ஐந்திணை ஐம்பது முதல் பாண்டியன் பரிசு வரை

மழை பெய்கின்ற காட்சியானது உழவர்க்கும் புலவர்க்கும் உவப்பூட்டும். குழந்தைக்கு மகிழ்வூட்டும்.
ஐந்திணை ஐம்பது முதல் பாண்டியன் பரிசு வரை

மழை பெய்கின்ற காட்சியானது உழவர்க்கும் புலவர்க்கும் உவப்பூட்டும். குழந்தைக்கு மகிழ்வூட்டும். மழை விலங்குகளைக் குளிரூட்டிப் பயிரினங்களுக்குத் தளிர் கூட்டும். இது பொதுவியல்பு. மக்களிடையே கடவுட் சிந்தனை மேலோங்கிய காலத்தில் மழையின் இயல்புகள் கடவுளரின் தன்மைகளோடு இயைபுப்படுத்திப் பாடப்பட்டுள்ளன. அப்படியொரு மழை ஐந்திணை ஐம்பது நூலில் காட்டப்பட்டுள்ளது. 
மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டுஎழுந்து, 
செல்வக் கடம்புஅமர்ந்தான் வேல்மின்னி - நல்லாய்!
இயங்கு எயில்எய்தவன் தார்பூப்ப, ஈதோ 
மயங்கி வலன்ஏரும் கார்         (பா.1) 

இப்பாடலில் நற்பண்புகளை உடைய தலைவியே! தம்மை எதிர்த்த வீரர்களை வென்ற திருமாலின் நிறத்தைப்போன்று மேகம் இருண்டு எழுகின்றது. கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் வேலைப்போன்று மின்னல்கள் மின்னுகின்றன. 
முப்புரங்களின் கோட்டைகளை அம்பெய்தி அழித்த சிவன் சூடியிருக்கும் மாலைக்கு உதவும் சரக்கொன்றைப் பூக்கள் மலர, வலப்புறமாகச் சுழன்று, நான்கு திசைகளையும் வளைத்துக்கொண்டு மேலே எழுந்துள்ளது மேகம் (அது சரஞ்சரமாய்ப் பொழியக் காத்திருக்கின்றது. எனவே கார்காலம் வந்துவிட்டதனால் உன் தலைவனும் விரைவில் வருவான் என்று தோழி, தலைவிக்குச் சொல்வதாக உள்ளது).
இந்த மழையின் தாக்கம் 'ஆழி மழைக்கண்ணா' என்னும் திருப்பாவைப் பாடலில் (4) வெளிப்பட்டிருக்கிறது. இப்பாட்டிலுள்ளவாறே திருமாலின் உருவம்போல் (ஊழி முதல்வன் உருவம்போல்) மேகம் தன்னுடைய மெய் கருத்ததாக ஆண்டாள் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலில் முருகன் கையிலுள்ள வேலைப்போல மின்னல் மின்னியது என்று கூறப்பட்டிருக்க, ஆண்டாளோ பத்மநாபன் கையிலுள்ள சக்கரத்தைப்போல மின்னல் மின்னியதாகப் பாடியிருக்கிறார். 
இப்பாட்டில் சிவனின் சரக்கொன்றைபோல் மழைச்சரங்கள் பெய்யக் காத்திருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்க, ஆண்டாளோ திருமாலின் சார்ங்கத்திலிருந்து (வில்) புறப்பட்ட அம்பைப்போல மழைச்சரங்கள் விழுந்தன என்று பாடியுள்ளார். திருமால் மார்பில் அணிந்திருக்கும் மாலையைப்போல (இடையீடின்றித் தொடர்ந்து) மழைச் சரங்கள் விழுகின்றன என்று கார் நாற்பது (பா.1) குறிப்பிட்டுள்ளதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.  
கோதையார் பாடிக் கொடுத்த,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
 பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
 ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
 தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

என்ற பாடலடிகள் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு மிகப் பிடித்தமானவையாக இருந்துள்ளன. 
இவற்றின் தாக்கத்தால் 'பாண்டியன் பரிசு' நூலில் பின்வருமாறு அமைந்த பாடலை யாத்துள்ளார். 
கிழக்கினைநோக் கிப்படகு செல்லும் போதில்
கேள்விஇலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும்
வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து
வண்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர்
மழைக்கண்ணீர் உகுத்ததுவான் மேற்கி னின்று (பா.183)

இப்பாட்டில், கேள்வி அறிவு இல்லாதவர்கள் நெஞ்சம்போல் இருண்டு, நீதிமன்ற வழக்குகளுக்காக அலைகின்றவர்கள் செல்வம்போல் மின்னி, சிறிதுசிறிதாகத் தேய்ந்து, ஏதோவொரு காரணத்தினால் பெரும்பொருளை இழந்துவிட்ட ஒருவனைப்போல அதிர்ந்து மழைக்கண்ணீரை உகுத்தது வான் என்று சொல்லப்பட்டுள்ளது. 
பாவேந்தர் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் அவருக்குப் பக்தி இலக்கியங்களின்மீது ஈர்ப்புண்டு என்பதை, அவரை உணர்ந்தவர் அறிவர்.
நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஐந்திணை ஐம்பது நூலில் இடம்பெற்ற மழைக்காட்சி எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த திருப்பாவையில் வெளிப்பட்டு இருபதாம் நூற்றாண்டில் பாவேந்தரின் பாண்டியன் பரிசு காப்பியத்திலும் இலங்குவதைக் காண்கிறோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com