இந்த வாரம் கலாரசிகன் - (10-09-2023)

தினமணி நாளிதழ் மகாகவி பாரதியாரின் 13-ஆவது நினைவு தினத்தன்று வெளிச்சம் கண்டது. நாளை "தினமணி' நாளிதழ் தனது 90-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாரதியார் மறைந்து 102 ஆண்டுகள் கடந்துவிட்டன. 
இந்த வாரம் கலாரசிகன் - (10-09-2023)

தினமணி நாளிதழ் மகாகவி பாரதியாரின் 13-ஆவது நினைவு தினத்தன்று வெளிச்சம் கண்டது. நாளை "தினமணி' நாளிதழ் தனது 90-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாரதியார் மறைந்து 102 ஆண்டுகள் கடந்துவிட்டன. 

பாரதியார் குறித்துப் பேசுவதாக இருந்தால், "சேக்கிழார் அடிப்பொடி' டி.என். இராமச்சந்திரனை அகற்றி நிறுத்திவிட்டுப் பேசவோ எழுதவோ முடியாது. சைவ சித்தாந்தத்தைப் போலவே, பாரதியாரிலும் ஆழங்காற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவர் அவர். 

நானும் அப்போது "தினமணி' திருச்சி பதிப்பில் செய்தியாசிரியராக இருந்த இரா. சோமசுந்தரமும் தஞ்சைக்குச் சென்றிருந்தபோது, டி.என்.ஆரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்ததையும், மணிக்கணக்காக உரையாடி மகிழ்ந்ததையும் இதற்கு முன்பே ஒருமுறை நான் பதிவு செய்திருந்ததாக நினைவு. பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், திருலோக சீதாராம், பாரதிதாசன் ஆகியோர் குறித்து அவர் தெரிவித்த பல தகவல்கள் எங்களை வியப்பில் ஆழ்த்தின.

சொல் சொல்லாக, வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக பாரதியாரைப் படித்து, சிலாகித்து மகிழ்ந்தவர்களில் ஒருவர் டி.என்.ஆர். பாரதியாரின் படைப்புகள் தமிழரின் வேதம் என்று கருதினார் அவர். பாரதியாரின் பாடல்களைப் போலவே சிறப்பு வாய்ந்தவை அவருடைய உரைநடைப் படைப்புகள் என்று கருதியவர். தான் படித்த, பயின்ற பாரதியாரின் படைப்புகள் குறித்த தனது பார்வையை அவ்வப்போது குறித்தும் வைத்திருந்தவர்.

பாரதியாரை ஓரளவு உணர்வதற்கு, அவரை உபாசித்து உயர்ந்தவர்களின் நட்பு, தகுந்த தமிழ்ப் புலமை, பாரத தேயப் பொது மொழியாகிய வடமொழி அறிவு, உலகப் பொதுமொழியாகிய ஆங்கிலத்தில் தேர்ந்த புலமை, பாரதியாரின் பெருமையை ஏனைய மொழிப் பெருங்கவிஞர்களோடு ஒப்பிட்டுக் காணுதற்குரிய கூர்த்த நுண்ணறிவு என்பன இன்றியமையாதவை. பாரதியாரை உணர்ந்து நமக்கு உணர்த்துதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர் டி.என்.ஆர் என்பது பண்டித வித்துவான் தி.வே. கோபாலையரின் கூற்று.

சங்ககாலப் பாடல்கள் தொடங்கி, திருமுறைகள், பிரபந்தங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பியங்கள் என்று வள்ளலார் வரை வாழ்ந்த முன்னைப் புலவர்கள், கவிஞர்கள் அனைவரின் தாக்கமும் மகாகவி பாரதியிடம் இருந்தது என்பதை எடுத்தியம்பும் "வழி வழி பாரதி' கட்டுரையில் தொடங்குகிறது, டி.என். இராமச்சந்திரனின் கட்டுரைகள். 14 கட்டுரைகளில் சில, பாரதியை ஷெல்லி, புஷ்கின், மில்டன், ப்ரௌனிங், பிரான்சிஸ் தாம்ஸன் ஆகியோருடனான ஒப்பீடுகள்.

டி.என். இராமச்சந்திரன் அவ்வப்போது வெளிப்படுத்தும் கருத்துகளையும், எழுதும் கட்டுரைகளையும் தொகுத்துப் புத்தக வடிவம் தர வேண்டும் என்று அவரை வற்புறுத்தியவர் பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் என்றால், இந்தத் தொகுப்புக்கு மெய்ப்புத் திருத்தியவர் இன்னொரு பாரதி ஆய்வாளரான முனைவர் ய. மணிகண்டன். அந்தத் தொகுப்பை, நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் மீள்பதிப்பு செய்திருப்பவர் டி.என்.ஆரின் புதல்வர் மருத்துவர் த.ரா. சுரேஷ்.

பாரதியியல் ஆய்வாளர்களானாலும் சரி, ஒப்பீட்டு இலக்கியம் படிக்கும் மாணவர்களானாலும் சரி தவிர்க்க முடியாத, தவிர்த்துவிடக் கூடாத ஓர் ஆய்வுப் படைப்பு "வழி வழி  பாரதி'. டி.என்.ஆரைப் படிக்கும்போது, அதனூடே திருலோக சீதாராமையும் சேர்த்தே படிக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மருத்துவர் த.ரா. சுரேஷ், இந்தப் புத்தகத்தை மீள்பதிப்பு செய்திருப்பதற்கு பாரதி அன்பர்கள் சார்பில் நன்றி!

-------------------------------------------------------------------------


எழுத்தாளர் ஜெயகாந்தனின் புத்தகங்களில் பிறரின் முன்னுரை அல்லது அணிந்துரை இருப்பதில்லை.  ஒரே ஒரு புத்தகத்தில், அதுவும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில் மட்டும் அணிந்துரை இருந்தது. அதற்குப் பிறகு, பெர்னாட் ஷா போல, அவரேதான் அவரது படைப்புகளுக்கு முன்னுரை எழுதுவது வழக்கம். 

அப்படி, ஜெயகாந்தன் தனது படைப்புக்கு அணிந்துரை எழுத அனுமதித்த எழுத்தாளர் யார் தெரியுமா? தி.ஜ. ரங்கநாதன் என்றால் தெரியாத, ஆனால் "தி.ஜ.ர.' என்றால் பரவலாக அறியப்பட்டவர். பத்திரிகை ஆசிரியராக, நகைச்சுவை எழுத்தாளராக, சிறுகதைகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த "தி.ஜ.ர.' இன்னொரு தலைசிறந்த எழுத்தாளருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவர் வேறு யாருமில்லை, கவியரசர் கண்ணதாசன்தான்.

"தமிழ் எழுத்தாளர் உலகில் அவர் ஒரு துருவ நட்சத்திரம். பத்திரிகைத் துறையில் அவர் ஒரு ஜாம்பவான். எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்ட அவர் பெயர் தி.ஜ. ரங்கநாதன்' என்று குறிப்பிடும் கவியரசர் கண்ணதாசன், "உரைநடையில் எனக்கு அவரே ஆசான்' என்று சொல்கிறார் என்றால், தி.ஜ.ர. எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

"சக்தி' பத்திரிகை ஆசிரியராக இருந்த தி.ஜ.ர., "கலைமகள்', "குமரிகடல்' பத்திரிகைகளுடனும் தொடர்புடையவர். அவர் பணியாற்றிய பத்திரிகைகளில் வெளிவந்த சில கதைகள், கட்டுரைகளைத் தொகுத்து, 1950-இல் அவர் வெளிக்கொணர்ந்த புத்தகம், "இது என்ன உலகம்?'. இப்போது அது மீள்பதிப்பு கண்டிருக்கிறது.

29 கட்டுரைகள் அடங்கிய அந்தத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கி இருப்பவர் பிரபல எழுத்தாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. ""தி.ஜ.ர.வின் கட்டுரைகள் விஞ்ஞான ஆராய்ச்சியல்ல; புலமையைப் புலப்படுத்தும் வாதம் அல்ல; ஒரே தண்டவாளத்தில் அசையாமல் ஓடும் யந்திர வண்டியல்ல' என்று குறிப்பிடும் கா.ஸ்ரீ.ஸ்ரீ., "உங்கள் வாழ்க்கையில் சில மணி நேரமாவது உல்லாசமாக, உன்னதமாக, விரிந்த வாழ்வு வாழ வேண்டுமானால், "இது என்ன உலகம்?' என்ற இந்தக் கட்டுரைத் தொகுதியை மட்டுமல்ல, தி.ஜ.ர.வின் எல்லா படைப்புகளையுமே படியுங்கள்'' என்று பரிந்துரைக்கிறார். 

-------------------------------------------------------------------------


விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் இரா. தேன்மொழியின் "கண்ணாடிப் பேழைக்குள் சுழலும் கவிதைகள்'. அதிலிருந்த சில வரிகள் - 
குடும்ப போட்டோவில்
இருக்கும் ஒற்றுமை
நேரில் இருப்பதில்லை!
அந்தச் சிரிப்பையும்
நேரில் பார்க்க முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com