கம்பர் செய்ததோர் புதுமை

ஒழுக்கத்தில் சிறந்த பெண்களைக் கற்பில் சிறந்தவர்கள் என்று போற்றுவது பண்டையோர் மரபு.
கம்பர் செய்ததோர் புதுமை


ஒழுக்கத்தில் சிறந்த பெண்களைக் கற்பில் சிறந்தவர்கள் என்று போற்றுவது பண்டையோர் மரபு. கடவுள் சான்ற கற்பின் சேயிழை(புறநானூறு, 198:3), கடவுள் கற்பொடு குடிக்கு விளக்காகிய (அகநானூறு, 184:1), கடவுள் கற்பின் மடவோள் (அகநானூறு, 314:15), கடவுள் கற்பின் (குறுந்தொகை, 252:4) எனவரும் தொடர்களில் தெய்வக் கற்புடையவள் தலைவி என்று சொல்லப்பட்டுள்ளது. 

மாதவி மூவகைக் கற்பு குறித்துப் பேசுகிறார் (மணிமேகலை, 2:42-47). அதில் பெண்கள், கணவன் இறந்தபின்பு அத்துயரம் தாங்காமல் பெருமூச்சுவிட்டு உடனே தன் உயிரை விடுவர். இது முதல் கற்பு எனப்படுகிறது. அவ்வாறு இறவாத பெண்கள், கணவனுக்கு அமைத்த ஈமத் தீயில் புகுந்து உயிர் துறப்பர். இது இடைக்கற்பெனப்படுகிறது. அவ்வாறும் உயிர்விடாதவர் கைம்மை நோன்பு நோற்று உடலை வருத்திக்கொள்வர். இது கடைக்கற்பெனப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணகி இம்மூவகைக் கற்புடை மகளிருக்கும் மேலானவராக மாதவி குறிப்பிடப்பட்டுள்ளார். 

கற்பு என்ற சொல் கல்+பு ஆகிய இரண்டின் கூட்டுச்சேர்க்கையாகும். கல்வியை அடிப்படையாகப் பிறந்தது. முன்னோர் கற்பித்த ஒழுக்கக் கல்வியின்படி நடப்பது என்று இதற்குப் பொருள். அக்கல்வியிலிருந்து வழுவியோர் கற்பிழந்தவர் எனப்பட்டனர். 

கற்பு என்றவுடன் வடமீனின் கற்பிற்கு இணையாகச் சொல்வது முன்னோர் வழக்காகும். முனிவர்கள் எழுவரில் ஒருவரான வசிட்டரின் மனைவி அருந்ததி. இவர் வானத்தின் வடக்குத் திசையில் விண்மீனாக உள்ளார் என்பர். இந்த விண்மீனைச் சாலிமீன் என்று குறிப்பர். திருமணத்தின்போது அம்மியை மிதித்து அருந்ததியைப் பார்த்தல் என்ற வழக்கம் மக்களிடையே இருந்தது.

கற்பு பற்றி நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திருமுருகாற்றுப்படை, சிறுபஞ்சமூலம், பெரும்பாணாற்றுப்படை  ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் வடமீன் புரையும் கற்பின் மடமொழி (புறநானூறு, 122:8), அருந்ததி அனைய கற்பின் (ஐங்குறுநூறு, 442:4), மீனொடு புரையும் கற்பின் (பதிற்றுப்பத்து, 89:19), வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை, 2:21) ஆகிய நான்கு இடங்களில் மட்டும் அருந்ததியுடன் கற்புடை மகளிர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். 

பெரும்பாணாற்றுப்படையை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் பின்வரும் பகுதியில் பார்ப்பனர் வீட்டுப் பெண்ணை வடமீனுடன் ஒப்பிட்டுள்ளார்.    

மறைகாப் பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறிந்து அட்ட
(பெரும். 301-304)

தொடர்ந்து, சாலி ஒருமீன் தகையாளை (சிலப்பதிகாரம் 1:51) என்று இளங்கோவடிகள் கண்ணகியைக் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

கம்பர் சீதையின் கற்பை அருந்ததியுடன் ஒப்பிட்டுப் பல இடங்களில் (பா.801, 1254, 2006, 5350) குறித்துள்ளார். அதுவரை முன்னோர் சென்ற முதல் ஏரின் தடத்திலேயே சென்ற கம்பர் அதற்கும் மேலாகச் சீதையின் பெருமையை வெளிப்படுத்த நினைத்தார். ஆகவே, ஓரிடத்தில் சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே (அயோத். சித்திரகூடப் படலம், பா.16) என, அருந்ததிக்கே கற்பென்றால் என்னவென்று சொல்லித் தந்தவளாகச் சீதையைச் சித்திரித்திருப்பார். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மாதவியின் வழியாக மூவகைக் கற்புடைய பெண்டிர்க்கும் மேலானவராகக் கண்ணகியைக் குறிப்பிட்டிருந்தாலும் அவர் பழைய தொன்ம மரபைமீறி உவமை கூறவில்லை. ஆனால் கம்பர் கூறியுள்ளார். ஆகவே, இதனைக் கம்பர் செய்த புதுமையாகவே கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com