தமிழுக்குத் தொண்டாற்றித் தம்புகழ் நிறுவியவர்! 

அன்றைய தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஒளவையார் குப்பம் என்னும் கிராமத்தில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி அம்மையார் இணையருக்கு ஐந்தாவது குழந்தையாக 1902 செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார்.
தமிழுக்குத் தொண்டாற்றித் தம்புகழ் நிறுவியவர்! 

அன்றைய தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஒளவையார் குப்பம் என்னும் கிராமத்தில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி அம்மையார் இணையருக்கு ஐந்தாவது குழந்தையாக 1902 செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார் ஒளவை துரைசாமிப் பிள்ளை.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர் "தமிழவேள்' உமா மகேஸ்வரனார் ஆவார். அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் "கரந்தைக் கவியரசு' வேங்கடாசலம் பிள்ளை, "நாவலர்' ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோர். தமிழ்ச்சங்கத்தில் பயில வேண்டும் என்னும் விருப்பத்துடன் ஒளவை துரைசாமிப் பிள்ளை 1925 - இல் தனது 22-ஆவது வயதில் தஞ்சை நோக்கிப் புறப்பட்டார். 

உமா மகேஸ்வரனார், ஒளவை துரைசாமிப் பிள்ளையைப் பார்த்தவுடன் அகமகிழ்ந்தார். தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியப் பணி, சங்க நூலகப் பணி இவற்றோடு, தொல்காப்பியம் - தெய்வச்சிலையார் ஓலைச்சுவடிகளைப் படித்துப் பார்த்து எழுதும் முக்கியப் பணியையும் கொடுத்தார்.


பின், 1929 - இல் வட ஆற்காடு மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். காவேரிப்பாக்கம், செய்யாறு, போளூர், திருவந்திபுரம், திருவோத்தூர், செங்கம் உள்ளிட்ட பல ஊர்களில் தமிழாசிரியராகவும், தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். 

1939 - இல் போளூரில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தபோது மாவட்டக் கல்வி அதிகாரி சச்சிதானந்தம் பிள்ளை ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார். ஒளவை துரைசாமிப் பிள்ளையின் இலக்கண, இலக்கியப் புலமை,  சைவ சித்தாந்தத்திலுள்ள ஈடுபாடு ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்ததுடன் அவரது பெருமைகளைப் பற்றித் திருநெல்வேலித் தென்னிந்திய சைவச் சித்தாந்த நூற்பதிப்புக் கழக உரிமையாளர் வ. சுப்பையாப் பிள்ளையிடம் கூறி மகிழ்ந்தார்.  

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக இவர் எழுதிய முதல் நூல்  "சீவக சிந்தாமணி சுருக்கம்''அதற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து பல நூல்களை அப்பதிப்பகத்துக்காக எழுதினார்.

1942-இல் திருப்பதி வேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஒளவை துரைசாமிப் பிள்ளைக்குக் கிடைத்த ஆசிரியர் பணி அவரது ஆய்வுகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. கூடவே வடமொழி, பாலிமொழி உள்பட பல்வேறு மொழி ஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்பையும் வழங்கியது.   

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது போல், மணிமேகலைக்கு உரை எழுதும் பொறுப்பு ந.மு. வேங்கடசாமி நாட்டாருக்குக் கிடைத்தது.  ஆனால் திடீரென அவர் காலமாகவே, மணிமேகலைக்கு உரை எழுதும் பணியும் ஒளவை துரைசாமியையே தேடி வந்தது. 

பௌத்த சமயத்தின் தாக்கம் அதிகமுள்ள காப்பியம் என்பதால் வடமொழிப் பேராசிரியர் பிரபாகர சாஸ்திரியார், பாலி மொழிப் பேராசிரியர் ஐயாசாமி சாஸ்திரியார் ஆகியோருடன் கலந்தாலோசித்து மணிமேகலைக்கான உரையை நிறைவு செய்தார்.

1943 முதல் எட்டு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போது, "சைவ சமய வரலாறு', "ஞானாமிர்தம்' உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். காப்பியங்களுக்கும், தொகை நூல்களுக்கும் உரைகளைச் செம்மையாக எழுதி முடித்தார்.

அங்கு பணியாற்றிய காலத்தில் கல்வெட்டு அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இலக்கண வரலாற்று அறிஞர் வெள்ளைவாரணர் ஆகியோரின் நட்பு இவருக்குக் கிட்டியது.

1951 - இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு  பணியாற்றியபோது, கல்வெட்டு அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரிடம் கல்வெட்டுகளைப் படிக்கவும், படி எடுக்கவும் பயிற்சி பெற்றார். பின்னாளில் மாணவர்களுக்குத் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொடர்பான பாடம் எடுக்கும்போது, மதுரை ஒற்றைக்கடை மலையடிவாரத்தில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று, நேரடி செயல்முறைப் பயிற்சி செய்து விளக்கினார்.

துரைசாமிப் பிள்ளைக்கு மணிவிழா நடைபெற்றபோது (1964) தமிழவேள் பி.டி. இராஜன், பேராசிரியர் வெள்ளைவாரணர் ஆகியோர் அவருக்கு "உரைவேந்தர்' என்னும் பட்டம் வழங்கினர். அன்று முதல் அனைவராலும் அவர் "உரைவேந்தர்' என்றே அழைக்கப்பட்டார். காலப்போக்கில் "உரைவேந்தர்' என்றால் அது ஒளவை துரைசாமிப் பிள்ளையையே குறிக்கும் என்று ஆகிவிட்டது.

1980-இல் அன்றைய தமிழக ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில், அன்
றைய மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வ.சுப. மாணிக்கனார் முன்னிலையில், ஒளவை துரைசாமிப் பிள்ளைக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

1981-இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் உரைவேந்தருக்கு ரூ.10,000/- பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்.

உரைவேந்தர் எழுதிய 34 நூல்களுள் புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, ஞானாமிர்தம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம், திருவருட்பா ஆகியவற்றுக்கு எழுதிய உரைகள், சைவ இலக்கிய வரலாறு, ஒளவைத் தமிழ், சேரமன்னர் வரலாறு, சிவஞான போதம் செம்பொருள், தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், பாணர், மதுரைக்குமரனார் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இருப்பினும் இவற்றுள் கூடுதல் சிறப்பானது திருவருட்பா உரை ஆகும். மொத்தம் ஆறு திருமுறைகளையும், 5,818 பாக்களையும் கொண்ட இந்த உரைநூலை அவரது வாழ்நாள் சாதனை என்று கூறுவது மிகையன்று.
அன்னைத் தமிழுக்கும் ஆன்ற சைவத்துக்கும் இறுதி மூச்சுவரை உழைத்த உரைவேந்தர் துரைசாமிப் பிள்ளை தனது 79-ஆம் அகவையில் 1981 ஏப்ரல் 3-ஆம் நாள் இயற்கை எய்தினார்.

உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை, தமிழுக்குத் தொண்டு செய்து தம்புகழ் நிறுவித் தாம் மாய்ந்த பெருந்தகை ஆவார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com