சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! 

பல பொருளுக்கு ஒரு சொல்லும் ஒரு பொருளுக்குப் பல சொல்லும் வழங்கும் திறம் மிக்க மொழிக்கட்டமைப்புப்  பண்பினைக் கொண்டிலங்குவது தமிழ்மொழியே என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர், குலோத்துங்க சோழன்
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! 
Updated on
2 min read


பல பொருளுக்கு ஒரு சொல்லும் ஒரு பொருளுக்குப் பல சொல்லும் வழங்கும் திறம் மிக்க மொழிக்கட்டமைப்புப் பண்பினைக் கொண்டிலங்குவது தமிழ்மொழியே என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர், குலோத்துங்க சோழன் அவையில் அரசவைப் புலவராக இருந்தபோது நடந்த ஒரு சுவையான நிகழ்வு மூலம் நாம் அறியலாம்.
சோழ நாட்டில் ஒருவன் குறைந்த அளவு கல்வியறிவு பெற்றவன். வருமானம் ஏதுமின்றி இருந்தான். அவன் மனைவி அவனிடம், "நாம் வாழ்க்கை நடத்தப் போதிய வருவாய் இல்லை. இப்படியே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் எப்படி? நம் அரசரைப் பற்றி புகழ்ந்து ஒரு கவி எழுதிப் பாடினால் பரிசில் தருவார் அல்லவா' என்றாள்.
அவனோ "எனக்குக் கவிதை எழுதத் தெரியாதே' எனக் கூற அவன் மனைவி அவன் கையில் பனையோலையும் எழுத்தாணியும் கொடுத்து, "இன்று முழுக்க ஊரில் நடக்கிற, மக்கள் பேசுகிற விவரங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டு வாருங்கள்' என்று கூறி அனுப்புகிறாள்.
அவனும் புறப்பட்டான். சென்று கொண்டே இருக்கும்போது ஓரிடத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அங்கே சிறுமி மணப்பெண்ணாகவும் சிறுவன் மாப்பிள்ளையாகவும் விளையாட, சிறுமி சமைத்து உணவு பரிமாறுவது போல் களிமண்ணை எடுத்து உண்ணச் சொல்ல, சிறுவன் அதை வாயில் இட்டான். உடன் சிறுமியும் உடன் இருந்த பிள்ளைகளும் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே' எனப் பகடி செய்தனர்.
நடந்து சென்றவனுக்கு இது புதிதாய்ப் பட அதனைப் பனையோலையில் எழுதிக் கொண்டான். சற்றே நடந்து சென்று அருகில் உள்ள சோலையில் அமர, அங்குப் பறவைகள் குரலெழுப்புவதைக் கண்டு அங்கிருந்த ஒருவர் "காவிறையே கூவிறையே' எனக்கூற அதையும் எழுதிக் கொண்டான்.
சோலையில் இருந்து வெளி வந்து சாலையில் நடக்க அங்கு இருவர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் மற்றவனைப் பார்த்து, "உங்கப்பன் கோயில் பெருச்சாளி'
எனக் கூற அதையும் எழுதிக் கொண்டான் அவன். வீட்டுக்கு நடந்து வரும் பாதையில் அவன் நண்பனைச் சந்திக்க அவன் "கைகளில் என்ன ஓலையும் எழுத்தாணியும் கொடு' எனக் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு, "என்னடா இப்படி கன்னா பின்னா என்று எழுதியிருக்கிறாய்' எனக் கேட்க அரைகுறைக் கவிஞன் "கன்னா பின்னா' என்பதையும் எழுதிக் கொள்கிறான்.
பின் இல்லம் சென்று தனது குறிப்புகளை மனைவியிடம் காட்டுகிறான். அவளோ, "என்னங்க மன்னரைப் பற்றி எந்தக் குறிப்பும் இதில் இல்லையே? அவரைப் புகழ்ந்து பாட வேண்டாமா? தென்னா மன்னா சோழங்கப் பெருமாளே என முடித்து விடுங்கள்' என்கிறாள்.
கவிதை ஒரு வழியாக நிறைவுக்கு வர அரை
குறைக் கவிஞன் அதை எடுத்துக்கொண்டு மன்னரிடம் சென்று,
மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே! கூவிறையே! உங்கப்பன்
கோவில் பெருச்சாளி! கன்னா பின்னா
தென்னா மன்னா! சோழங்கப் பெருமாளே!
எனப் படித்துக் காட்டினான்.
அனைவரும் நகைத்தது மட்டுமல்லாமல், மன்னன் இவனைத் தண்டிக்கப் போகிறான் எனவும் எண்ணினர்.
அவ்வமயம் அவையினின்றும் எழுந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அரைகுறைக் கவிஞனுக்கு உதவ எண்ணி ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனிப் பொருளை விளக்குகிறார்.
இங்குதான் கவிஞனின் ஆற்றல் வெளிப்படுகிறது. மனத்தில் பட்டதைக் கூறுவது மட்டுமல்ல, கவிதையின் சொல்லைப் பண்பட்ட பொருளால் விளக்குவதே கவிஞனின் பேராற்ற
லாகும்.
இங்கு, கவிச்சக்கரவர்த்தி தரும் பொருளைப் பாருங்கள்.
மண்ணுண்ணி - மண்ணை உண்ட திருமால். மா - திருமகள். மண்ணுண்ணி மாப்பிள்ளை - மண்ணை உண்ட திருமாலுக்கும், திருமகளுக்கும் மகனாகப் பிறந்த மன்மதனைப் போன்ற அழகும் வீரமும் உடைய மன்னனே! கா (காவல்) விறையே - விண்ணுலகை ஆளும் இந்திரனைப் போன்றவனே! (சோழ நாட்டின் காவல் தெய்வமே) கூ (ஒலி, ஓசை, இசை) விறையே - மண்ணையாளும் அரசே (இசைக்கு அரசரே). உங்கப்பன் கோயில் பெருச்சாளி - உனது தந்தையார் வில் வித்தையில் தேர்ந்தவர் (ஆளி) சிங்கம் போன்ற வலிமையுடையவர். கன்னா- வாரி வழங்குவதில் கர்ணனைப் போன்றவனே! பின்னா - அவனுக்குப் பின்னவன் தர்மனைப் போல் நீதி தவறாதவனே! தென்னா மன்னா - தென்னாடு முழுவதும் ஆளும் மன்னா! சோழங்கப் பெருமாளே - சோழ நாட்டின் பெருமையை நிலைநாட்டும் தலைவனே!
எனக் கூற, மன்னனும் இப்புகழுரையைக் கேட்டு மனம் மகிழ்ந்து அந்த அரைகுறைக் கவிஞனுக்குப் பொன்னும் பொருளும் வாரி வழங்கினான் என்பது கருத்து.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று உரைத்த தொல்காப்பிய பேராசானை நாம் நினைவில் கொள்ளத் தகும். தமிழில் சொல் என்பது அகழ அகழ நிலத்தில் கிடைக்கும் மணிகள் ஆகும்.
மணிகளில் அனைத்தும் ஒரே நிறமாக இராது. பல வண்ணங்கள், பல தரங்கள் இருக்கும். அதுபோல, ஒரே சொல் பல பொருட்களை இடத்திற்கேற்றவாறு வழங்குதலும், பல சொற்கள் ஒரே பொருளை வழங்குதலும் தமிழ் மொழியில் ஏராளமாக உண்டு.
எடுத்துக்காட்டாக, "யானை' எனும் விலங்கிற்கு அத்தி, ஆம்பல், உம்பல், எறும்பி, ஒருத்தல், கடிவை, கயம், கரி, களபம், களிறு, கறையடி, குஞ்சரம், கைம்மா, கைம்மை, தும்பி, தூங்கல், தோல், நால்வாய், புகர்முகம், புழைக்கை, பூட்கை, பெருமா, பொங்கடி, மதகயம், மதமா, மந்தமா, மருண்மா, மாதங்கம், மொய், வயமா, வல்விலங்கு, வழுவை, வேழம் ஆகிய 33 சொற்கள் வழங்கப்படுகின்றன.
இச்சொல் ஒவ்வொன்றும் யானையின் இயல்பை, அதன் செயலை நுண்மையாகக் குறிக்கும் என்பதை நம்மால் கூறும்போதே அறிய இயலும். ஒருபொருட் பன்மொழி ஆற்றல் அருந்தமிழுக்கு இயல்பாக வாய்க்கப் பெற்றுள்ளது. அதனால்தான் மகாகவி பாரதியார்
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லேஅதை
தொழுது படித்திடடி பாப்பா
என முரசறைகிறார்.
தமிழில் எந்தச் சொல்லிற்கும் சொற்களில் உயிராகவும், உயிர் மெய்யாகவும் உள்ள எழுத்துகளுக்கும் பொருளுண்டு என்பதால் தான்
தனிமைச் சுவையுடைய சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங் கண்டதில்லை
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com