தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இந்த வாரம் கலாரசிகன் - 25-06-2023

சாகித்திய அகாதெமியின் இந்த ஆண்டிற்கான (2023) "யுவ புரஸ்கார்', "பால சாகித்திய புரஸ்கார்' விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

News image
Updated On :25 ஜூன் 2023, 1:36 pm

DIN


சாகித்திய அகாதெமியின் இந்த ஆண்டிற்கான (2023) "யுவ புரஸ்கார்', "பால சாகித்திய புரஸ்கார்' விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. "திருக்கார்த்தியல்'  எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு "யுவ புரஸ்கார்' விருதும், "ஆதனின் பொம்மை' எனும் நாவலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு குழந்தைகள் இலக்கியத்துக்கான "பால புரஸ்கார்' விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் "தினமணி' சார்பிலும், தனிப்பட்ட முறையில் எனது சார்பிலும் வாழ்த்துகள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால், புத்தக விமர்சனத்துக்காக ராம் தங்கம் எழுதிய "கடவுளின் தேசத்தில்' என்கிற புத்தகம் வந்திருந்தது. அந்தப் புத்தகத்தை வேறொருவரிடம் விமர்சனம் எழுதுவதற்காக தேர்ந்தெடுத்துக்கொடுத்தேன் என்றாலும், அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று எனக்குள் ஏதோ ஓர் உந்துதல். ஒரு பிரதியை பத்திரப்படுத்திக்கொண்டேன். 

அது ஒரு பயணக்குறிப்பு நூல். நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மாஹே வரையில் உள்ள பல இடங்களுக்கு அவர் மேற்கொண்ட பயணங்கள் குறித்த நூல் அது. அந்தப் புத்தகத்தில் உள்ள அத்தனை இடங்களும் எனக்கு அத்துப்படி என்பதால், அதை ஆர்வத்துடன் படித்தேன்.

அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, ராம் தங்கத்தின் எழுத்து நடை என்னைக் கவர்ந்தது. சரளமாக, அவ்வப்போது நாஞ்சில் நாட்டுக்கே உரித்தான சொற்களோடு  அமைந்த அந்த நடையை நான் மிகவும் ரசித்தேன். அவரது சிறுகதைத் தொகுப்புக்கு "யுவ புரஸ்கார்' விருது வழங்கப்பட்டிருப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. அதற்கான தகுதி அந்த எழுத்துக்கு இருக்கிறது.

எழுத்தாளர் கா.உதயசங்கரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரது எழுத்துதான் எனக்கு அறிமுகம். சிறுகதை, கட்டுரை, குறுநாவல், மொழிபெயர்ப்பு என்று நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கும் உதயசங்கரின் "ஆதனின் பொம்மை' நாவலின் கதைக்களம் "கீழடி'. "கீழடி' அகழாய்வு  வெளிப்படுத்திய வரலாற்றை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் நாவல் என்பதுதான்  "ஆதனின் பொம்மை' என்கிற படைப்பின் தனிச்சிறப்பு.

ரயில்வே துறையில் நிலைய அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற இந்த கரிசல் வட்டார இலக்கியவாதியின் 43 ஆண்டு எழுத்துப் பணிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் "பால புரஸ்கார்' விருது.

-------------------------------------------------------------

பேராசிரியர் சாலமன் பாப்பையாவைத் தலைவராகவும், "விஸ்வாஸ்' நிறுவன அதிபர் சங்கர சீதாராமனைப் புரவலராகவும் கொண்டு இயங்கும் மதுரைக் கம்பன் கழகம் செய்துவரும் தமிழ்ப்பணிகள் குறித்து நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. 

மாதந்தோறும் மதுரைக் கம்பன் கழகம் தமிழறிஞர் ஒருவரை அழைத்து ஆய்வுச் சொற்பொழிவு நடத்துகிறது. மாதாமாதம் வெவ்வேறு தலைப்புகள் தரப்படுகின்றன. அப்படி நடத்தப்படும் சிறந்த ஆய்வுகளை ஆய்வுக் கட்டுரைகளாக பேச்சாளர்கள் வழங்க பணிக்கப்படுகிறார்கள். அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் நடக்கும் கம்பன் விழாவின்போது புத்தகமாக வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு கம்பன் கழகம் வெளியிட்ட புத்தகம்தான் "கம்பனில் பயணங்கள்'. 

கம்பகாதையில் காணப்படும் முன்நிகழ்வுகளின் நினைவுகள், ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் "பிளாஷ்பேக்' குறித்த கட்டுரையுடன் தொடங்குகிறது இத்தொகுப்பு. "பின்னோக்கு உத்தி' எனப்படும் "பிளாஷ்பேக்' என்பது, இன்றைய திரைக்கதை உத்தியல்ல. கம்பன் எப்போதோ கையாண்டு பார்த்தது என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. 

அதேபோலத்தான் இரண்டாவது கட்டுரையான "வருமுன் உரைத்தல்'. முந்தைய கட்டுரையை எழுதியவர் ரெ. ராஜ்குமார் என்றால், இதை எழுதியிருப்பவர் த. சரவண செல்வன். இரண்டு கட்டுரைகளுமே கம்பன் குறித்த ஆய்வை மேற்கொள்பவர்களுக்கும், இலக்கியப் பேச்சாளர்களுக்கும் பயனுள்ளவை. 

-------------------------------------------------------------

பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரத்தின் "கம்பரும் சாமிநாதையரும்', முனைவர் குரு.ஞானாம்பிகாவின் "கம்பனில் பயணங்கள்' என்று கட்டுரை வரிசை நகர்கிறது. 

க. கருணாநிதியின் "கம்பனில் பேருருக் காட்சிகள்', முனைவர் செ. ஜகந்நாதனின் "கம்பராமாயண வை.மு.கோ உரை', முனைவர் மு.அருணகிரியின் "கம்பரும் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரும்' கட்டுரைகள் சுவாரஸ்யமான ஆய்வுகள். 

வெவ்வேறு கம்பன் கழகங்கள் ஆண்டுதோறும் வெளிக்கொணரும் மலர்களில் இடம்பெறும் கட்டுரை ஒவ்வொன்றும் அற்புதமான ஆய்வுகள். அவை பெரும்பாலும் புத்தகமாக தொகுக்கப்படாமல் போவது மிகப்பெரிய இழப்பு. 
பேராசிரியர் சாலமன் பாப்பையாவால் நிறுவப்பட்டு, அவரது சீரிய தலைமையில் இயங்கும் மதுரைக் கம்பன் கழகம் ஆய்வுச் சொற்பொழிவுகளை தொகுத்து புத்தகமாக்கும் அரிய பணியின் மூலம் தமிழுக்கும், கம்ப இயலுக்கும் ஆற்றி வரும் தொண்டு அளப்பரியது. "கம்பனில் பயணங்கள்' அவற்றில் ஒன்று.

-------------------------------------------------------------

தனிச்சுற்று இதழான "காணிநிலம்' இடைவெளி விட்டு வெளிவருவதில் வியப்பில்லை. பெரும்பாலான சிற்றிதழ்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, இந்த இதழும் எதிர்கொள்கிறது. ஆயுள் சந்தாபோல, ஒவ்வொரு இதழையும் வெளிக்கொணரப் புரவலர்களைப் பெற்றால் மட்டும்தான், தொடர்ந்து சிற்றிதழ்களை வெளிக்கொணர முடியும்.

"காணிநிலம்' இதழின் ஜூலை } டிசம்பர் 2022 இதழில் வெளியாகி இருக்கிறது கவிஞர் வளவன் கரிகாலனின் "சொல்லிவிடாதீர்கள்' என்கிற இந்தக் கவிதை. பணி ஓய்வுபெற்று, முதுமையை பொறுமையாகக் கடந்து செல்பவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்தக் கவிதை, அவர்களுக்கு ஆறுதல்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

சொல்லிவிடாதீர்கள்
"சும்மாதான் இருக்கீங்க'
என்று 
எவரையும்
எதற்காகவும்!
நீங்கள் நியாயப்படுத்தவோ
சமாதானப்படுத்தவோ முடியாத
பெருவலி அது!
சொல்லிவிடாதீர்கள்
அப்படி
சட்டென்றெவரையும்
எதற்காகவும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.