தாறு களைந்து ஏறு என்று ஏற்றி... 

கரிகாற் பெருவளத்தானாகிய சோழமன்னன் ஒரு மாவீரன். அவன் மாவீரன் என்பதுடன், வறியோர்க்கும் புலவர்கட்கும் கலைஞர்கட்கும் வாரி வாரி வழங்கும் புரவலனும் ஆவான்.
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி... 

கரிகாற் பெருவளத்தானாகிய சோழமன்னன் ஒரு மாவீரன். அவன் மாவீரன் என்பதுடன், வறியோர்க்கும் புலவர்கட்கும் கலைஞர்கட்கும் வாரி வாரி வழங்கும் புரவலனும் ஆவான்.  அவன், காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கியவன். அவனது கருணையுள்ளத்தைப் பொருநராற்றுப் படை இலக்கியத்தில் முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் அழகுறப் பாடுகின்றார்.

கரிகாற் சோழனிடம் வந்து பரிசு பெற்றுத் திரும்பும் இரவலன் ஒருவன், அதே மன்னனிடம் பரிசு பெற வந்த பொருநன் ஒருவனைக் கரிகாலனிடம் பரிசில் பெறச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகின்றான். அப்பொழுது, ஏற்கெனவே தமிழ்ப்புலவர்கள் உள்ளிட்ட கலைஞர்களின் மீது அம்மன்னன் கொண்டிருக்கும் கருணையுள்ளத்தை நயம்பட எடுத்துக்கூறி, பொருநராகிய உம்மிடமும் அதே அளவு அன்புகாட்டக் கூடியவன் அவன் என்பதை விளக்கி, பின்வருமாறு நம்பிக்கையூட்டுகின்றான் அந்த இரவலன்.

பொருநனே! கரிகாற் பெருவளத்தான், தன்னிடம் வந்து பரிசு பெற்ற புலவர்கள் விடைபெற்றுச் செல்லும்பொழுது மிகவும் வருந்துவான்; அரக்கு ஊட்டப்பட்ட தலையாட்டம் என்னும் அணி அணிவிக்கப்பெற்ற, அசையும் பிடரி மயிரை உடைய பால்போன்ற வெண்ணிறமான நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அவர்களை அமர்த்திவைத்து வழியனுப்புவான்.

விருந்து போற்றும் மரபுப்படி, அவர்களின்பின் ஏழடி வரையில் சென்று விடை தருவான். ஏற்கெனவே தேரேறிய அனுபவம் பெற்றிராத இரவலரை, தேரில் ஏறி அமரும் விதத்தை அறிவுறுத்தி, அதில் ஏற்றுவான்.

அனைத்து உயிர்களின் மீதும் இரக்கம் காட்டும் தமிழ்க் கலைவாணர்கள், பெரும்பாலும் வலிமை குன்றியவர்களாகவே இருப்பர். ஆதலால் மறவர் முதலியோர் செலுத்தும் அளவிற்குக் குதிரைகள் விரைவாகச் செலுத்தப்பட்டால் அப்பயிற்சியற்ற கலைவாணராகிய பொருநர் அக்குதிரைகள் செல்லும் வேகத்தைத் தாங்கமாட்டார். 

எனவே, குதிரைகள் மெல்லவே செல்லவேண்டும் என்று கருதி, குதிரைகளை விரட்டி விரைவாகச் செலுத்தப் பயன்படுத்தப்படும் தாற்றுக்கோலிலுள்ள தாற்றுமுள்ளை (ஆணியை) அகற்றிவிட்டு வெறும் குச்சியை மட்டும் கொடுப்பான் கரிகாற் சோழன். அவ்விலக்கிய அடிகள் பின்வருமாறு:

கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின்சென்று, கோலின்
தாறு களைந்து, ஏறுஎன்று ஏற்றி, வீறுபெறு
பேரியாழ் முறையுளிக் கழிப்பி, நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா இருக்கை
தரவு இடைத் தங்கல் ஓவிலனே       
              (பொருந: 163}173)

ஈர நெஞ்சினனான கரிகாலன், ஏனைய யாழ்ப்பாணர்களுக்குச் 
செய்யும் அதேவகைச் சிறப்பினைப் பலருக்கும் செய்வதுடன் 

நீர்வளம் மிக்க ஊர்களையும், களிறுகளையும் இடையறாது தருபவன் என்று, இரவலன் ஒருவன் கூற்றில் வைத்துப் பாடுவது சிறப்பானது.

தாற்றுக் கோலிலுள்ள ஆணியால் குத்தித்தூண்டி விரட்டினால், குதிரைகள் வருந்தும். இதுவும் ஒருவகையான வருத்தம்தான். அதற்காக, அவன் ஆணியை அகற்றவில்லை. ஆணியால் தூண்டி, அதனால் ஓடும் குதிரைகளின் வேகத்தைத் தாங்காத இயல்புடைய கலைவாணர் வருந்துவரே என்றெண்ணிய கருணையால், தாற்றுக்குச்சியிலிருந்த ஆணியை நீக்கித்தந்தான் கரிகாலன் என்பது படித்து இன்புறத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com