இலங்கையில் பிறந்த இலக்கியங்கள்

முற்காலத்திலிருந்தே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்து வந்திருக்கிறது.
இலங்கையில் பிறந்த இலக்கியங்கள்

முற்காலத்திலிருந்தே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றியுள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்து பூதந்தேவனார் என்ற புலவர் இயற்றிய ஏழு பாடல்கள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல். 
காளிதாசரின் வடமொழி காவியமான ரகுவம்சத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அதே பெயரில் இலங்கையில் இருந்த புலவர் அரசகேசரி என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் இயற்றியுள்ளார். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது. 
தமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில், இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், சோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் என்பனவும் அங்கு பிறந்தவையே. கிறித்தவ சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் என்பார் நீதிநூல் முதலிய சில நூல்கள் இயற்றினார். 
சிவசம்புப் புலவர், செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப்பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்ற தலத்து முருகக்கடவுளை பற்றி பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்றும் மக்கள் போற்றிவருகிறார்கள்.
யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் ஆறுமுக நாவலர். அவர் சிலகாலம் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் தங்கித் தமிழ்த் தொண்டு செய்தது உண்டு. சைவ சமயப் பற்று மிகுந்த அவர் பெரியபுராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார். சென்ற நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பதிலும் வல்லவராக விளங்கினார். 
பைபிளின் தமிழ் மொழிபெயர்ப்புக்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவர். பலர் தமிழ் நூல்கள் படிக்குமாறு பாடசாலை ஏற்படுத்தியதோடு மாணவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு அச்சகமும்  நடத்தினார். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதிப் பலர்க்கும் பயன்படுமாறு செய்தார். வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார். 
தமிழ் உரைநடையின் தந்தை என்று அவரைப் போற்றுவர். யாழ்பாணத்து கனகசபைப் புலவர் கிறித்தவ சமயத்தை சார்ந்தவர். விரைந்து கவிதை இயற்றுபவர். இவர், திருவாக்குப் புராணம், அழகிரிசாமி மடல் என்னும் நூல்களை பழைய மரபை ஒட்டி இயற்றியவர். 
வி. கனகசபைப்பிள்ளை என்ற அறிஞரும் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அவர் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் 1800 ஆண்டுகட்குமுன் தமிழர் என்ற ஆராய்ச்சி நூல் எழுதியும் ஏடுகளை ஆராய்ந்தும் தொண்டு செய்தார்.
இலங்கை தி.க. கனகசபைப்பிள்ளை என்பவரும் குறிப்பிடத்தக்க இலக்கியத் தொண்டு புரிந்தவர். வடமொழி வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தையும், சுந்தரகாண்டத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார்.
நா. கதிரைவேற்பிள்ளை எனும் மற்றொரு யாழ்ப்பாணப் புலவர் தமிழ்நாட்டிற்கு வந்து பல சைவ நூல்களையும் நைடதத்திற்கு உரையும் இயற்றினார்.
ஏறக்குறைய அறுபது செய்யுள் நூல்கள் இயற்றிய யாழ்ப்பாண அறிஞர் சிவசம்புப் புலவர் என்பவர் அந்தாதிகள் பல பாடியுள்ளார். எல்லாம் இடைக்காலக் தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றிப் பழைய போக்கில் பாடப்பட்டவை. சில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
இலங்கையில் மிகச் சிறப்பாக வளர்ந்த இலக்கியத் துறை நாடகம் எனலாம். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் புலவர் பலர் நாடகங்கள் இயற்றுவதில் ஈடுபட்டனர். ஆறுமுக நாவலரின் தந்தையாகிய கந்தப்பிள்ளை மட்டுமே இருபது நாடகங்களுக்குமேல் இயற்றினார். கீர்த்தனை முதலிய இசைப்பாடல்களும் இலங்கையில் உண்டு. ஆறுமுக நாவலரும் பல கீர்த்தனைப் பாடல்களை இயற்றியுள்ளார்.
இவ்வாறு இலங்கையில் தமிழ் இலக்கியங்கள் பழங்காலந்தொட்டே தமிழ் புலவர்களால் உரமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு தமிழ் மொழிக்குப் புகழைத் தேடித்தந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com