இந்த வாரம் கலாரசிகன் - 15.05.2023

இந்த வாரம் கலாரசிகன் - 15.05.2023

டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயண யூடியூப் வகுப்பு குறித்த எனது பதிவில், சென்னை கம்பன் கழகம் குறித்துக் குறிப்பிட்டிருந்தேன்.

டாக்டர் சுதா சேஷய்யனின் கம்பராமாயண யூடியூப் வகுப்பு குறித்த எனது பதிவில், சென்னை கம்பன் கழகம் குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். நீதியரசர் எம்.எம். இஸ்மாயில், தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் பற்றிச் சொல்லிவிட்டு, பழ. பழநியப்பன் குறித்துக் குறிப்பிடாமல் விட்டது எனது தவறுதான். அவரது பங்களிப்பு சாதாரணமானதல்ல.
கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மேடைப் பேச்சுக்குத் தயாராக்கி, இளைய தலைமுறையினரை ஊக்குவித்து அவர் செய்திருக்கும் அரும்பணிகள் குறித்து, இன்றைய முன்னணி மேடைப் பேச்சாளர்கள் அனைவரும் நினைவுகூராமல் இருக்க முடியாது. சென்னை கம்பன் கழகத்தில் கம்ப ராமாயணம் பைபிள் தாள் பதிப்பை வெளிக்கொணர்ந்ததிலும் அவரது பங்களிப்பு உண்டு.
தன்னிடம் இருந்த (அவரது) சென்னை கம்பன் கழகத்தின் கம்பராமாயணப் பதிப்பை எனக்கு அவர் அன்பளிப்பாக வழங்கினார். இன்னும்கூட அதை பத்திரமாகப் பாதுகாக்கிறேன்.
கால் நூற்றாண்டு காலம் சென்னை கம்பன் கழகத்தில் கம்பர் குறித்த பல அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு கிரகித்தவர்; பலமுறை கம்பகாதையை படித்துப் படித்துத் தேறியவர்; 'கம்பன் அடிசூடி' என்று பட்டம் வழங்கப்பட்டவர் - இடையிடையே கம்ப ராமாயணப் பாடல்களுடன், எளிய பழகு தமிழில் உரைநடையாக 'கம்ப ராமாயணம்' தந்திருக்கிறார் பழ. பழநியப்பன்.
ஏற்கெனவே கம்பனைக் கற்றவர்களுக்குக் 'கையேடு'; இனிமேல் கற்க விழைபவர்களுக்கு 'கை விளக்கு' என்பது தனது நூல் குறித்த அவரது பதிவு. வெறுமனே கம்ப ராமாயணக் கதையை நகர்த்திக்கொண்டு செல்லாமல், முக்கியமான பாடல்களை எல்லாம் ஆங்காங்கே இணைத்திருப்பதுடன் நின்றுவிடவில்லை பழ. பழநியப்பன். ஐயப்பாடு ஏற்படுத்தும் வார்த்தைகளுக்கு பொருளும் தந்திருக்கிறார். 
இந்த நூலுக்கு மறைந்த 'காவியக் கவிஞர்' வாலி அணிந்துரை வழங்கி இருக்கிறார் - ''கம்பன் கல்லாத கலையும் வேதக் கடலும் இல்லை எனலாம். கம்பன் கீர்த்தியை, கம்பநாடனின் கவிதா நேர்த்தியை, அவனிடம் மலிந்து கிடக்கும் கலைமகள் கடாட்சத்தை, அவனது விருத்தமெல்லாம் இன்றளவும் மெருகு குறையாமல் தகத்தகாயமாய்த் துலங்குகின்ற விந்தையை, அவரது சமயப்பொறை ஓங்குகின்ற சிந்தனையை - எடைபோட்டு - அதன் நிறை என்னவென்று நமக்கு எடுத்தோதியுள்ளார் 'கம்ப காவலர்', 'கம்பனடி சூடி' பழ. பழநியப்பன்.
இந்நூல் இருக்கும் இல்லந்தோறும் இன்பம் பெருகும்.. பரிசுத்தமான இறையுணர்வில் இதயம் உருகும்!'' என்பது கவிஞர் வாலியின் வாக்கு.
'பொய்யுரையாத புண்ணியன்' என்று போற்றப்படும் வாலியின் வதைப்படலம், இந்த நூலின் தனிச்சிறப்பான பகுதி. 'வாலி வதம்' குறித்த விமர்சனங்களுக்கு, கம்பரின் கவிதைகள் வாயிலாக விளக்கம் தந்திருக்கும் பழ. பழநியப்பனின் எழுத்துக்குத் தலைவணங்கத் தோன்றுகிறது.
''தக்கது இது, தகாதது இது என்று தெரிந்து மனு நீதியின்படி ஒழுகாதவர், மக்களே ஆனாலும் அவர்கள் விலங்குகளே; ஆனால் அப்படித் தெரிந்து மனு நெறிப்படி வாழ்ந்தால், அவ்விலங்குகளும் தேவரே ஆவர். தருமம் செய்த பலரிலும் குற்றம் புரிந்தவர் உண்டு. தேவர்களிலும் தீமை செய்தவர் உண்டு. எனவே, எக்குலம் ஆயினும், யாவராயினும், அவரவர் செய்கைகளினால் வருவதே உயர்வும் தாழ்வும்'' என்பன போன்ற வரிகள் அற்புதமானவை.
பழ. பழநியப்பன் எனக்குத் தந்திருக்கும் கம்ப ராமாயணத்துக்கு அருகில் இந்தப் புத்தகத்தையும் வைத்து மகிழ்கிறேன்.

**************

பருவ இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்தபோது, பெரும்பாலான போராட்டங்கள் குறித்த கட்டுரைகளை நான் வாசித்திருக்கிறேன். ஒருசில மட்டும் விட்டுப் போயிருக்கலாம், அல்லது எனது நினைவிலிருந்து கலைந்து போயிருக்கலாம், அவ்வளவே. அ. முத்துக்கிருஷ்ணனின் 'போராட்டங்களின் கதை' புத்தக வடிவம் பெற்று விமர்சனத்துக்கு வந்தபோது, அதைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டேன்.
புதன்கிழமை திருச்சி, மதுரை என்று பயணத்துக்குத் தயாரானபோது மறக்காமல் பெட்டியில் வைத்துக் கொண்ட புத்தகம் 'போராட்டங்களின் கதை'. சுந்தர்லால் பகுகுணாவின் 'சிப்கோ' போராட்டத்தில் தொடங்கி, நமது தமிழகத்தின் கீழ்வெண்மணி போராட்டம் வரையில், நடைபெற்ற 44 புகழ்பெற்ற போராட்டங்கள் குறித்த பதிவுதான் 'போராட்டங்களின் கதை'.
இந்தியாவுக்கு வெளியே, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களிலும் நடைபெற்ற முக்கியமான போராட்டங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டு அடிப்படையிலோ, புவியியல் அடிப்படையிலோ, வரலாற்று அடிப்படையிலோ அல்லாமல் வரிசைப் படுத்தப்பட்டிருப்பதும்கூட ஒரு விதத்தில் படிப்பதற்கான ஆர்வம் குறையாமல் இருப்பதை உறுதிப்படுத்துகிறது எனலாம். 
இடதுசாரி, திராவிட சிந்தனையாளர் என்பதால் அ. முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள் அவர் கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. தொகுக்கப்பட்டிருக்கும் 44 போராட்டங்களில் ஒரு சில தவிர மற்றவை அனைத்துமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. இடதுசாரி சிந்தனையாளராக இருந்தாலும் தியானென்மென் சதுக்கத்தில் நடந்த சீன மாணவர் எழுச்சி குறித்தும், அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி துப்பாக்கிச் சூடு குறித்தும் பதிவு செய்ய அவர் தவறவில்லை என்பது, அவரது நடுநிலை மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
போராட்டங்கள் குறித்த செய்திகளுக்கு இடையில், தலைசிறந்த போராளிகள் குறித்த பதிவுகளையும் அதனூடே இணைத்திருப்பதற்கு அவரைப் பாராட்ட வேண்டும். என்னைப்போல ஏற்கெனவே படித்தவர்களும், போராட்டங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள விழையும் புதியவர்களும் பல தரவுகளைப்பெற இந்தப் புத்தகம் உதவும்.

**************

கிழக்காசிய நாடுகளில் கவிஞர்கள் எழுதும் 'இறுதிக் கவிதைகள்' குறித்து நான் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். சமீபத்தில் நான் படித்த ஜப்பான் இறுதிக் கவிதை இது. பகிர்ந்து கொள்கிறேன்.
நான் வாழ்ந்தென்ன ஆகிவிடும்
ஒரு ஆமை வாழ்கிறது
நூறு மடங்கு கூடுதலாய்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com