இந்த வாரம் கலாரசிகன் - 12-03-2023

ஒருசிலரைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் நமது வியப்பு தீராது.
இந்த வாரம் கலாரசிகன் - 12-03-2023
Updated on
2 min read

ஒருசிலரைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் நமது வியப்பு தீராது. இந்திய வரலாற்றில் அப்படி குறிப்பிடத்தகுந்த ஒருவர் இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் என்று சொன்னால், அதை மறுப்பவர் யாருமே இருக்க மாட்டார்கள். அவரைப் பற்றி புத்தகம் ஏதாவது கண்ணில் பட்டால், தெரிந்த செய்தியாகவே இருந்தாலும், மீண்டும் அதை படிக்கத் தோன்றும்.

விமர்சனத்துக்கு வந்திருந்தது பி.எம். நாயர் எழுதிய "கலாம் காலங்கள்' என்கிற புத்தகம். புத்தகத்தை எழுதியவரும், புத்தகத்தின் பேசுபொருளாக இருப்பவரும் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் என்பதால் அதைப் படிக்கும் ஆர்வம் மேலும் அதிகரித்தது. வேடிக்கை என்னவென்றால், இந்தப் புத்தகத்தின் மூல நூலான "கலாம் எஃபெக்ட்' என்கிற ஆங்கிலப் புத்தகத்தை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.

எனது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. 1986}இல் "சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராக இருந்தபோது, புதுச்சேரி சிறப்பிதழ் ஒன்றை வெளியிட ஆசிரியர் சாவி சார் தீர்மானித்தார். அதற்காக ராணிமைந்தன், புகைப்படக் கலைஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் சில நாள்கள் புதுவையில் தங்கியிருந்து அந்த மலருக்கான கட்டுரைகளையும், படங்களையும் தயார் செய்தோம். 

அப்போது புதுவை மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்தார் பி.எம். நாயர். நேர்மையும் திறமையும் ஒருங்கிணைந்த மிடுக்கான அந்த அதிகாரி, புதுவை மக்களின் அன்பையும், மரியாதையையும் பெற்றிருந்ததைப் பார்த்து நாங்கள் வியந்தோம். அகில இந்திய அளவில் மிகப் பெரிய பதவிகளை வகித்து பணி ஓய்வு பெற்ற பி.எம். நாயர், தனது ஓய்வு காலத்துக்காகப் புதுவையை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதிலிருந்தே அவருக்கு அந்த மண்ணின் மீதிருக்கும் பற்றுதலைத் தெரிந்து கொள்ளலாம்.

புதுவை மட்டுமல்லாமல், அருணாசல பிரதேசம், கோவா, மிஜோரம், லட்சத் தீவுகள், தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றிய பி.எம். நாயரின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா? அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டபோது, குடியரசுத் தலைவர் மாளிகையின் செயலராகப் பணிபுரிய டாக்டர் கலாமால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.எம். நாயர். 

டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த ஐந்து ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் மாளிகையின் செயலராக இருந்த பி.எம். நாயரின் அனுபவங்களின் தொகுப்புதான் "கலாம் காலங்கள்' நூல். அந்த ஐந்து ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் எதிர்கொண்ட பிரச்னைகள், எடுத்த முக்கியமான முடிவுகள், பலருடனான அவரது சந்திப்புகள், தனிப்பட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட அனைத்தையும் அருகே இருந்து பார்த்த பி.எம். நாயரின் அனுபவப் பகிர்வுதான் இந்தப் புத்தகம்.

குடியரசுத் தலைவராக இருந்த மேதகு அப்துல் கலாம், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் பிகார் சட்டப்பேரவையைக் கலைத்தது இன்று வரை அவர் மீதான விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. அதன் பின்னணி குறித்தும், அந்த முடிவை அவர் எடுத்ததன் காரணம் குறித்தும் "கலாம் காலங்கள்' புத்தகத்தில் தரப்பட்டிருக்கும் நேர்முகப் பதிவு, அந்த விமர்சனங்களுக்குத் தகுந்த விடையாக இருக்கிறது. ஒரு மாமனிதருக்கு உள்ளே இருக்கும் நல்ல மனிதரை அடையாளம் காட்டும் ஆவணம் இது. 


--------------------------------------------------------------------


தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழின் வரலாற்றிலும் சைவ ஆதீனங்களின் பங்களிப்பு அளப்பரியது. சங்க இலக்கியங்கள் பலவும் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் போன்றவர்களால் மீட்டெடுக்கப்பட்டன என்றால், அதற்கும்கூட சைவ ஆதீனங்களின் ஆதரவும் பின்புலமும் இருந்ததை நாம் மறந்துவிட முடியாது.

சமயமும் தமிழும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. தமிழை மன்னர்கள் போற்றி வளர்த்தது போல, சமயமும் போற்றி வளர்த்திருக்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் சமயத்துக்கு அளித்திருக்கும் பங்களிப்புகள் அனைத்துமே தமிழுக்கும் அளித்திருக்கும் பங்களிப்புகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சமய இலக்கியத்தை அகற்றி நிறுத்தி விட்டு, தமிழ் இலக்கியம் பற்றிப் பேச முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை. சமயத்தால் தமிழும், தமிழால் சமயமும் நூற்றாண்டு காலங்கள் பாதுகாக்கப்பட்டன.

சமயங்கள் என்று கூறும்போது சைவ ஆதீனங்களை அகற்றி நிறுத்தி விட்டுப் பேசவோ, எழுதவோ முடியாது. கோயில்களின் வரலாறு தெரிந்த அளவுக்கு அந்தக் கோயில்களின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்த ஆதீனங்களின் வரலாறு பொதுவெளியில் தெரியவில்லை. அந்தக் குறையை அகற்றும் முயற்சிதான், ஜனனி ரமேஷ் தொகுத்திருக்கும் "சைவ ஆதீனங்கள்' என்கிற நூல். 

சைவ ஆதீனம் என்றால் என்ன? அதன் சமயப் பங்களிப்பு என்ன? தமிழகத்தில் இருந்த 18 சைவ ஆதீனங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன? அவை இப்போது எப்படி இயங்குகின்றன உள்ளிட்ட விவரங்கள் மட்டுமல்லாமல், ஆதீனங்களின் மரபு, நடைமுறைகள், சைவ சித்தாந்தப் பார்வை ஆகியவை குறித்தும் விரிவாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.

--------------------------------------------------------------------

வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அனுப்பித் தந்திருந்தார் கோவை வானதி சந்திரசேகரன் எழுதிய "இது என்னதான் நீதியோ?' என்கிற கவிதை. தற்போது பரவலாகப் பேசப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விசாரத்தை வெளிப்படுத்தும் கவிதை அது } 

வாழ்க்கையை சூழ்ந்த
வறுமையை விரட்ட
குடும்பத்தின்
வயிற்றுப் பசியை
நாளும் தணிக்க
வடக்கிலிருந்து வருகிறான்
"வந்தேறி' எனும்
வசைச் சொல்லோடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com