இந்த வாரம் கலாரசிகன் - 18-06-2023

அரை நூற்றாண்டுக்குப் பிறகு, தான் படித்த கல்லூரியில், தன்னுடன் படித்த வகுப்புத் தோழர்களைச் சந்திப்பது என்பது எல்லோருக்கும் கிட்டும் வாய்ப்பாக இருக்காது.
இந்த வாரம் கலாரசிகன் - 18-06-2023
Updated on
2 min read

அரை நூற்றாண்டுக்குப் பிறகு, தான் படித்த கல்லூரியில், தன்னுடன் படித்த வகுப்புத் தோழர்களைச் சந்திப்பது என்பது எல்லோருக்கும் கிட்டும் வாய்ப்பாக இருக்காது. என்னுடன் படித்த, ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத்தின் இப்போதைய தலைவர் சாவடி சிதம்பரம், "நாம் சந்தித்தால் என்ன?' என்கிற ஆலோசனையை முன்வைத்தபோது, முதல் ஆளாக ஆமோதித்தவன் நான்தான். 

என்னுடன் படித்த இன்னொரு வகுப்புத் தோழர், தலைமையாசிரியராக இருந்து ஓய்வுபெற்ற கடையம் சோமசுந்தரம். அவரும், சாவடி சிதம்பரமும் ஏனைய நண்பர்களைத் தொடர்பு கொண்டனர். கல்லூரி நாள்களிலிருந்து எனது இணைபிரியாத் தோழராகத் தொடரும், பாண்டியன் கிராம வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்று, இப்போது தென்காசி மேலகரத்தில் வசித்து வரும் எம்.எஸ். மணியும் இணைந்து கொண்டபோது, மூவர் நால்வரானோம்.

கடந்த ஞாயிறன்று, நாங்கள் படித்த தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி வளாகத்தில் சந்திப்பது என்று ஏற்பாடாகி இருந்தது. அரை நூற்றாண்டுக்கு முன்னால், நாங்கள் பரமகல்யாணி கல்லூரியில் இளங்கலை வேதியியல் படித்தபோது, கல்லூரி வளாகம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. தற்காலிக ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டில்தான் பெரும்பாலான வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

இப்போது நிலைமையே மாறிவிட்டது. மருத்துவமனை, நூலகம், கூட்டம் நடத்த அரங்கம், விரிவுபடுத்தப்பட்ட பள்ளிக்கூட வளாகம், பெரிய மதில்சுவருடன் பச்சைப் பசேலென்ற மரம் செடி கொடிகளுடன் கூடிய பரந்த நிலப்பரப்பில் பிரமாண்டமாக பரந்து விரிந்த கல்லூரிக் கட்டடம் என்று பரமகல்யாணி கல்லூரி வியப்பில் ஆழ்த்துகிறது.

சாவடி சிதம்பரம், சோமசுந்தரம், அப்துல் முனீப், வடிவேல், பெருமாள், ஆறுமுகம், ஸ்ரீதரன், எம்.எஸ். மணி ஆகியோருடன் நானும் சேர்ந்து கொண்டபோது, ஒன்பது பழைய நண்பர்களின் சங்கமமாக அந்த சந்திப்பு நிகழ்ந்தது. என்னுடன் படித்த, ஏனைய வகுப்புத் தோழர்கள் பற்றிய குசலம் விசாரித்தல், ஆசிரியர்கள் குறித்த பழைய நினைவுகள், மாணவப் பருவத்தில் நாங்கள் செய்த இளம்பருவ சாகசங்கள் என்று பேசுவதற்கு ஏராளமாக இருந்தன. பேசினோம்; சிரித்தோம்; மகிழ்ந்தோம்.

அப்போது கல்லூரி முதல்வராக இருந்த கே.ஹெச். நாராயணன், துணை முதல்வர் எல். ஜானகிராமன், எங்கள் வேதியியல் பேராசிரியர் வெங்கட்ராமன், தமிழ் பேராசிரியர்கள் லெட்சுமிநாராயணன், ஆழ்வான், பழனிசாமி, வேதியியல் விரிவுரையாளர்கள் சுப்பையா, பத்மநாபன், பாலசுப்பிரமணியம், ராமநாதன் என்று ஒவ்வொருவராக நினைவுகூரத் தோன்றியது. ஆங்கில பேராசிரியர்கள் ஸ்ரீநிவாஸன், எஸ். தோத்தாத்ரி, பி.கே. ராஜன் ஆகியோர் எங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை மறந்துவிடவா முடியும்?

அப்போது துணை விரிவுரையாளராக இருந்த குமாரசாமி, பின்னாளில் தமிழ்ப் பேராசிரியரானார். பணி ஓய்வு பெற்ற பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க அழைக்கப்பட்டார். அறிவரசன் என்று பரவலாக அறியப்படும் அவரது மகன் அழகியநம்பி இப்போது எங்கள் "தினமணி' நிருபர்.

ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திவிட்டு நாங்கள் பிரிந்தோம். பசுமையான நினைவுகளை மீள்பார்வை பார்த்துவிட்டுத் திரும்பும்போது ஏற்படும் புத்துணர்ச்சியை வார்த்தையில் வடிக்க முடியாது. அரை நூற்றாண்டு காலம் அரை நொடிபோல  கடந்துவிட்டது. யோசித்துப் பார்த்தால் வியப்பாகவும் இருக்கிறது; மலைப்பாகவும் இருக்கிறது.

-------------------------------------

பழைய நண்பர்களைச் சந்திக்க நான் ஆழ்வார்குறிச்சி சென்றிருந்தபோது, ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியின் செயலர் முனைவர் சுந்தரத்தை சந்தித்தேன். அவர் எனக்கு நினைவுப் பரிசாக அப்போது அளித்த புத்தகம், நண்பரும் இன்றைய நிதித்துறை செயலருமான த. உதயச்சந்திரன் எழுதிய "மாபெரும் சபைதனில்...'.

இந்தப் புத்தகம் இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியானபோதே நான் வாங்கிப் படித்துவிட்டேன் என்றாலும், அப்போது அது குறித்து எழுதாமல் விட்டது நினைவுக்கு வந்தது. அந்தக் குறையைத் தீர்த்துக்கொள்ள முனைவர் சுந்தரம் எனக்கு ஒரு நல்வாய்ப்பைத் தந்திருக்கிறார். 

உதயச்சந்திரன் ஒரு டி.என். சேஷன் போல. அவர் வகிக்கும் பதவிகள் அவரால் அதிகாரம் பெற்றிருக்கின்றனவே தவிர, அவர் எந்தவொரு பதவியாலும் ஆதாயம் பெற்றதில்லை என்பதுதான் அவரை ஏனைய அதிகாரிகளில் இருந்து தனிமைப்படுத்தி உயர்த்துகிறது.

ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களை  செவ்விலக்கியத்திலிருந்து நவீன தமிழிலக்கியம் வரை  மின்னுருவாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததற்காகவும், யுனிகோட் ஒன்றியத்தில் தமிழை இணைத்ததற்காகவும், தமிழ்ச்சமூகம் அவருக்கு எக்காலத்திலும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது. இன்று "கீழடி' குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். உதயச்சந்திரனை ஓரங்கட்டி, தொல்லியல் துறையை அவரிடம் ஒப்படைத்ததால் நமக்குக் கிடைத்த புதையல் அது. அவரை, நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்தேன். அதன் பிறகு சந்திக்கவில்லை.

ஆமாம், "மாபெரும் சபைதனில்...' புத்தகம் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள். நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஒரேயொரு வார்த்தை, ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் அது, அவ்வளவுதான்!

-------------------------------------

செஞ்சியிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த "அறத்தான் வருவதே' இரண்டாவது இதழை, அதிலிருக்கும் சில கட்டுரைகளுக்காகப் பாதுகாக்கிறேன். "நல்லதொரு இலக்கிய இதழ்' என்று குறித்தும் வைத்திருக்கிறேன். இப்போது அது வெளிவருகிறதா என்று தெரியவில்லை. 

அந்த இதழில் வெளியாகி இருக்கிறது இரா. இராகுலன் எழுதிய "தாமரை பூத்த தடாகம்' என்கிற கவிதை. அதிலிருக்கின்றன இந்த வரிகள் 
சில கேள்விகளோடும்
பதில்கள் எதிர்பார்த்தும்
உயிரோடிருக்கும் காலம்
வாராது,
இறந்துவிட்ட பிறகு
என் கல்லறையைத் தேடி வந்து
கண்ணீர்த் துளிகள் சிந்துகின்றனர்...
என்னவாயிருக்கும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com