சங்க காலத்தில் சிறுதானியங்கள்

சங்க காலத்தைப் பற்றி அறியச் சங்க இலக்கியங்கள் துணைபுரிகின்றன. அக்கால உணவுப் பொருட்களின் பயன்பாடும் அவற்றின் வழி வெளிப்படுகின்றது.

சங்க காலத்தைப் பற்றி அறியச் சங்க இலக்கியங்கள் துணைபுரிகின்றன. அக்கால உணவுப் பொருட்களின் பயன்பாடும் அவற்றின் வழி வெளிப்படுகின்றது. 

தினை, வரகு, அவரை, துவரை என்னும் சிறுதானியங்கள் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு.

தினை: உருவ அளவில் சிறியதான இத்"தினை' குறிஞ்சித் திணைப் பாடல்களில் மிகுதியாகப் பேசப்படுகின்றது. மலையும், மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தில் "தினை' மிகுதியாகப் பயிரிடப்படும்.

விளைந்து முற்றிய தினைக் கதிர்களைக் கவர்ந்து செல்வதற்காகக் கிளிகள், மயில்கள், கூட்டம் கூட்டமாய் வரும். அவற்றிடமிருந்து தினைக்கதிர்களைப் பாதுகாக்க, அப்பயிர்களினூடே "பரண்' அமைத்து அதிலமர்ந்து கைகளால் ஓப்பியும், கிளியை விரட்டப் பயன்படும் "தட்டை', "குளிர்' என்னும் கிளிகடி கருவிகளால் ஒலி எழுப்பியும் அங்கிருப்பர் பெண்கள் (அகம்.32).

கேழ்வரகு: "கேழ்வரகு' அல்லது "கூழ்வரகு' என்றழைக்கப்படும் "வரகு' என்ற சிறுதானியம் பற்றிப் புறநானூற்றுப் பாடல் (120) பேசுகிறது. வறியவர்கள் வரகுச் சோற்றினை, "முன்னைக்கீரை' என்றும் கீரைச் சமையலுடன் சேர்த்து உண்பர் என்றும் கூறுகின்றன அப்பாடலின்,
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் 
(அடி:1112)
என்ற அடிகள்.

இடையர்கள் வரகுத் தானியத்தின் வைக்கோற் கற்றைகளை, தாம் ஆங்காங்கே தூக்கிச் சென்று, அதனுட் தங்க உதவும் சிறு குடில்களுக்கு வேய்ந்தனர். அவற்றால் வீட்டுக் கூரைகளையும் வேய்ந்தனர் என்கிறது பெரும்பாணாற்றுப்படை இலக்கியம் (அடி:191).

அவரை: புரதச் சத்து மிகுந்த "அவரை' யாகிய சிறுதானியத்தைப் பண்டையோர் சிறந்த உணவாகக் கொண்டிருந்தனர் (புறநானூறு120) பூளைப் பூப் போன்ற வரகினது சோற்றை, வேங்கைப்பூப் போன்ற "அவரை' விதைப் பருப்பை நன்றாக வேகவிட்டுத் துழவுதலால் கிடைக்கும் இனிய சுவையுடைய மூரலுடன் (பருப்புச் சோறு) சேர்த்துக்கொடுத்து முல்லை நில மக்கள் விருந்
தோம்பினர். 

இதனைப் பெரும்பாணாற்றுப்படை,
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
நெடுங்குரற் பூனைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான்புழுக் கட்டில் பயில்வுற்(று)
இன்சுவை மூரற் பெருகுவிர்      
(அடி:191196)
என விளக்குகின்றது.
துவரை: ஒளவையார் ஒருமுறை நாஞ்சில் வள்ளுவன் நாட்டிற்கு விரலியர் சூழச் செல்கிறார். அப்பொழுது அங்குக் கீரைச் சமையலுக்குத் தேவையான துவரையரிசி இல்லையெனக் கோரப்பட்ட பொழுது, அப்
புரவலன் பெருமளவில் துவரையைத் தந்தான் என்கிறது புறநானூறு (பா.140).
சங்ககால மக்கள், சிறுதானியங்களின் சிறப்பினை நன்கு அறிந்திருந்தனர் என்பதைப் படித்து வியக்க முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com