இந்த வாரம் கலாரசிகன் - (26-11-2023)

நவம்பர் மாதம் பிறந்து விட்டாலே, டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாளுக்கு அவர் பிறந்த எட்டயபுரம் செல்வது குறித்தும், அதற்கான பயண ஏற்பாடுகள் குறித்தும் சிந்தனை எழுந்து விடுகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - (26-11-2023)

நவம்பர் மாதம் பிறந்து விட்டாலே, டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாளுக்கு அவர் பிறந்த எட்டயபுரம் செல்வது குறித்தும், அதற்கான பயண ஏற்பாடுகள் குறித்தும் சிந்தனை எழுந்து விடுகிறது. பயண ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன் என்று கவிஞர் ஜெயபாஸ்கரன் என்னை அழைத்துத் தெரிவித்தார். அடுத்த நாளே, தேனியிலிருந்து அழைத்தார் கவிஞர் பாரதன். இந்த ஆண்டு, எட்டயபுரத்தில் மகாகவி பிறந்த மண்ணில் நாங்களும் உங்களுடன் இணைகிறோம் என்றார்.

இதுபோல, தனியாகவும் குழுக்களாகவும் பாரதி அன்பர்கள் எட்டயபுரத்தில் நூற்றுக்கணக்கில் குவிய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். பாரதி அன்பர்கள் மட்டுமல்ல, தமிழ் கவிஞர்களும், எழுத்தாளர்களும், தமிழில் பாடும் இசைக் கலைஞர்களும் பாரதி பிறந்த மண்ணில் அவர் பிறந்த நன்னாளில் குவிந்து எட்டயபுரமே டிசம்பர் 11 அன்று விழாக்கோலம் பூண வேண்டும் என்பதுதான் எனது நீண்டநாள் கனவு.

"பாரதி எந்தவொரு ஜாதி, மதம், இனத்துக்கும் உரியவனல்ல. அவன் சர்வ சமய சமரசவாதி. பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் அருகதை கிடையாது' என்று சொன்ன கவியரசு கண்ணதாசன், சோவியத் யூனியனில் லெனினுக்குத் தரப்பட்ட மரியாதை தமிழகத்தில் மகாகவி பாரதிக்குத் தரப்பட வேண்டும் என்று விரும்பியவர். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளுக்குத் திருவையாற்றில் நடத்தப்படும் வருடாந்திர விழாபோல, பாரதி விழா எட்டயபுரத்தில் கொண்டாடப்பட வேண்டும் என்று நான் விழைவது நியாயம்தானே?

வழக்கம்போல இந்த ஆண்டும் டிசம்பர் 11 காலையில் பாரதியார் இல்லத்தில் அன்பர்களுடன் மரியாதை செலுத்த நான் வந்துவிடுவேன். எப்போதும்போல, முனைவர் பெரியண்ணன், கவிஞர் "இதயகீதம்' ராமானுஜம் ஆகியோர் தலைமையில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரும், திருவையாறு பாரதி இயக்க நண்பர்களும், "உரத்த சிந்தனை' உதயம் ராமின் "பாரதி உலா' குழுவினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் உள்ளிட்டவற்றின் தோழர்களும் அங்கே சங்கமமாவார்கள்.

பாரதியார் இல்லத்திலிருந்து பள்ளிச் சிறார்கள், கல்லூரி மாணவர்கள், தமிழார்வம் மிக்க இளைஞர்கள், பாரதி அன்பர்கள், பல்வேறு தமிழமைப்புகளின் சார்பில் பல்வேறு ஊர்களிலிருந்தும் பாரதியாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கூற எட்டயபுரம் வந்தவர்கள் என்று அனைவரும் ஊர்வலமாக, பாரதியார் மணிமண்டபம் நோக்கிச் செல்லும் அந்தக் காட்சியைப் பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியே என் வயதைப் பத்தாண்டுகள் குறைத்து விடுகிறது...

"தினமணி'யில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் மட்டும் ஒரு சிறிய மாற்றம். வழக்கம்போல, எட்டயபுரம், தூத்துக்குடியில் அந்த நிகழ்ச்சியை நடத்தாமல், இனிமேல் டிசம்பர் 11 மாலை நிகழ்ச்சியாக, விருது வழங்கும் நிகழ்ச்சியை மதுரையில் நடத்துவது என்று முடிவெடுத்திருக்கிறோம். பாரதியாரின் பிறந்த நாளில் எட்டயபுரம் வர இயலாத பலருக்கும் மதுரை வந்து செல்வது வசதியாக இருக்கும்.

எட்டயபுரத்தில் பாரதியாருக்கு அரசு நிகழ்ச்சி நடப்பதால், இரண்டு நிகழ்ச்சிகள் தேவையில்லையே என்பதும்கூட இந்த முடிவை எடுத்ததற்குக் காரணம்!

------------------------------------------------          

சில புத்தகங்களின் தலைப்பே நம்மைப் புரட்டிப் பார்க்க வைக்கும். புரட்டிப் பார்க்கும்போது, அதிலிருக்கும் பதிவுகள் நம்மைப் புரட்டிப் போட்டுப் படிக்கத் தூண்டும். ஒன்று, இரண்டு என்று பக்கங்கள் நகர நகர, நாம் அதற்குள் மூழ்கிப்போய், கடைசிப் பக்கத்தையும் படித்து முடித்த பிறகுதான் அதன் வாசிப்பு வசீகரத்திலிருந்து மீண்டு சுய நினைவுக்கே வருவோம்.

இத்தனை பீடிகைக்கும் காரணம் நான் புரட்டிப் பார்க்க நினைத்து, படித்து முடித்த ஒரு புத்தகம். காந்தி, மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரின் அட்டை முகப்புடன் "காலத்தின் குரல்' என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் அந்தப் புத்தகம் "இஸ்க்ரா' என்பவரின் மொழியாக்கம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகத்தின் போக்கில் மாற்றம் ஏற்படுத்திய 22 ஆளுமைகளின் உரைகள் அடங்கிய தொகுப்புதான் "காலத்தின் குரல்'.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் படித்துவரும் "இஸ்க்ரா' என்பவரின் இயற்பெயர் சதீஸ்குமார் என்கிறது அவர் குறித்த குறிப்பு. இது அவரது இரண்டாவது படைப்பு என்றும் தெரிவிக்கிறது. "உலக வரலாற்றை மாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள்' எவையெவை என்று தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பதற்காகவே அந்த இளைஞரை அழைத்துக் கைகுலுக்கிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆபிரகாம் லிங்கனின் "மக்களாட்சி என்றும் அழியாது'; காந்தியடிகளின் "செய் அல்லது செத்துமடி'; சுபாஷ் சந்திர போஸின் "உதிரம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்'; மார்ட்டின் லூதர் கிங்கின் "எனக்கொரு கனவு இருக்கிறது'; ஃபிடல் காஸ்ட்ரோவின் "வரலாறு என்னை விடுதலை செய்யும்' உள்ளிட்ட உரைகளை, நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏற்கெனவே பலமுறை படித்திருக்கிறேன். இஸ்க்ராவின் மொழியாக்கம் தங்கு தடையின்றி இருப்பதை அதனால்தான் உணர முடிந்தது.

இதிலிருக்கும் 22 உரைகளும், ஒவ்வொருவரும் கட்டாயம் படித்திருக்க வேண்டியவை. இளைஞர்கள் அவரவருக்குப் பிடித்த வரிகளை அடிக்கோடு இட்டு, அடிக்கடிப் புரட்டிப் படிக்க வேண்டியவை. படித்தேன் என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் நான் காலத்தின் குரலைப் பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

"இஸ்க்ரா' மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்லாமல், வருங்காலத்தில் மிகச் சிறந்த வரலாற்று பதிவாளராகவும், படைப்பாளியாகவும் உயரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை என்னில் ஏற்படுத்தி இருக்கிறது "காலத்தின் குரல்!'

------------------------------------------------

விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் "ழகரம்' எழுதிய "குறும்பா' தொகுப்பு. "நச்சென்று' அதிலிருந்து நான்கு வரிகள் என்னைப் பக்கென்று சிரிக்கவும் வைத்தன, சிந்திக்கவும் வைத்தன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றையும் கடந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, அது நல்ல நேரமல்லாமல் வேறென்ன? பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் உயிருடன்
இருக்கும்
நேரமெல்லாம்
நல்ல நேரம்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com