தமிழ்மொழியே உலகமொழி!

தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. தமிழ் உலக நாகரிக, பண்பாட்டின் தொட்டில் என்றே கூறலாம்.
தமிழ்மொழியே உலகமொழி!


தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. தமிழ் உலக நாகரிக, பண்பாட்டின் தொட்டில் என்றே கூறலாம். தமிழ்மொழி உலகமொழி, இனம் கடந்த மொழி. ஒரு மொழி பிற மொழியுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சமாக மூன்று சொற்களுக்கு மேல் ஒற்றுமை வர முடியாது. ஆனால், தமிழ்மொழியில் இருந்து உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் ஓர் ஒழுங்கு அமைப்புடன் கூடிய சொல், தொனி, தொடர்பு 20 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது.

ஆங்கிலத்தில் 20 விழுக்காடு நேரடி தமிழ்மொழி உள்ளது. இலத்தீன், கிரேக்கம் ஆகியவற்றில் 50 விழுக்காடு நேரடி தமிழ்மொழி உள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ் ஓர் இயங்கு மொழி. திராவிட மொழிகள் அனைத்துக்கும் தாய்த்தமிழே மூலமாக விளங்குகிறது. ஆப்பிரிக்க மொழிகள் அனைத்துக்கும் அடி ஆணிவேர் தமிழே. தமிழின் பழைமை என்பது உலகின் எந்த மொழியும் எட்டிவிட இயலாத காலகட்டத்தில் உள்ளது.

தமிழ்ச்சொற்களுக்குத் தமிழிலேயே வேரும் பொருளும் உண்டு. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்றார் தொல்காப்பியர். "கட்டுமரம்' என்ற தமிழ்ச்சொல் உலகின் எந்த மொழியிலும் கட்டுமரம்தான். மொழியின் ஆளுமைத்திறம் என்பது இதுதான். இருபது மொழிகளில் ஆளுமை மிக்கவராக இருந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "தமிழ்தான் ஞால முதன்மொழி' என்றார். இலத்தீன், கிரேக்கம், ஈப்ரு தமிழில் இருந்து வந்த முறையை எழுத்துகள் வழியே நிறுவினார்.

பழங்காலத்தில் இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றம் சிறப்பாக இருந்தது. இன்றும் தென்கொரியாவில் உள்ள வீடுகளில் தமிழ்ச் சொற்கள் ஒலிக்கின்றன. அம்மா அப்பா கொரிய மொழியிலும் தாய் தந்தையைக் குறிக்கச் சொல்லப்படுகிறது. கொரியக் குழந்தைகள் முதலில்  கற்றுக்கொள்ளும் அடிப்படைச் சொற்களில் இவை முகாமையானவை.

தமிழில் இயல்பாக நாம் பயன்படுத்தும் அச்சச்சோ, அப்பாடா எனும் சொற்களை அப்படியே கொரிய மொழியில் ஒலிக்கின்றனர். "உயரம்' என்பதை "உரம்' என்றும்,  "நீ திரும்ப வா' என்பதை "நீ இங்கே பா' என்றும் கூறுகின்றனர். "புல்லை வெட்டு'  என்பதை "புல்வேடா'என்று சொல்கின்றனர். பெரிய அளவில் இரு மொழிகளுக்கும் இடையில் வேறுபாடு இல்லை.

புதியதை "புது' என்கின்றனர் கொரியர்கள். கொரிய நாட்டு மக்கள் பேசும் மொழி அங்குல் (ஹங்குல்) எனப்படும். ஆரம்ப காலத்தில் சீனமொழி பேசி வந்த கொரிய மக்கள், 16ஆம் நூற்றாண்டு முதல் அங்குல் (ஹங்குல்) எழுத்து வடிவத்தை ஏற்றுப் பின்பற்றத் தொடங்கினர்.

அதன்பின் அவர்களின் பொருளாதார முன்னேற்றம் வேகமெடுத்தது. கல்வியறிவு விழுக்காடு உயர்ந்தது. ஒவ்வொரு நாடும் மொழியை முன்னிறுத்தியே முன்னேறுகிறது. தமிழ்  கொரியன் மொழிகளை ஒப்பிட்டால் 1500க்கும் மேற்பட்ட ஒலிப்புகள் பொதுவாக உள்ளன என்கின்றனர் மொழியறிஞர்கள்.

கொரியாவில் குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தும் சொற்களும் தமிழ்மொழிச் சாயலில்தான் இருக்கின்றன. தூரிதூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு கொஞ்சு, ஜம்ஜம், அபூபா, குக்குக்கூ, தேரிடா எனக் கொரிய மொழியில் குழந்தைகளைக் கொஞ்சுகின்றனர்.

தமிழ் மொழியைப் போல் கொரிய மொழியிலும் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் உள்ளன. கொரிய மொழியின் அடிப்படையான உயிர் எழுத்துகள் "யின்யாங்' கொள்கையின்படி ஆகாயம்,  நிலம், மனிதன் என்ற மூன்று கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழில் அடிப்படை மெய் எழுத்துகள் ஒலி எழுப்பும்போது நமது உறுப்புகளான நாக்கு, தொண்டை, வாய், பல் ஆகியவை ஒலி எழுப்பும் அமைப்பின்படி உள்ளது.  தினத்தைத்  தமிழில் "நாள்' என்பது போல் கொரிய மொழியில் "நால்' என்கின்றனர்.

தமிழின் வரிவடிவம் கொண்டே கொரிய மொழியின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கும் சான்றுகள் உள்ளன. மொழியின் ஒற்றுமையைப் போன்றே பண்பாட்டுப் பரவலும் நாம் பார்க்க வேண்டியதே. பாண்டிய நாட்டின் இலச்சினையான மீன் இலச்சினை கொரியாவில் பயன்படுத்தப்படுகிறது. "சொல்லா' என்ற மாவட்டம் கொரியாவில் உள்ளது. இது "சோழா' என்பதன் திரிபு என்றும் கூறுவர்.

உணவுப் பெயரிலும்கூட தோசை, கொழுக்கட்டை எனப் பயன்படுத்துகின்றனர்.

சென்னை இன்கோசென்டரைச் சேர்ந்த நந்தினி மேனன், தமிழ்  கொரிய மொழிகளில் 3,000க்கும் அதிகமான பொதுவான சொற்கள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். சான்றாக, தமிழில் முடி என்பதனைக் கொரிய மொழியில் மாலி என்று ஒலிப்பர். தொப்பை  தொப்பு  எனப்படுகிறது.

தமிழ்  கொரிய மொழிகளில் இப்படிப் பல்வேறு சொற்கள் ஒற்றுமை பெற்றுள்ளன. மொழியில் மட்டுமல்ல பண்பாட்டிலும் கூட தமிழர்களின் தொன்மை அங்கு உள்ளது.  அங்கும் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் உண்டு என்கின்றனர்.

தமிழுக்கும் கொரிய மொழிக்குமான உறவு என்பது தாய்  சேய்  உறவு என்றே கூறலாம்.  இரு நாடுகளுக்கும் இடையே வணிகத் தொடர்பில் தொடங்கிய நல்லுறவு உயிரும் உணர்வும் கலந்த மொழிப் பரவலில் முடிந்திருக்க வேண்டும்.  
ஒரு மொழியின் சிறப்புக்கும், பரவலுக்கும் மூன்று கூறுகள் முகாமையானதாகக் கூறப்படுகின்றன. இலக்கியச் சிறப்பு, வணிகச் சார்பு, தொல்லியல் தன்மை. இவை மூன்றுமே நம் தாய்மொழியாம் தமிழுக்குரிய தனிச்சிறப்பு. அதனால்தான் அது இன்றும் நின்று மிளிர்கின்ற நிலைபேறு பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com