பல்லக்குசாமி பைந்தமிழ் ஞானியாரடிகள்!

சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்துவந்தனர். இதனால் தமிழையும் அரசரையும் இணைத்துக்கூறும் மரபு இன்றளவும் தொடர்கிறது.
பல்லக்குசாமி பைந்தமிழ் ஞானியாரடிகள்!

சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்துவந்தனர். இதனால் தமிழையும் அரசரையும் இணைத்துக்கூறும் மரபு இன்றளவும் தொடர்கிறது.
பாடு தமிழ்வளர்த்த கூடல் என்கிறது புறந்திரட்டு.
சோமன் வழிவந்த பாண்டியநின் நாடுடைத்து நல்ல தமிழ் என்கிறர் திருமுருகாற்றுப்படை உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.
நன் பாட்டுப்புலவனாயச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளுல்னோன்கான் என்கிறது அப்பர் தேவாரம்.
சங்கத்தமிழ் சங்க முகத்தமிழ் என்கிறது திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழி.
உறைவான் உயர் மகிற் கூடலில் ஆய்ந்த ஓஒ; தீந்தமிழிக் துறைவாய் நுழைந்தனையோ என்கிறது மாணிக்க வாசகரின் திருக்கோவையார்.
அந்த தமிழ்ப் பணியின் மரபில் வந்தவர்தான் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானியாரடிகள். 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் சைவக்குடும்பத்தில் அண்ணாமலை ஐயருக்கும் பார்வதியம்மைக்கும் மே 17,1873-இல் பிறந்தார் ஞானியாரடிகள். அவரது இயற்பெயர் பழனியாண்டி என்பதாகும்.
பழனியாண்டியின் பெற்றோர், திருநாகேஸ்வரத்திலிருந்து அடிக்கடி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியர் மடாதிபதிகளைக் காணச்செல்வார்கள். அப்போதைய மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் 'பழனியாண்டி மடத்திலிலேயே இருக்கட்டும்' எனக் கூற அவரது வாக்கை மீறாது பெற்றோர் பழனியாண்டியை மடத்திலேயே விட்டுவிட்டு புறப்பட்டார்கள்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என பன்மொழி பயின்றதோடு விநாயகர் அகவல், திருவாசகம், சிவபுராணம் திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா போன்றவற்றையும் பயின்றார்.
பழனியாண்டியின் 17-ஆம் வயதில் சிவசண்முக சுவாமிகள் பழனியாண்டியை அடுத்த மடாதிபதியாக நியமித்து சந்நியாச தீட்சை வழங்கினார். பழனியாண்டி, மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
மடத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பல்லக்கிலேயே பல இடங்களுக்கும் பயணம் செய்தார். அதை தன் வாழ்நாளில் ஒரு முறை கூட மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் பல இடங்களுக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு நாள் புதுச்சேரி கலைமகள் கழக ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்த ஞானியாரடிகளிடம், திரு.வி.க. 'காரில் பயணம் செய்தால் அதிக இடங்களுக்குப் போகலாம்' என கூறியும் அதை ஞானியாரடிகள் ஏற்கவில்லை.
1901-இல் ஒருநாள் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரரை தரிசித்து விட்டு ஞானியாரடிகளை சந்தித்தார். அப்போதே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஞானியாரடிகள் 'தமிழின் தற்கால நிலை' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், 'ஜமீன்தார்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்' என்று கூறினார். அதனை ஏற்ற பாண்டித்துரைத் தேவர் அதே ஆண்டு மதுரையில் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கினார். 
ஞானியாரடிகள் 'வாணி விலாச சபை' என்ற அமைப்பை உருவாக்கி, பலருக்கும் தமிழ் பயிற்றுவித்தார். 'ஞானியார் மாணவர் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கி தமிழறிஞர்களை பலரையும் உரை நிகழ்த்த வைத்துள்ளார். உ.வே.சா., சதாசிவம் பிள்ளை, ரா.பி. சேதுபிள்ளை போன்றோர் இதில் உரையாற்றியுள்ளனர். 
தஞ்சை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏழாவது, எட்டாவது ஆண்டு விழா நிகழ்வுகளுக்கு ஞானியாரடிகள் தலைமை ஏற்றார். அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க 1938-இல் கரந்தையில் புலவர் கல்லூரி தொடங்கப்பட்டது. அதை அடிகளாரே தொடக்கி வைத்தார். 
புதுவை மாநிலத்தில் வசித்துவந்த ஞானப்பிரகாச முதலியார் என்பவர் கிறித்தவர். ஆயினும், மத நல்லிணக்கத்தை விரும்புபவர். வடலூர் வள்ளலார் மீது பெருமதிப்பு உடையவர். ஒருமுறை புதுவை கலைமகள் கழகத்திற்கு வருகை தந்த ஞானியாரடிகளைச் சந்தித்து தம்முடைய இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். அவருடைய இல்லத்திற்குச் சென்ற ஞானியாரடிகள், அங்கு 'சீதாகல்யாணம்' என்ற தலைப்பில் அருமையான சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.
சென்னையில் அப்போது 'சைவ சித்தாந்த மகா சமாஜம்' என்றொரு அமைப்பு செயல்பட்டு வந்தது. அதன் தலைவர் அஷ்டாவதானி பூவை கல்யாணசுந்தர முதலியார். அவர், அடிகளார் கிறித்தவர் இல்லத்திற்கு சென்றது பிடிக்காததால், தனது சமாஜ தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இதனை அறிந்த அடிகளார் பெரிதும் வருந்தினார்.
புதுவையில் இருந்த பங்காரு பத்தர் என்ற தமிழ் ஆர்வலர், 1911-இல் அடிகளாரை அழைத்து 'கலைமகள் கழகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். மகாகவி பாரதியார், வ.வே.சு. ஐயர் போன்றோர் அதில் உறுப்பினராக இருந்துள்ளனர்.
நாத்திகரான ஈ.வெ.ரா. ஞானியாரிடத்தில் இருந்த பெருமதிப்பு காரணமாக தனது 'குடிஅரசு' இதழை ஞானியாரை வைத்தே தொடங்கினார். 
தமிழாசிரியர் ஒருவர் ஞானியாருக்கு யாப்பிலக்கணம் கற்பித்து வந்தார். அவர் தினமும் ஒரு வெண்பா இயற்றுவார். மாணவரான ஞானியார் அவ்வெண்பாவிற்கு சீர், தளை போன்றவற்றை எழுதி வைத்து, மறுநாள் ஆசிரியரிடத்தில் காட்டுவார். ஒரு நாள் ஆசிரியர் கீழ்க்கண்ட வெண்பாவை எழுதிவைத்து விட்டுச்சென்றார்.
நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்
பொற்பாம் நினதடியைப் போற்றினேன் -  தற்போது
வேண்டுஞ் செலவிற்கு வெண் பொற்காசுபத்து 
ஈண்டு தருக இசைந்து    

அடுத்த நாள் ஆசிரியர் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபோது அதில் 10 ரூபாய் இருந்தது. ஆசிரியர் அடிகளாரைப் பார்த்து, 'நான் பாட்டுக்கு மனம் போன போக்கில் எழுதிவைத்தேன், எதையும் எதிர்பார்த்து அல்ல' என்றார். அதற்கு அடிகளார் 'நான் பாட்டுக்கு பணம் வைத்தேன், வேறு எதற்காகவும் அல்ல' என சிலேடையாக பதிலுரைத்தார். 
மடத்தின் மரபை மீறாமல் தம் வாழ்நாள் முழுவதும் சிவிகையிலேயே பயணித்தார். அதனால் மக்கள் அவரை, 'பல்லக்கு சாமி' என்றே அழைத்தனர். சைவமும் தமிழும் தழைக்க அயராது  பாடுபட்டு வந்த ஞானியாரடிகள் 1942 பிப்ரவரி 1 அன்று இறைவனடி சேர்ந்தார்.

(மே 17 ஞானியாரடிகள் பிறந்த 150-ஆம் ஆண்டு நிறைவு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com