இந்த வாரம் கலாரசிகன் - (15-10-2023)

இன்னும்கூட காந்தி, காமராஜர் என்று இயங்கும் ஒருசில தலைர்களில் தமிழருவி மணியனும் ஒருவர்.
இந்த வாரம் கலாரசிகன் - (15-10-2023)

இன்னும்கூட காந்தி, காமராஜர் என்று இயங்கும் ஒருசில தலைர்களில் தமிழருவி மணியனும் ஒருவர். தனது "காந்திய மக்கள் இயக்கம்', "காமராஜர் மக்கள் கட்சி' உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தன்னால் இயன்றவரை காந்தியையும், காமராஜரையும் இளைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு செல்லும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் அவர். 

"காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று சொல்கிறார்களே, அப்படி என்னதான் சாதனை படைத்து விட்டது அந்த ஆட்சி' என்று அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைய தலைமுறையினர் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்கான சாதனைகளைப் பட்டியலிட்டு வழங்க முற்பட்டிருக்கிறார் தமிழருவி மணியன்.

அவர் தொகுத்து வெளியிட்டிருக்கும் "பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள்' என்கிற மலரில் காணப்படும் தகவல்களும், சம்பவங்களும் இப்படியும்கூட ஓர் அரசியல் தலைவர் நம்மிடையே வாழ்ந்தாரா என்கிற ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இன்றைய அரசியலைப் பார்க்கும்போது அவற்றை நம்ப மறுக்கிறது மனம்.

தனது பிறந்த நாள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது தேர்தலுக்கான நிதி போன்றவற்றை யாராவது கொடுத்தால், அதைத் தமிழ்நாடு காங்கிரஸ் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கச் சொல்வாரே தவிர, ஒருபோதும் தனது வங்கிக் கணக்கில் காமராஜர் போட்டுக் கொண்டதில்லை. பெருந்தலைவரின் இல்லத்தில் பணப்புழக்கத்தையே பார்க்க முடியாது.

ஒருநாள் கவிஞர் எஸ்.டி. சுந்தரம், முதல்வர் காமராஜரிடம் சென்று அவரது ஆட்சியின் சாதனைகளையெல்லாம் விளக்கி ஒரு விளம்பரப் படம் எடுத்து தமிழ்நாட்டின் திரையரங்குகளில் எல்லாம் திரையிட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

""சரி, இதற்கு எவ்வளவு செலவாகும்?'' என்று கேட்டார் காமராஜர். ""சுமார் மூன்று லட்சம் ரூபாய் செலவாகும்' என்றார் எஸ்.டி. சுந்தரம். ""ஏனய்யா, மூன்று லட்சமா? மக்கள் வரிப்பணத்தில் நமக்கு விளம்பரமா? அந்த மூனு லட்சம் இருந்தால் நான் இன்னும் மூன்று பள்ளிக்கூடங்களைத் திறந்து விடுவேனே...'' என்று மறுத்துவிட்டார் முதல்வர் காமராஜர்.

""எதுக்கு விளம்பரம்லாம். அணைகள் கட்டியிருக்கோம்; விவசாயிகள் அதனால் பயனடைந்தனர். பள்ளிக்கூடம் கட்டியிருக்கோம்; பிள்ளைங்க படிக்கிறார்கள்; மின்சார உற்பத்தியைப் பெருக்கி இருக்கோம்; எல்லா கிராமத்திலேயும் லைட் எரியுது. எல்லோரும் பலனை அனுபவிக்கிறபோது, நம்ம சாதனைகள் அவர்களுக்குப் புரியாதா? இதுக்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் பண்ணனுமா என்ன?'' என்பதுதான் காமராஜர் எழுப்பிய கேள்வி.

-------------------------------------------------------------------------

சமீபகாலமாக மீண்டும் பரவலாகப் பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது காலிஸ்தான் பிரிவினைவாதம். இந்திய மண்ணிலிருந்து "காலிஸ்தானிய பயங்கரவாதம்' அநேகமாக அழிக்கப்பட்டு விட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் வேளையில், இப்போது கனடா நாட்டில் இருந்து மீண்டும் அது தலைதூக்கத் தலைப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் அரசும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் சூழலில், நாம் மீண்டும் அந்தப் பிரிவினைவாதத்தை எதிர்கொள்ளும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

சீக்கிய மதம், காலிஸ்தான் இயக்கத்தின் தொடக்கம், ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் எழுச்சி, அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடந்த "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கை, இந்திரா காந்தியின் படுகொலையும் அதன் பின்விளைவுகளும், இப்போது புத்துயிர் பெறும் காலிஸ்தான் கோரிக்கை உள்ளிட்ட சீக்கியர்கள் தொடர்பான எல்லா பிரச்னைகளையும் அனைவருக்கும் புரியும் விதத்தில் தனது "காலிஸ்தான் பிரிவினைவாதம்' புத்தகத்தில் விளக்கியிருக்கிறார் "விதூஷ்' என்கிற புனைபெயரில் எழுதியிருக்கும் ஸ்ரீவித்யா சுப்பிரமணியம்.

காலிஸ்தான் பிரிவினைவாதம் தலைதூக்கியது ஏன், அதற்கும் சீக்கிய மதத்துக்கும் என்ன தொடர்பு, காலிஸ்தான் குறித்த உலகளாவிய அரசியல் நிலைப்பாடு என்ன போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும், ஆதாரத்துடன் தகவல்களைத் திரட்டிப் புத்தக வடிவில் தந்திருக்கிறார் அவர். இந்தியாவில் பிரிவினைவாத இயக்கங்கள் எப்படித் தலைதூக்குகின்றன, அவற்றை ஒடுக்க இந்திய அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்கிறது என்பதையும் விளக்கி இருக்கிறார். 

""பிந்தரன்வாலேயின் எழுச்சிக்கு அகாலி தளத்தின் தலைவர்களும் முக்கியக் காரணம். அவர்கள் பிந்தரன்வாலேயைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்த முற்பட்டனர். அதற்காக அவர் அகால் தக்த்தை ஆக்கிரமித்து அதன் புனிதத்தைக் குலைத்து, அசிங்கப்படுத்துவதை ஏற்றுக்கொண்டனர்.

சீக்கியப் போராளிகளுக்கு ஆயுதத் தளவாடங்கள், தங்குமிடம், பயிற்சி அளித்து "காலிஸ்தான்' பிரச்னையைத் தீவிரமாக்கியது பாகிஸ்தான். பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த சீக்கியர்கள் பலர் பிந்தரன்வாலேயை ஆதரித்தனர். அவருக்குப் பொருளுதவி அளித்து உதவினர்.

அரசியல் நோக்கங்களுக்காக, பெயர் தெரியாத சிலரால் குருநானக்கின் போதனைகள் திரிக்கப்பட்டு, அரசியல் மற்றும் மதத் தீவிரவாதத்துடன் இப்பிரச்னை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது'' என்கிறார் "விதூஷ்'. சீக்கிய மதம், காலிஸ்தான் தொடர்பான எல்லா தரவுகளையும் திரட்டி, சுவாரஸ்யமான வாசிப்பாக மட்டுமல்லாமல், ஆவணப் பதிவாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் புத்தகம் "காலிஸ்தான் பிரிவினைவாதம்.

"சரஸ்வதி சம்மான்' விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் கலந்துகொள்ள தில்லி சென்றிருந்தேன். அங்கே உள்ள "தினமணி' அலுவலகத்தில் இருக்கும் எனது அறை மேஜையில் இருந்தது ஏ. இராஜலட்சுமியின் "நீயும் நானும் நாமும்' கவிதைத் தொகுப்பு. ஒரு மாமாங்க காலத்துக்கு முன்பு வெளியான இந்தக் கவிதைத் தொகுப்பை, முன்பு எப்போதோ தில்லி சென்றிருந்தபோது எடுத்துச் சென்றிருந்தேன்.

மீள் பார்வையாக அதை எடுத்துப் பிரித்துப் படித்தபோது, கிடைத்த கவிதை இது. கடற்கரைக்குச் செல்லும்போதெல்லாம் நான் எனக்குள் எழுப்பும் கேள்வி இது 

எதைத் தொலைத்துவிட்டுத்
தேடுகிறது
இவ்வளவு வேகத்துடன்
கடலலை..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com