையில் விவரித்திருக்கிறார் (நல்லுரைக் கோவைஉ.வே.சா.).
இத்தகைய சங்கடங்களை உரைகள் தீர்த்துவைத்ததாலேயே உரையாசிரியர்களைக் கொண்டாடுகின்ற குணம் அவரது நெஞ்சில் தானாவே வந்து தங்கிவிட்டது. 
பத்துப்பாட்டினை நச்சினார்க்கினியர் உரையுடன்  பதிப்பித்த உ.வே.சா., "நச்சினார்க்கினியர் வரலாறு' என்னும் பகுதியில் அவ்வுரையாசிரியர் பற்றி ஒரு பாடல் எழுதியிருப்பதை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
எவன்ஆல வாயிடைவந்(து) அமுதவாய்
      உடையனென இயம்பப் பெற்றோன்;
எவன்பண்டைப் பனுவல்பல இறவாது
     நிலவஉரை எழுதி ஈந்தோன்;
எவன்பரம உபகாரி எவன்நச்சி
     னார்க்கினியன் எனும்பே ராளன்;
அவன்பாத இருபோது எப்போது 
     மலர்கவென(து) அகத்து மன்னோ!
என்பது அவ்வறுசீர் விருத்தப் பாடல். 
இதுபற்றி "என் சரித்திரம்'நூலில்
உ.வே.சா., "தமிழ் வளர்த்த பரம உபகாரிகளில் நச்சினார்க்கினியர் ஒருவர் என்பதே என் கருத்து. பத்துப்பாட்டுப் பதிப்பில் அவர் வரலாற்றைத் தனியே எழுதவில்லை ஆயினும் அவர் மீது ஒரு துதிகவிபாடி  முகவுரையின் ஈற்றில் அமைத்தேன்' என்கிறார்.
இங்ஙனம் நச்சினார்க்கினியரைக் கொண்டாடிய உ.வே.சா. பெயர் தெரியாத தக்கயாகப் பரணி உரையாசிரியர் பற்றி எங்ஙனம் மனமுருகி மறுகிப் பாடுகிறார் என்பதை இனிப் பார்க்கலாம்.
பாரும் விசும்பும் புகழ்தக்க யாகப்  
                                                                 பரணியின்பால்
ஆரும் சுவைபல ஆருந் தெளிய  
                                                              அணியுரைசெய்
சீரும் சிறப்பும் உடையோய்! இருமொழிச் 
                                                                  செல்வநின்றன் 
பேரும் தெரிந்திலன்;  என்செய்கு வேன் 
                                                     இந்தப் பேதையனே
என்பது அவர்பாடிய கட்டளைக் கலித்துறைப் பாட்டு.   
கலிங்கத்துப் பரணி போலத் தக்கயாகப் பரணி பேர் பெற்ற நூல் அன்று என்பது தமிழறிஞர்க்கு ஒப்பமுடிந்த ஒன்றாகும். எனினும் "உரையாசிரியர் வரலாறு' என்னும் பகுதியில், "இவர் இருமொழியிலும் வல்லுநர்; எட்டுத்தொகை, பத்துப் பாட்டுத் தொடக்கமாகத் தமிழில் காலந்தோறும் தோன்றிய பலதுறை நூல்களையும்  கற்றறிந்தவர். 
இவருடைய உரையினால் வேறு நூல்களிலுள்ள சில பிரயோகங்களுக்குப் பொருள்கள் விளங்கின; சில  ஐயங்கள் நீங்கின. தமிழில் மிகுதியான அபிமானமுடையவர்; சொற்களை ஆராய்ந்து எழுதுபவர்' என்று அவரின் உரைச்சிறப்பை பலவாறு வகைப்படுத்தி எழுதிச் செல்கிறார். 
அந்தப் பரவச நிலையில்தான், "உன் பேரும் தெரியவில்லையே' என்று உள்ளம் உருகுகிறார்; அறியவியலாப் பேதைமைக்கு வருந்துகிறார். "இதற்கு மேல் மேம்பட்ட உதவியில்லை' என்று உணருமாறு உபகாரம் செய்தவனைப் பற்றி ஒன்றும் அறிய முடியாத நிலையில் செய்ந்நன்றியறியும் மனம் எத்தகைய பாடுபடும்?  அந்தப் பாட்டினைத்தான், இந்தப் பாட்டின் ஈற்றடி தெரிவிக்கிறது. 
படிப்பவர் மனத்திலும் அவரடைந்த உருக்கத்தையும் இரக்கத்தையும் எளிதில் மடைமாற்றம் செய்கிற உயிர்நிலையான அடி இது.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமாவதாரத்தில் நாகபாசப் படலத்தில்   தன் தம்பி இலக்குவனையும் படைத்துணையாக வந்த குரங்குச் சேனையையும் உயிர்ப்பித்துக் காத்த கருடனை, "இன்னான்' என்று அறியாது,  "நீ யாரோ' என்று நன்றியுணர்ச்சி பொங்க இராமபிரான் வினவவும், "பின்னர் உணர்த்துவன்' என்பதை மட்டும் சொல்லி வேறெதுவும் கூறாமல் அங்கிருந்து அகன்று விடுகிறான் கருடன். 
அப்போது இராமன் அவனுக்குத் தான் கைம்மாறாகச் செய்யத்தக்கது இன்னது என அறியாமல் திகைத்து,
ஆருயிர் உதவி யாதும் காரியம் இல்லான் 
                                                                                   போனான், 
       கருணையோர் கடன்மை ஈதால்;  
பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் 
                                                                                     என்னார்; 
      மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ 
                                                                       வையம் (8272)
 என்று அமைதி அடைகிறான்.            
இராமனைப் போலவே இத்தகையதொரு ஆற்றாமையுடன் பெயரும் தெரியாத அந்த உரைகாரருக்காக மனங்கசிந்து பாடுகிறார் உ.வே.சா. அவர் கவிஞர் அல்லர். ஆனால் உணர்வு நிலையின் உச்சத்தில் நின்று அவர் பாடிய இந்தப்பாடல், ஒருகணம் அவரைக் கவிச்சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் கொண்டு சென்று நிறுத்தி விடுகிறது என்பதை மறுக்க இயலுமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com