காணவும் கருதவும் பலன் தரும் கார்த்திகை விளக்கு

இருபத்தேழு நட்சத்திரங்களுள் திரு என்ற அடைமொழி உடைய திருவாதிரையும் திருவோணமும் போலக் கார்த்திகை நட்சத்திரமும் திரு என்ற அடைமொழியுடன் திருக்கார்த்திகை என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதாகும்.
காணவும் கருதவும் பலன் தரும் கார்த்திகை விளக்கு

இருபத்தேழு நட்சத்திரங்களுள் திரு என்ற அடைமொழி உடைய திருவாதிரையும் திருவோணமும் போலக் கார்த்திகை நட்சத்திரமும் திரு என்ற அடைமொழியுடன் திருக்கார்த்திகை என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதாகும்.
இச்சிறப்பு அக்கார்த்திகை நட்சத்திரம் அமைந்த மாதத்திற்கும் கூடுதல் பெயரால் அமைந்தது போல் திருவாதிரைக்கும் திருவோணத்திற்கும் மாதப் பெயர் அமையாததால் கார்த்திகைக்கான திரு என்ற அடைமொழி தன்னேரில்லாத சிறப்பைத் தருவதாக உள்ளது எனலாம்.
மேலும் அவ்விரு நட்சத்திரங்களும் முறையே சிவனுக்கும் திருமாலுக்குமான தெய்வத் தொடர்போல் கார்த்திகையானது முருகப் பெருமானின் சிறப்பைப் பெற்றதோடு அம்மாதமே பல்வேறு சிறப்புகளைப் பெற்றதாய் இருப்பது தமிழ் அடையாளத்தைப் பறைசாற்றுவதாய் உள்ளது எனலாம்.
திரு என்ற சொல்லுக்குக் கண்டாரால் விரும்பத்தகும் தன்மை நோக்கம் எனத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் என்னும் உரையாசிரியர் விளக்கம் தந்தவாறு கார்த்திகை மாதத்தில் ஏற்றப்பட்டும் கார்த்திகை விளக்கு 
பற்றிய சிறப்பு எம்மாதத்திற்கும் கிட்டாத பெருஞ்சிறப்பாகும் எனலாம்.
இக்கார்த்திகை விளக்கு வழிபாடு, தமிழரின் தொன்று தொட்ட அடையாளம் உள்ளதாகச் சங்க இலக்கியங்களில் காணப்படுதலால் தற்காலத்தில் தீபாவளியாக ஐப்பசியில் கொண்டாடப்படும் ஒன்றே தமிழர் தீபாவளியாக இக்கார்த்திகை விளக்கு  உள்ளது எனலாம்.
இந்தக் கார்த்திகை நட்சத்திரம், ஆறு வடிவமான கூட்டாய்த் தென்படுவதால் அதனை அறுமீன் (ஆறு விண்மீன்) எனக் கூறுவதாக அகநானூற்றில் (141) கூறப்பட்டுள்ளது.
இந்த அறுமீனுக்கு ஒரு புராண வரலாற்றுப் புனைவும் உண்டு. சிவனது நெற்றிக்கண்ணிலிருந்து தெறித்த ஆறு தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் விழுந்த நிலையில் ஆறு குழந்தைகள் தோன்ற, அவற்றைப் பெண்கள் ஆறுபேர் எடுத்து வளர்த்ததால் முருகன் என்ற பொதுப்பெயர் பெற்ற அக்குழந்தை ஆறுமுகன் என்றதோடு கார்த்திகேயன் என்றும் கூறப்பெற்றதால் கார்த்திகை மாதத்திற்குத் தனிச்சிறப்பு அமைந்தது எனலாம்.
கார் என்றால் மேகம். மேகமாகிய கார் திகைக்கும் மாதம் கார்த்திகை எனப்பட்டது. இங்ஙனம் மேகம் திகைப்பதற்குரிய வகைக்காக ஏற்பட்ட தீபம், காலப்போக்கில் தெய்வ விளக்காகக் கொண்டப்படும் தெய்வ வழிபாடாக மாறியிருக்க வேண்டும் என்பதால்தான் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கார்த்திகை விளக்கீடு என்பதாகத் திருஞானசம்பந்தர் கூறினார் என ஊகிக்கலாம். 
இதன் தொடர்ச்சியாகவே 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள்,
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவர் அகத்திருள் சாய்த்து 
நின்று விளக்குறும் சோண சைலம் 
எனத் திருவண்ணாமலையைப் பாடிப் பரவினார்.    
பொதுவாகப் புற இருளைப் போக்குவது போல மனத்தின் அஞ்ஞான இருளைப் போக்கும் என்பதால் இக்கார்த்திகை விளக்கு ஏற்றப்படும் திருவண்ணாமலையையே விளக்காகப் பாவித்து சிவப்பிரகாசர் துதிக்கின்றார்.
இத்திருவண்ணாமலை பற்றிய இலக்கியங்கள் பல இருந்தாலும் கார்த்திகை விளக்குத் தொடர்பாகச் சிவப்பிரகாசர் பாடிய சோண சைல மாலை போலப் புராணிகர் சோணாசல பாரதியார் என்பவர், திருவண்ணாமலை கார்த்திகைத் தீப வெண்பா என நூறுபாடல் கொண்ட நூலின் இறுதியில் திருக்கார்த்திகைத் தீபத்தைக் கண்ணால் கண்டு தொழப் பலன் கிட்டும் என்றதால் கருத்தால் தொழுதலும் பலன்கிட்டும் என்பதாக உணர வைத்தார்.
நாளும் நினைக்க முத்திதரும் திருவண்ணாமலையின் திருக்கார்த்திகை விளக்கை மனக்கண்ணால் ஏற்றித் தொழுது பேறு பெறுவோமாக !

(இன்று திருவண்ணாமலை தீபம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com