தற்பெருமை பேசுதல் தகும்

ஒருவர் தனது பெருமையைத் தானேப் பேசலாமா? கல்வி செல்வம் வீரம் ஆகியவற்றால் தனக்கு ஏற்படும் புகழ் குறித்து, தானேப் பேசலாமா ? பெருமையைப் பிறர் பேச வேண்டும்.


ஒருவர் தனது பெருமையைத் தானேப் பேசலாமா? கல்வி செல்வம் வீரம் ஆகியவற்றால் தனக்கு ஏற்படும் புகழ் குறித்து, தானேப் பேசலாமா ? பெருமையைப் பிறர் பேச வேண்டும். "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை' என்கிறார் வள்ளுவர்; கல்வியிற் சிறந்து விளங்குகின்றோம் என்ற மமதை செருக்கு கூடாது என்று பாரதிதாசன் கூறுகிறார் அது இன்பம் தராது என்றும் கூறுகிறார். "கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் உண்டாவதுண்டோ சொல் என் தோழா' என வினவுகிறார் அவர்.

வீரம் மிக்கவர்களை கல்வியிற் சிறந்தவர்களை கொடைத்திறன் மிக்கவர்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடுவது இயல்பு; மாறாக, புகழ் தன்னை வந்தடையும் என்றெண்ணியோ, மறுமையில் பெருமையும் நற்பிறப்பும் கிடைக்கும் என்ற நோக்கிலோ கொடை வழங்குபவர்களை, "அறவிலை வணிகன்' என்று எள்ளலுடன் பாடுகின்றனர் புலவர்கள்.
வீரத்தைப் பிறர் புகழ்வதே மரபு; படைச் செருக்கு அதிகாரத்தில், தற்பெருமையுடன் வீரன் பேசுவதாக வள்ளுவர் குறள் செய்யவில்லை.
வஞ்சினம் கொள்ளும் சேரன் செங்குட்டுவன், தனது படையினரை , குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும், நிலைஇய வஞ்சியும், பெருஞ்சோற்று வஞ்சியும், கொற்ற வள்ளையும் சூடச்செய்து, பகைவரை வெல்வேன் என்று சபதம் செய்வானே அன்றி, தற்பெருமை பேசுவதாக இளங்கோ அடிகள் காட்டுவதில்லை.
தற்பெருமை பேசுதல் அழகல்ல என்று கூறும் சான்றோருலகம், கழிந்தது கண்டு இலனாகிய நிலையில், தமது பெருமையைப் பேசுவது உலக இயற்கை என்று விதிவிலக்கை அளிக்கிறது. "தற்பெருமை பேசுவது தகாது; ஆயினும், கையறு நிலையில், கழிவிரக்கம் கொள்ளும் நிலையில், தான் முன்னம் பெற்றிருந்த தனது செல்வத்தை வீரத்தைப் புகழ்ந்து பேசலாம்; அது தகும்; அது தற்பெருமை ஆகாது என்று கூறும்; ஏனெனில், பெருமை கொள்ள இப்போது அவர்களிடத்தில் அப்பொருள் இல்லை' என்று பரிமேலழகர் விளக்குகிறார்.
மேன்மை பெற்றிருந்த காலத்தில் தற்பெருமை பேசாதிருந்த சிலர், கையறு நிலையில் , கழிவிரக்கம் கொண்டு, பேசிய காட்சிகளை இலக்கியத்தில் காணலாம்.
மாபெரும் வீரன் வரையாது வழங்கும் வள்ளல் பறம்புமலை பாரி தற்பெருமை பேசியதில்லை; அவன் மக்களாகிய பாரிமகளிர், பாரி உயிருடன் இருக்கும் நாள் வரை தம் தந்தையாரின் செல்வம் குறித்துப் பேசியதில்லை; அதனினும் உயர்ந்த அவர்களின் செல்வம் என விளங்கும் தந்தை பாரி குறித்துப் பேசவில்லை.
மாறாக, பாரி இறந்த பின்னர், அவர்கள் தங்களது செல்வத்தின் குன்றின் பெருமை பேசுகின்றனர்:
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும்
பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்,
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே
(புறநானூறு 112)
கோவலன், ஒப்பற்ற செல்வந்தன். "வருநிதி பிறர்க்காத்த இருநிதிக் கிழவன் மகன்'.
மாதவி பெற்ற தன் மகளுக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டும் நாளில், புகாரில் வசித்த ஆயிரம் கணிகையர் குலப்பெண்டிர்க்கு பொன்மாரி பெய்தான் பொருள் வாரி வழங்கினான்; எனவே "செல்லாச் செல்வ' என மாடல மறையோன் புகழ்ந்து பேசுகிறான். ஆனால் , கோவலன் தனது செல்வம் குறித்து செருக்குடன் தற்பெருமை பேசியதாக அடிகள் காட்டுவதில்லை. மாறாக, செல்வமெல்லாம் இழந்து மாதவியிடம் இருந்து விலகி, கண்ணகியை அடைந்தபோது, தான் முன்னம் பெற்றிருந்த குன்று நிகர் செல்வத்தின் பெருமையைக் கூறுகிறான்.
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் ,
குலந்தரு வான்புகழ் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன..
..... (கனாத்திறம் உரைத்த காதை 6971)
என்று இளங்கோவடிகள் சுட்டிக்காட்டுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com