அருள்மொழி வர்மன் அன்று; அருமொழி தேவன்!

பிற்காலச் சோழர் மரபை ஒரு வலிமைமிக்கப் பேரரசாக ஆக்கியவன் மாமன்னன் இராசராசன் (கி.பி. 9851014).
அருள்மொழி வர்மன் அன்று; அருமொழி தேவன்!
Published on
Updated on
2 min read

பிற்காலச் சோழர் மரபை ஒரு வலிமைமிக்கப் பேரரசாக ஆக்கியவன் மாமன்னன் இராசராசன் (கி.பி. 9851014).  இவன் சுந்தரச் சோழன் வானவன் மாதேவியின் இளைய மகன். பெற்றோர் இட்ட பெயர் "அருமொழி தேவன்'.

இராசராசனின் இந்த இயற்பெயருடன் "மும்முடிச் சோழன்', "சிவபாதசேகரன்', "நித்த விநோதன்' போன்ற பல பட்டப் பெயர்கள் இராசராசன் காலத்திலும் தொடர்ந்து, பிற்காலத்திலும் பற்பல இடங்களில் பயின்று வந்துள்ளன.

ஆனால் இப்பெயர்களில் "அருமொழி தேவன்' என்ற வழக்கே மிகுதியாக இருந்துள்ளது.  இப்பெயரால் ஈர்க்கப்பட்ட அக்கால மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு "அருமொழி', "அருமொழி தேவன்' என்ற பெயர்களை வைத்து மகிழ்ந்துள்ளனர்.  அருமொழி தேவன் என்ற பெயரே பெருவழக்காக இருந்ததைக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. சான்றாக ஒருசில கல்வெட்டுக் குறிப்புகளைக் காண்போம்:

திருச்செங்காட்டங்குடி    -    அருமொழி தேவ வளநாடு 
சிங்காரத்தோப்பு    -    அருமொழி தேவ வாய்க்கால் 
எறும்பூர்    -    அருமொழிப் பேரேரி                   
சிங்காரத்தோப்பு    -    அருமொழி ஈஸ்வரம்                  
திருச்செங்காட்டங்குடி    -    அருமொழிமங்கலம்          
திருவெறும்பூர்    -    அருமொழிதேவப் பேராற்றங்கரை  
திருவரங்குளம்    -    அருமொழி தேவபுரம்                    
பிரமதேசம்    -    அருமொழிதேவன் மரக்கால் 
பிரமதேசம்    -     அருமொழி தேவச்சேரி              
திருவாமாத்தூர்    -    அருமொழி தேவவதி               
திருவாலங்காடு    -    அருமொழி தேவ உழக்கு       
காஞ்சிபுரம்    -    அருமொழி நாழி                        
காஞ்சிபுரம்    -    அருமொழிப் பெருந்தெரு

இவ்வாறான அமைப்பில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. எல்லோரும் "அருமொழி' என்றே அழைத்துள்ளனர். இது கல்வெட்டு காட்டும் செய்தி.

சில ஆண், பெண் பெயர்களில் "அருமொழி' இணைந்து வந்திருப்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிகின்றோம்.

லால்குடி    -    பெரும்பழவூர் தேவன் அருமொழி    
திருவரங்கம்    -    அருமொழி ராசாதிராச வாணாதிராசன் 
கீழூர்    -    அருமொழிதேவ மிலாடுடையார் 
கோனேரி ராசபுரம்    -    ஆதனூர் உடையான் அருமொழி வயநாட்டரயன் 
திரு இந்தளூர்ச் செப்பேடு    -    மருதத்தூர் உடையான ஆன அருமொழி
முதல் ராசேந்திரன் மகள் பெயர் பிரானார் அருமொழி நங்கையார்.  

வீர ராசேந்திரன் மனைவியருள் ஒருவர் பெயர் அருமொழி நங்கையார் மேற்கண்ட  எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது "அருமொழி' அல்லது "அருமொழிதேவன்' என்ற இராசராசன் பெயரே. ஒரு இடத்தில் கூட "அருள்மொழி' அல்லது "அருண்மொழி' என்று இடம் பெறவில்லை.

இந்த வரலாற்று உண்மையைப் புரிந்துகொண்டு சரியான பெயரை எழுதியவர்கள் மிகச் சிலரே. முதலில் இராசராசன் கல்வெட்டை படி எடுத்த டாக்டர் உல்சு "அருமொழி' என்றே கூறுகிறார்.

அவர் உதவியாளர் வி. வெங்கையா, தொல்லியல் முனைவர் ஏ. சுப்பராயலு போன்றோர் "அருமொழி' என்றே எழுதியுள்ளனர். பலரும் அருள்மொழிவர்மன் என்று தவறாகக் கொள்கின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி (லெக்சிகன்) "அருமொழி முதல் இராசராசன் பெயர்' என்று சரியாகக் கூறுகிறது. இந்தப் பேரகராதி தஞ்சை பெருவுடையார் கோயில் பிரதான விநாயகர் பெயர் "அருமொழி விநாயகர்' என்றும் கூறுகிறது.  அரு அருமை என்று பொருளும் கூறுகிறது.

இதற்குக் காரணம் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை ஆவார். இதனை ஏற்றுகொண்ட கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் ஏனோ "அருமொழி வர்மன்' என்று கூறுகிறார். கல்வெட்டில் எங்கும் வர்மன் என்ற சொல் இல்லை. அச்சொல் பல்லவ மரபுக்கு உரியது (நந்திவர்மன்).

உண்மை அறிய இரண்டாயிரம் சோழர் காலக் கல்வெட்டுகள் மீள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு கல்வெட்டில் கூட அருள்மொழி இல்லை எங்கும் அருமொழியே.

கதை, நாடகம், வரலாறு, வரலாற்று நாவல், திரைப்படம், எங்கும் தவறான அருள்மொழியே காணப்படுகிறது. கல்வெட்டு நூல் கிடைக்காவிட்டாலும் யாவரும் பயன்படுத்தும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையாவது பார்த்திருக்கலாமே. 

இராசராசன் அருமையான மொழி பேசுபவன். ஒரு வரலாற்று நாயகன் பெயரைத் தவறாகக் கூறுவது பெரும்பிழை. இனியாவது திருத்திக்கொள்வோமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com