தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்த வாரம் கலாரசிகன் - 03-09-2023

சென்னைக் கம்பன் விழா நிகழ்வுகளின்போது சற்று நேரம் இடைவேளை எடுத்துக்கொண்டு நான் ஒரு முக்கியமான ஆளுமையைச் சந்திக்கச் சென்றேன்.

News image
Updated On :3 செப்டம்பர் 2023, 1:38 pm

DIN


சென்னைக் கம்பன் விழா நிகழ்வுகளின்போது சற்று நேரம் இடைவேளை எடுத்துக்கொண்டு நான் ஒரு முக்கியமான ஆளுமையைச் சந்திக்கச் சென்றேன். அந்த வீட்டின், அல்ல பங்களாவின் நுழைவாயிலில் தொடங்கி ஒவ்வொரு அங்குலத்திலும் கலாரசனை மிளிர்கிறது. இளையராஜாவின் இசையில் கர்நாடக சங்கீதமும் மேல்நாட்டு இசையும் இணைந்து குழைந்திருப்பதுபோல, பழைமையும் புதுமையும் கலந்து காட்சியளிக்கிறது அந்த பங்களா. இன்னுமா புரியவில்லை? ஏவி.எம். சரவணின் இல்லம்தான் அது.
சிலரை "சார்' அடைமொழி இல்லாமல் அழைக்கத் தோன்றுவதில்லை - ஸ்ரீதர் சார், சாவி சார், சோ சார், அந்த வரிசையில் சரவணன் சார். அவருக்கு அகவை எண்பது கடந்துவிட்டாலும் அவரை சரவணன் ஐயா என்று ஏனோ கூப்பிடத் தோன்றவில்லை. வெள்ளைச் சட்டையும், வெள்ளை பேண்டும், இருகரம் கூப்பி நிற்கும் தோற்றமும், அதில் அடங்கி  இருக்கும் அடக்கமும் அவரை அண்ணாந்து பார்க்க வைப்பதாலோ என்னவோ, எல்லோருக்குமே அவர் எப்போதும் சரவணன் சார்தான்...

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நீண்ட நேரம் என்றால், ஒரு மணி நேரத்துக்கு மேல்... நானும் சுமார் 60 ஆண்டு சினிமா ரசிகன் என்பதால், அந்த நாள் முதல் இந்த நாள் வரை வெளிவந்த பல திரைப்படங்கள் குறித்துப் பேசினோம். பல விஷயங்கள் எனக்குத் தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் சொல்லிக் கேட்பதில் இருக்கும் சுவாரஸ்யம் என்பது வேறு தானே...

ஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் ஓர் அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்கள். நான் வெளியிலிருந்துதான் பார்த்தேன். இன்னும் உள்ளே போய்ப் பார்க்க நேரம் வாய்க்கவில்லை. 

ஏவி.எம். நிறுவனம் பயன்படுத்திய அந்த நாள் கேமராக்களில் இருந்து, பல அரிய பொருள்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது குறித்துத் தெரிவித்தார். அவர்களது திரைப்படங்களில் பயன்படுத்திய கார்களும், நிறுவனத்தின் பழைய மாடல் கார்களும்கூட அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார். சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு கண்டு மகிழ இன்னொரு இடம் உருவாகி இருக்கிறது.

எங்கள் பேச்சு அருங்காட்சியகத்தில் இருந்து, ஏவி.எம் நிறுவனம் குறித்துத் திரும்பியது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் "சாவி' வார இதழில் பணியாற்றும் வேளையில், எதற்காகவும் நான் சரவணன் சாரை அணுகியதே இல்லை. ஏவி.எம்.மிலிருந்து ஏதாவது தேவை என்றால், அவரது உதவியாளர் அர்ஜுனனைத் தொடர்பு கொள்வதுடன் சரி.

நள்ளிரவில் அழைத்தாலும் தொலைபேசியை எடுத்துப் பேசும் உதவியாளர் அவர். அவரிடம் சலிப்பையோ, அலுப்பையோ நான் எப்போதும் பார்த்ததில்லை.

"எனக்கு எஸ்.பி. முத்துராமனும், எஸ்.பி. அர்ஜுனனும் இரண்டு கரங்கள் மாதிரி. சினிமா தொடர்பான விஷயங்களை முத்துராமனும், நிர்வாகம் தொடர்பான விஷயங்களை அர்ஜுனனும் பார்த்துக் கொள்வார்கள். அதேபோல, எனக்கு நெருக்கமான இருந்த இன்னொரு எஸ்.பி. யார் தெரியுமா? பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்' என்று மூன்று "எஸ்.பி.'க்கள் குறித்து பெருமையாகவும் உரிமையாகவும் சொன்னார் சரவணன் சார்.

95 வயது கடந்தும் வாழ்ந்த அர்ஜுனனைத் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே கருதி வந்தனர் சரவணன் சாரும் அவர் குடும்பமும்.

அதே அமைதி; அதே தெளிவு; அதே பணிவு; அதே அடக்கம்; அதே உபசரிப்பு. அவரே வாசல்வரை வந்து வழியனுப்பியபோது எனது உள் மனது "பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்' என்று சொல்லவில்லை; "சரவணன் சார், சரவணன் சார்தான்' என்று சொன்னது. ஏவி.எம். அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு, சரவணன் சாரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலை என்னில் தூண்டிய எழுத்தாளர் சிவசங்கரிக்கு நன்றி!

-----------------------------------------


விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் சாகித்திய அகாதெமி முன்னெடுக்கும் இலக்கியப் பணிகள் ஏராளம் என்பது பலருக்கும் தெரியாது. பல நல்ல தமிழ்ப் படைப்புகள், பெரும்பாலும் புனைவிலக்கியங்கள், ஏராளமான கவிதைகள் சாகித்திய அகாதெமியால் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன; செய்யப்பட்டு வருகின்றன. 

அத்துடன் நின்றுவிடவில்லை, அந்த நிறுவனத்தின் பங்களிப்பு. இலக்கியங்கள் குறித்தும், இலக்கிய ஆளுமைகள் குறித்தும் கருத்தரங்கம் நடத்த, சாகித்திய அகாதெமி உதவி செய்கிறது. அந்தக் கருத்தரங்கங்களை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவதுடன் கருத்தரங்க ஆய்வுகளைப் புத்தக வடிவமாக்கிப் பதிவும் செய்கிறது.

சமீபத்தில், மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்துறையுடன் இணைந்து சாகித்திய அகாதெமி வள்ளலாரின் 200-ஆவது பிறந்த ஆண்டையொட்டி நடத்திய கருத்தரங்கில் நான் கலந்து கொண்டேன். இரண்டு நாள் நடந்த கருத்தரங்கில் பன்னிரண்டு தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வள்ளலார் குறித்த ஆழமான ஆய்வு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வள்ளலாரியத்தில் ஆழங்காற்பட்ட பேராளர்களை அழைத்துவந்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

கல்லூரி முதல்வர் து. பாண்டியராஜா, தமிழ்த்துறை தலைவர் முனைவர் இராம. மலர்விழி மங்கையர்கரசி அவரது துறைப் பேராசிரியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி "வள்ளலார் 200' கருத்தரங்கின் வெற்றிக்கு உரமிட்டது. வள்ளலாரின் 200-ஆவது பிறந்த ஆண்டில் அவருக்குச் செய்யப்பட்டிருக்கும் மிகப் பெரிய மரியாதை இந்தக் கருத்தரங்காகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த வெற்றிக்குப் பின்னால் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா. அறவேந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரான இரா. அறவேந்தனின் வழிகாட்டுதலும், பொறுப்பு அலுவலர் முனைவர் சந்திரசேகர ராஜுவின் ஒத்துழைப்பும் தமிழுக்குக் கிடைத்திருக்கும் "உதவிக் கரங்கள்'. வழிகாட்டி விட்டேன்...


நாகர்கோவிலில் இருந்து கடந்த பத்தாண்டுகளாக வெளிவருகிறது "திணை' என்கிற தனிச்சுற்றுக் காலாண்டிதழ். "யதி' ஆசிரியராகவும், சி. சொக்கலிங்கம் நிர்வாக ஆசிரியராகவும் இருந்து நடத்தும் அந்த இதழின் ஜூன் - ஆகஸ்ட் காலாண்டிதழில் வெளிவந்திருக்கும் "தர்மசிங்' எழுதிய கவிதையிலிருந்து எடுக்கப்பட்டவை இந்த வரிகள் - 
தகுதிக்கேற்ப
தனக்கும் ஒரு அடிமை
என்பதே
அதிக மனங்களில்
முளைவிட்டுக் கிடக்கும்
கெளரவக் கனவு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.