பாரதியின் விசுவரூபத்தைக் காட்டியவர்!

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை முற்றுப்பெற்றபோது அவர் எழுதிய எல்லாப் படைப்புகளும் வெளிவந்துவிடவில்லை.
பாரதியின் விசுவரூபத்தைக் காட்டியவர்!

மகாகவி பாரதியாரின் வாழ்க்கை முற்றுப்பெற்றபோது அவர் எழுதிய எல்லாப் படைப்புகளும் வெளிவந்துவிடவில்லை. மகத்தான முன்னோடிகளின் தேடலில்தான் மெல்ல மெல்லப் பாரதியின் படைப்புகள்  வெளிப்படத் தொடங்கின.  
இந்த முன்னோடிகளின் வரிசையில் தனித்துக் குறிப்பிடத்தக்க பாரதி அறிஞராய்த் திகழ்பவர்தான், வரும் 22.11.2023 அன்று தொண்ணூறாம் அகவையில் அடியெடுத்து வைக்கவிருக்கும் சீனி. விசுவநாதன். சமகாலத்தில் பாரதியின் எழுத்துகளையும் வாழ்க்கை குறித்த ஆவணங்களையும் கண்டுபிடித்து வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கும் எனக்கும்கூட அவர் முன்னோடி; ஆதர்சம். 
பாரதியின் தம்பி சி. விசுவநாதன் ஒருமுறை 'இதுவரை பாரதிக்கு யாரும் செய்யாத, இனியும் செய்ய முடியாத மாபெரும் சாதனையைச் செய்து முடித்துவிட்டீர்கள்' என உச்சி மோந்து பாராட்டினார். பாரதியின் இளவல்தான் சீனி. விசுவநாதனுக்கு ஞானாசிரியர்; வழிகாட்டி. 
பாரதியின் கையெழுத்துப் பிரதிகள், பாரதியின் படைப்புகள் வெளிவந்த பழங்கால இதழ்கள், பாரதி காலத்திலேயே வந்த முதற்பதிப்பு நூல்கள், பாரதி குறித்த மூல ஆவணங்கள், தமிழ்நாட்டின் ஆவணக்காப்பகத்திலும், இந்தியாவின் தில்லி ஆவணக்காப்பகத்திலும் மாதக்கணக்கில் குடியிருந்து கண்டெடுத்த ஆங்கிலேயர் ஆட்சிக் கால அரசாணைகள், கடிதங்கள் - இப்படி எவரும் இவருக்குமுன் தேடிக் கண்டுபிடித்ததில்லை என்று புகழ்பாடிப் போற்றும்வண்ணம் புரிந்துள்ள பெருஞ்செயல்களால்தான் பாரதியின் விசுவரூப தரிசனம் நமக்கு இன்று சாத்தியமாகியிருக்கிறது.  
'பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணி' எனச் சொல்லப்படுவதைத் தனி மனிதப் பல்கலைக்கழகமாக இருந்து நம்காலத்தில் இவர் சாதித்திருக்கின்றார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 'பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு'க்குப் பாரதியின் பாடல்களையெல்லாம் கால வரிசையில் தொகுத்தளித்த பெருமை இவரைத்தான் சாரும். 
ஈழம் தந்த மாபெரும் அறிஞர் க. கைலாசபதி, சீனி. விசுவநாதன் உருவாக்கிய 'மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை' என்னும் நூலைக் கண்டு, 'கடந்த ஏழு தஸாப்தங்களுக்கு மேலாகப் பாரதி பற்றி வெளிவந்த நூல்கள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து விவரம் திரட்டி முறைப்படுத்தி வெளியிடுதல் சாதாரண காரியமன்று. ஆராய்ச்சியைத் தொழிலாய்க் கொள்பவர்களுக்கே சிரமமான பணியாயிருக்கும்' என்று விதந்து எழுதினார். 
'பாரதி நூல்கள்: பதிப்பு வரலாறு' என்னும் நூல் இணையற்ற முயற்சி.  பாரதியில் மூழ்கித் திளைத்த அறிஞர்களுக்கே இப்படி ஒன்றை உருவாக்குவது அரிதினும் அரிதான பணியாகும். பாரதியியலுக்குச் சீனி. விசுவநாதனின் அருங்கொடை இது.
பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள், மொழிபெயர்ப்புகள், ஆங்கில ஆக்கங்கள் என அனைத்தையும் பத்தாயிரம் பக்கங்கள் கொண்ட தொகுதிகளாக, கால வரிசையில் பாரதி படைப்புகள்-பன்னிரு தொகுதிகள், காலம் தெரியாதவற்றின் ஒரு தொகுதி என இவர் உருவாக்கியிருக்கும் சாதனை இந்திய மொழிகளில் எத்தனை பெருங்கவிஞர்களுக்கு வாய்த்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. 
பாரதியின் எழுத்துகளை விளங்கிக்கொள்ளத் தேவையான வரலாற்றுப் பின்புலம், சமூகச் சூழல், தொடர்புடைய நிகழ்வுகள் முதலியவற்றையெல்லாம் ஆய்வுத்துணையாகத் தேடித் தேடித் திரட்டிச் சேர்த்திருப்பது மற்றுமொரு பெரும்பணியாகும். இன்று தமிழுலகில் கால வரிசையில் பாரதி பாடல்களுக்கு ஆதாரபூர்வமான - நம்பகமான ஒரு பதிப்பு -  ஒரே பதிப்பு என்றால் அது சீனி. விசுவநாதன் செதுக்கிச் செதுக்கிச் செய்திருக்கிற செம்பதிப்பு மட்டும்தான். 1,340 பக்கங்களில் தமிழ்க் கவிதையின் பெருமிதமாக இந்தத் தொகுதி இலங்குகிறது.
மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய சீனி. விசுவநாதனின் பாரதியியல் முதல் முயற்சியே பாரதி புகழ்பாடும் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்ட நூலாகும். இந்நூல், இடம்பெற்ற படைப்புகளின் கீர்த்தியாலும் வெளியிட்ட பதிப்புமுறையின் நேர்த்தியாலும் அனைவரின் நெஞ்சை அள்ளிய வெளியீடாக விளங்கியது. இம்முதல்முயற்சியே ஒரு சாதனை முயற்சியாகும். இந்நூலுக்குத் தலைப்பை இட்டவர் மூதறிஞர் இராஜாஜி ஆவார். இந்நூலுக்குக் கட்டுரை வழங்கியவர்களில் ஒருவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். புரட்சிக் கவிஞரைச் சீனி. விசுவநாதன் சந்தித்துக் கட்டுரை பெற்ற நிகழ்வு ஓர் அரிய வரலாறாகவே காட்சி தருகிறது. 
புரட்சிக் கவிஞர் முதலில் எழுதி அளித்த கட்டுரை, விவாதங்களை ஏற்படுத்திவிடக்கூடும் எனப் பணிவாக மறுத்திருக்கிறார் சீனி. விசுவநாதன். பாரதிதாசன், சீற்றம் ஏதும் கொள்ளாமல், 'பாரதி பட்டினி நோன்பு' என்னும் கட்டுரையை மீண்டும் எழுதி வழங்கியிருக்கிறார். நூல் வெளிவந்த பிறகு, சீனி. விசுவநாதன் கேட்காமலேயே பாராட்டுக் கடிதத்தையும் கைப்பட எழுதி அனுப்பியிருக்கின்றார். முதல் முயற்சியிலேயே பாவேந்தரின் பாராட்டைப் பெற்ற பாரதி அறிஞர் சீனி. விசுவநாதன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
'கால வரிசையில் பாரதி படைப்புகள்-முதல் தொகுதி' வெளிவந்தபோது பிறிதொரு பாரதி அறிஞரான சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் மகத்தான அணிந்துரையை வரைந்திருந்தார். அதில், 'இந்நூலைக் கண்டு மகிழ்ந்து தோள் கொட்டி ஆர்ப்பரிக்கப் பாரதிதாசன் இல்லையே! நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். என் இளவல் சீனியின் பெருமையை, எற்றே தமிழில் இசைத்திடுவேன்' எனப் பாரதி மொழியாலேயே பாராட்டியிருந்தார்.
அண்மையில் முக்கியமான இரு தொகுதிகளைச் சீனி. விசுவநாதன் உருவாக்கித் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியிருக்கின்றார். 'பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி - கால வரிசையில் ஆவணப் பதிவுகள்' என்னும் தலைப்பில் அமைந்த இவை பாரதியியலில் மற்றுமொரு பரிமாணமாகும். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பாரதி குறித்த பதிவுகளையெல்லாம் சேகரித்த பெருமுயற்சியின் வெளிப்பாடு இது. இன்னும் தொடரவேண்டிய பெரும்பணியும்கூட. 
தமிழக அரசின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத முன்னெடுப்பை இப்போதைய முதல்வர் செய்திருக்கிறார். சாகித்திய அகாதெமி, ஞானபீடம், செம்மொழி விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் கனவு இல்லத்தைப் பரிசளிக்கும் நனவுத் திட்டம் அது. முதல் முறையாக இந்தப் பெரும்பரிசிலை அறிஞர்களும் எழுத்தாளர்களும் பெற்றிருக்கின்றனர். 
இந்த அறிஞர்களுக்கு இணையான மாபெரும் அறிஞர் சீனி. விசுவநாதன். தமிழக முதல்வர் சிறப்பு நேர்வாக எதையும் எதிர்பாராத இந்த மாமனிதருக்குக் கனவு இல்லத்தைப் பரிசளிக்க வேண்டுமெனத் தொண்ணூறு தொடங்கும் தருணத்தில் வேண்டுகோள் விடுக்க விழைகின்றேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com