இந்த வார கலாரசிகன் - (5-03-2023)

விஐடி வேந்தர் ஜி. விசுவநாதனின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை வேலூர் சென்றிருந்தேன்.
இந்த வார கலாரசிகன் - (5-03-2023)
Published on
Updated on
2 min read

விஐடி வேந்தர் ஜி. விசுவநாதனின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை வேலூர் சென்றிருந்தேன். இரா. செழியனின் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாடுவது தொடர்பாகக் கலந்தாலோசனை நடத்தத்தான் அவர் அழைத்திருந்தார். என்னை மட்டுமல்ல, இரா. செழியனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சிலரையும், அவரது குடும்பத்தினரையும் வரவழைத்திருந்தார். வெளிநாடுகளில் வாழும் அவரது சகோதரி உள்ளிட்ட சில உறவினர்கள் காணொலி மூலம் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

1962 முதல் 1977 வரையில் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும், 1978 முதல் 1984 வரையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த இரா. செழியனின் நாடாளுமன்றப் பணிகள் குறித்துத் தனியாகவே ஒரு புத்தகம் எழுதலாம். அரசியலில், தன்னைத் தேடிவந்த பதவிகளை நிராகரித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 1947-இல் அண்ணல் காந்தியடிகளும், 1977-இல் "லோக் நாயக்' ஜெயப்பிரகாஷ் நாராயணனும் தேசிய அளவில் அந்தப் பட்டியலில் முதல் இரண்டு நபர்களாக இருப்பார்கள் என்றால், தமிழகத்தைப் பொறுத்தவரை இரா. செழியன் முதலிடத்தில் இருப்பார். 

வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதும் சரி, ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோதும் சரி, இரண்டு முறை ஆளுநர் பதவி அவரைத்தேடி வந்தது. தனது கொள்கைக்கு ஆளுநர் பதவி உடன்பாடானதல்ல என்பதால் அந்த வாய்ப்பை தயக்கமே இல்லாமல் மறுத்துவிட்டவர் இரா. செழியன். அதேபோல, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அதிமுக சார்பில் அவரை மாநிலங்களவை உறுப்பினராக்க விரும்பினார். கட்சி சார்பில்லாமல் சுயேச்சையாக வேண்டுமானாலும் அவருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். அதையும் மறுத்துவிட்டவர் அவர்.

இரா. செழியன் இந்திய ஜனநாயகத்துக்கு வழங்கியிருக்கும் மிகப் பெரிய பங்களிப்பு, அழிக்கப்பட்ட  ஷா கமிஷன் அறிக்கையைத் தேடிப்பிடித்து பதிப்பித்தது. 1980-இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருந்த இந்திரா காந்தி, தனது எமர்ஜென்சி கால நடவடிக்கைகள் குறித்து விசாரித்த ஷா கமிஷன் அறிக்கையின் எல்லா பிரதிகளையும் தேடிப்பிடித்து அழித்து விட்டார். அதன் ஒரு பிரதிகூட இல்லை என்று விக்கிபீடியாவே அறிவித்தது.

முக்கியமான வரலாற்று ஆவணமான ஷா கமிஷன் அறிக்கையைத் தேடிய இரா. செழியனின் முயற்சி வெற்றி பெற்றது. லண்டன் பல்கலைக்கழகத்தின் "ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிகன் ஸ்டடீஸ்' அதன் பிரதியை வைத்திருப்பது தெரிந்தது. ஷா கமிஷன் அறிக்கையை முழுவதுமாக மீட்டெடுத்துப் பதிப்பித்தார் இரா. செழியன். அவரது 90-ஆவது பிறந்த நாளின்போது ஷா கமிஷன் அறிக்கை புத்தகத்தின் பிரதியைத் தனது கையொப்பமிட்டு இரா. செழியன் எனக்கு அன்பளிப்பாகத் தந்ததைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறேன்.

அடுத்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கும் இரா. செழியனின் நூற்றாண்டை, சுதந்திர இந்தியா கொண்டாட வேண்டும். ஷா கமிஷன் அறிக்கையை மீட்டெடுத்ததற்காக அவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கினாலும் தகும். கட்சி மனமாச்சரியங்களை அகற்றி நிறுத்தித் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்கு தேசிய அளவில் சிறப்புச் சேர்த்த அந்தப் பெருமகனின் நூற்றாண்டைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

----------------------------------------------------------

டாக்டர் முகமது அலீமின் "மருத்துவத்தில் மாற்றுக் கருத்துகள்' புத்தகம் குறித்த எனது பதிவு ஒவ்வொரு வாரமும் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருப்பேன், வேறொரு புத்தகம் முந்திக் கொண்டுவிடும்.

பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் முகமது அலீம் இன்று நம்மிடையே இல்லை. அவரது இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிலும் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது மறைவுக்கும் செல்ல முடியவில்லை.

பத்மஸ்ரீ "சிற்பி' பாலசுப்பிரமணியம் அணிந்துரை வழங்கி இருக்கிறார் என்றால் இந்தப் புத்தகம் குறித்து அதற்கு மேலும் சொல்ல என்ன இருக்கிறது? ஏனைய ஹோமியோபதி மருத்துவர்களால் வழிகாட்டியாகக் கருதப்படுபவர் என்று டாக்டர் வி. முத்துக்குமாரும், "மாற்று மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அற்புதமான மருத்துவ வழிகாட்டி' என்று எம்.ஏ. முஸ்தபாவும் சிறப்புச் சேர்க்கும்போது, புத்தகம் மேலும் சிறப்புப் பெறுகிறது.

வயது முதிர்ந்த மலையாள ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை சமீபத்தில் திருமண வரவேற்பு ஒன்றில் சந்தித்தேன். கேரளத்தில் வைத்தியம் பார்ப்பதை விட்டுவிட்டு, சென்னையில் பேரன், பேத்திகளுடன் குடியேறிவிட்டவர் அவர். 

"பசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களா? பிரச்னை எதுவும் இல்லாமல் மலஜலம் கழிக்கிறீர்களா? குறைந்தது ஆறுமணி நேரம் நன்றாகத் தூங்குகிறீர்களா? கை கால் மூட்டுகளில் வலி இல்லாமல் இருக்கிறதா? கபம், மூச்சிறைப்பு இல்லாமல் இருக்கிறதா?' - இவையெல்லாம் சரியாக இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறீர்கள் என்று அந்த வைத்தியர் தெரிவித்தார்.

அதைத்தான் தனது புத்தகத்தில் வலியுறுத்தியிருக்கிறார் டாக்டர் முகமது அலீம். "பசித்தால் சாப்பிடுங்கள், தள்ளிப் போடாதீர்கள்; தாகமெடுத்தால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்காதீர்கள்; தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடிக்காதீர்கள். பசி, தாகம், மூச்சு, தூக்கம்' இவைதான் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான உள் இயக்கி' என்கிறார் அவர்.

கார்ப்பரேட் மருத்துவத்தின் அபாயங்களைச் சுட்டிக்காட்டி, அதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் காரண காரியங்களுடன் விளக்கும் சாமானியனின் கையேடுதான் "மருத்துவத்தில் மாற்றுக்கருத்துகள்'.

----------------------------------------------------------

நாஞ்சில்நாடனின் நாக்கும், வாக்கும் தயவுதாட்சண்யமே இல்லாமல் மனதில் தோன்றுவதை உள்ளது உள்ளபடி போட்டு உடைத்துவிடும். அதற்கு உதாரணம், "காக்கைச் சிறகினிலே...' ஜனவரி மாத இதழில் வெளியாகி இருக்கும் இந்தக் கவிதை - 

தொல்லை பெருத்ததென
நோய் பரப்பு தென
தெரு நாய்களைக்
காயடிக் கிறார்கள்
கோழி பன்றியைக்
கொன்றழிக் கிறார்கள்
தலைமுறை தலைமுறையாக
நோய் பெருக்கித்
தீமையும் வளர்க்கும்
மாந்தரையும் கணக்கில்
கொண்டால்
போகூழ் விலகும்
ஆகூழ் நிலைக்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com