புறநானூறும் வேதங்களும் 

நான்கு வேதங்கள் என்பவை வடமொழிக்கும் ஆரியர்களுக்கும் உரியன என்றும் தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொடர்பு அற்றவை என்றும் கருத்து நிலவுகிறது.
புறநானூறும் வேதங்களும் 
Updated on
2 min read

நான்கு வேதங்கள் என்பவை வடமொழிக்கும் ஆரியர்களுக்கும் உரியன என்றும் தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொடர்பு அற்றவை என்றும் கருத்து நிலவுகிறது. நமது இலக்கியங்களையும் புராணங்களையும் உற்று நோக்கும்போது அவற்றில் காணக் கிடைக்கும் தகவல்கள் வேறுவிதமான கருத்தை முன் வைக்கின்றன. தமிழகத்தின் வரலாறு, பண்பாடு இவற்றை எடுத்தியம்பும் சங்க நூல்களில் பதிற்றுப்பத்து, புறநானூறு இவை காட்டும் தகவல்கள் நமக்கு ஒரு தெளிவான பார்வையை ஏற்படுத்துகின்றன.

பதிற்றுப்பத்து தமிழகத்தின் எல்லைகள் பற்றிக் கூறும் பொழுது, வடக்கு எல்லை இமயம் என்றுகூறுகிறது.

வடதிசை எல்லாம்இமயம் ஆகத்
தென்னங்குமரியோடு ஆயிடைஅரசர்
முரசுடைப்பெருஞ்சசமம் ததையஆர்ப்பெழ

இப்படிக் கூறும் அதேநூல் குமரிக்கண்டம் பற்றிப் பேசும்போதும் அதன்வடக்கு எல்லை இமயம் என்றே குறிப்பிடுகிறது.

ஆரியர் துவன்றியபேரிசை இமயம் தென்னம்குமரியோடு ஆயிடை இப்படி இமயத்தைத் தன்னுள் கொண்டதாகவே தமிழகத்தை சங்க இலக்கியம் காட்டுகிறது. இமயம் நமக்கானதாய் இருந்தபோது வேதம் மட்டும் வேறுபட்டது என்று எப்படி ஒதுக்கி விட முடியும்?

புறநானூறு பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் வீரர்களுக்குச் சோறிட்டான் என்று பேசுகிறது. 

அலங்குளைப் புரவிஐவரோடு சினைஇ,
நிலந்தலைக்கொண்ட பொலம்பூந்தும்பை
ஈரைம் பதின்மரும்பொருது, களத்துஒழியப்
பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாதுகொடுத்தோய்
தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் 
                                                    மாண்ட போர்க்களத்தில் 
இருபாலாருக்கும்பெருஞ்சோறு கொடுத்தவன் நீ 

இப்படி பாரதப் போருக்கு உணவுப் பண்டங்கள்அனுப்பினான் என்று சொல்லாமல் பதமான சோறிட்டான் என்பதன் மூலம் சமைத்த உணவினைத் தந்தான் என்கிறார் புலவர். இதனால் அவனும் போர்க்களத்தில் இருந்தமை 
தெளிவாகிறது.

தமிழ் இலக்கியத்தின்வேர்கள், நம் நிலப் பரப்பு, வரலாற்றின் காலம் இவற்றின் ஆழ அகலங்களைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில், பத்ம புராணம், மச்சபுராணம் போன்ற புராணங்கள் நமது பழந்தமிழ் ஊர்களைக் களமாகக் கொண்டு அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம், மதுரை போன்ற ஊர்கள் பற்றி அவை பேசுகின்றன. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு பார்த்தால் வேதம் பற்றிய கருத்திலும் சற்று தெளிவு ஏற்படும்.

புறநானூற்றின் பலபாடல்களில் வேதம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இறைவணக்கச் செய்யுளான முதல் பாடலிலேயே சிவபெருமானைப் பற்றிப் பாடுகிறார் பெருந்தேவனார். சிவனை வருணிக்கும் புலவர், வேதம் உணர்ந்த அந்தணர்கள் தொழுது ஏத்துவார்கள் என்கின்றார்.

கறைமிடறுஅணியலும்அணிந்தன்று; அக்கறை
மறைநவில்அந்தணர் நுவலவும்படுமே

இன்னும், பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், பால் புளித்தாலும் பகல் இருளானாலும் நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக என்கிறார்.

பாஅல் புளிப்பினும்,பகல் இருளினும்,
நாஅல் வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடுமுழுதுசேண்விளங்கி

 என நால்வேதம் பற்றி மட்டும் இப்பாடலில் குறிப்புத் தரவில்லை. இன்னும்அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீ பற்றியும் பேசுகிறார் புலவர்,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
 சிறுதலை நவ்விப்பெருங்கண்மாப்பிணை,
அந்தி அந்தணர்அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற்றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும்
                                                                                 போன்றே
 இமயம், பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும்முத்தீ விளக்கொளியில் நவ்வி } மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன்மக்கள்} சுற்றம் நிலை கொள்வதாகுக. 

இந்தப் பாடல் வேத, ஆரியக் கருத்துகள் பற்றிய தெளிவைத் தருகிறது. 
இதே போல,
நால் வேதத்து
அருஞ் சீர்த்திப்பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதிபொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின்வேள்வி முற்றி முழவினை முழக்கிக் கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப்பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே, நால்வேதச் சிறப்பு மிக்க, குழியில் நெய் ஊற்றி ஆவி பொங்க வேள்வி செய்து தூண் நட்டுச் சிறப்பெய்தியவனே என கபிலர், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை வாழ்த்துகிறார். 

இங்கும் வேதம் மற்றும் வேள்வி பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.

காரிகிழார், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மன்னனை வாழ்த்தும்போது, 
 பணியியர் அத்தைநின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர்நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக, பெருமநின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர்ஏந்துகை எதிரே

என்று பாடுகிறார். அதாவது, "நகர்வலம் வரும் முக்கண்ணரான சிவபெருமான் முன் மட்டுமே உன் குடை தாழ்வு கொள்ளட்டும், நான்மறைகளை ஓதும் முனிவர்கள் முன் மட்டுமே உன் சிரம் தாழ்த்துவாயாக' என்கிறார்.


புறநானூறு நம் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல்முறை சொல்லும் நூல் எனில் அது சொல்லும் வேதம் பற்றிய செய்திகளும் நம்முடையவைதானே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com