
பண்டைய காலத்தில் முதன்மையான எழுதுபொருள் ஊடகமாக ஓலைச்சுவடிகள் திகழ்ந்திருக்கின்றன. தாள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் எழுதுவதற்கும் பிரதி செய்வதற்கும் தாளினைப் பயன்படுத்தினர். பின்பு அச்சு இயந்திரத்தின் வருகை புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. நூல்கள் அச்சேறத் தொடங்கின. தாள், அச்சு இயந்திரம் இவை வருவதற்கு முன்னர் இன்றைய அச்சு நூல்களின் இடத்தினை ஓலைச் சுவடிகளே வகித்துள்ளன.
தாளின் பயன்பாடு அதிகரித்தப்பின்பு, தாளே முதன்மையான எழுதுபொருள் ஊடகமாயிற்று. தாள் புழக்கத்திற்கு வந்ததும் அதில் கையினால் எழுதத் தொடங்கினர். அவ்வாறு எழுதப்பட்டனவற்றை கையெழுத்துச் சுவடி, கைப்பிரதி, கையெழுத்துப்படி, காகிதச்சுவடி, தாள்சுவடி போன்ற பெயர்களால் அழைத்தனர். அச்சு இயந்திரங்களின் பயன்பாடு பரவலாக்கப்பட்ட பின்பு அச்சு நூல்களின் வருகையும், பதிப்புக்கலையும் உத்வேகம் பெற்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது இலக்கண இலக்கியங்களும் அவ்வகையில் அச்சேற தொடங்கின. அந்த வகையில் தமிழின் முதல் நூலாகக் கிடைக்கப்பெறுகின்ற தொல்காப்பியம் பிற மொழிகள் எதிலும் இல்லாத சிறப்புகள் பல உடைய இலக்கண நூல்.
தொன்மை வாய்ந்த தொல்காப்பியம் பதிப்பு வரலாற்றில் இடம்பிடித்தது கி.பி. 1847இல் தான். அப்போது தொல்காப்பிய எழுத்ததிகாரம் மட்டுமே வெளிவந்துள்ளது. இதுகுறித்துக் குறிப்பிடும் ச.வே. சுப்பிரமணியம், "முதன் முதலான மழவை மகாலிங்கையர் ஆகஸ்ட் 1847இல் எழுத்து நச்சினார்கினியத்தை வெளியிட்டார், வரலாற்றில் தொல்காப்பியம் முதன் முதலில் அச்சில் வந்தது இப்பதிப்பு வழிதான்' என்கிறார்.
அதேநேரம் மு. சண்முகம்பிள்ளை, மா.சு. சம்பந்தன் இருவரும் மழலை மகாலிங்கையர் பதிப்பு கி.பி.1848இல் தான் வெளிவந்தது என்கின்றனர். இது மேலாய்வுக்கு உரியது.
மழலை மகாலிங்கையரின் 1847ஆம் ஆண்டு பதிப்பைத் தொடர்ந்து ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1858இல்தான் அடுத்த பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பு எஸ். சாமுவேல் பிள்ளையால் தொல்காப்பிய நன்னூல் என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களும் இடம்பெற்றுள்ளன.
அதோடு நன்னூல் நூற்பாக்களுடன் ஒப்புநோக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு. இப்பதிப்பே கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் தொல்காப்பியம் முழுமைக்குமான முதல் பதிப்பாக உள்ளது.
அடுத்த நிலையில் நமக்குக் கிடைப்பது வ.உ. சிதம்பரனாரின் தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பு. இது 1933இல் வெளிவந்துள்ளது. ஆனால் இப்பதிப்பில் களவியல், கற்பியல், பொருளியல் என்னும் மூன்று இயல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
வ.உ.சி.க்குப்பின்1885இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் வெளியிடப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பே கிடைக்கின்றது. இவர் பொருளதிகாரம் முழுமையும் பதிப்பித்துள்ளார்.
பதிப்பிற்கு ஓலைச் சுவடிகளைப் பயன்படுத்துவது போலவே தாள் சுவடிகளையும் ஆசிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். சான்றாக வ.உ.சி. தமது தொல்காப்பியப் பதிப்பின் ஆய்வுரையில், "1933இல் வெளியிட்டுள்ள பகுதி
களுக்கு, த.மு. சொர்ணம்பிள்ளை கடிதப் பிரதியும், தி.நா.சுப்பிரமணிய ஐயரிடமிருந்து கிடைத்த கடிதப் பிரதியும், எஸ். வையாபுரிப் பிள்ளை 1912இல் தி.க. கனகசுந்தரம்பிள்ளை ஏட்டுப் பிரதியைப் பார்த்து எழுதிய கைப்பிரதியும் பயன்பட்டன' என்று குறிப்பிட்டுள்ளதனைக் கூறலாம். இதில் கடிதப் பிரதி, கைப்பிரதி ஆகிய சொற்கள் தாள் சுவடிகளையே குறிப்பிடுகின்றன.
இதிலிருந்து தமது பதிப்பிற்கு வ.உ.சி. மூன்று தாள் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது. அவற்றை த.மு. சொர்ணம்பிள்ளை, தி.நா.சுப்பிரமணிய ஐயர், எஸ். வையாபுரி பிள்ளை ஆகியோரிடம் இருந்து பெற்றுள்ள தகவலும் புலனாகிறது. அதேபோன்று சி.வை. தாமோதரம் பிள்ளையும் தமது தொல்காப்பியப் பதிப்பிற்குத் தாள் சுவடியினைப் பயன்படுத்தியுள்ளார்.
இதனை ச.வே. சுப்பிரமணியம் தொல்காப்பியப் பதிப்புகள் நூலில் "இதைப் பதிப்பித்த சாமுவேல் பிள்ளையின் சுவடி எங்கிருந்து கிடைத்தது? எத்தனை சுவடிகள் கிடைத்தன போன்ற செய்திகள் எதுவுமில்லை.
இருப்பினும் ஓலைச்சுவடியோ, தாள் சுவடியோ இன்றி இவர் பதிப்பித்திருக்க இயலாது. இவரிடம் தொல்காப்பியப் பொருளதிகாரம் உரையுடனுள்ள கையெழுத்துப் படியைப் பெற்றதாகச் சி.வை. தாமோதரம் பிள்ளை தம் பொருளதிகாரப் பதிப்புரையில் குறிக்கின்றார்' என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.
இவ்வாறு பதிப்பாசிரியர்கள் பலரும் தங்கள் பதிப்பிற்குத் தாள் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மூலம் தொல்காப்பியப் பதிப்புகளின் முன்னோடிகளாக மழவை மகாலிங்கையர், எஸ்.சாமுவேல் பிள்ளை, வ.உ. சிதம்பரனார், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடலாம். தமிழின் செவ்வியல் நூல்கள் பலவும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட தாள் சுவடிகள் பல்வேறு வகைகளில் துணைநின்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.