இந்த வாரம் கலாரசிகன் - 22-10-2023

பெங்களூரு சென்றிருந்தேன். தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ. தாமோதரன், செயற்குழு உறுப்பினர்கள் சு. பாரி, சரவணன் ஆகியோரை சந்தித்தேன்.
இந்த வாரம் கலாரசிகன் - 22-10-2023

பெங்களூரு சென்றிருந்தேன். தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ. தாமோதரன், செயற்குழு உறுப்பினர்கள் சு. பாரி, சரவணன் ஆகியோரை சந்தித்தேன். நீதிமன்றத் தடை, வழக்கு என்று பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள் முடங்கியிருப்பது குறித்துக் கவலை தெரிவித்தனர். பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், விரைவில் பிரச்னைகள் சமரசத்தின் மூலம் தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் பெரியவர் தாமோதரன்.

தமிழகத்துக்கு வெளியே செயல்படும் தமிழ்ச் சங்கங்களில் அரை நூற்றாண்டுக்கு முன்னால் காணப்பட்ட ஒற்றுமையும், உற்சாகமும் தற்போது குறைந்து வருவதற்கு, அங்கே வாழும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் தமிழார்வமும், தமிழுணர்வும் குறைந்து வருவதுகூடக் காரணம். தமிழகத்திலேயே தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்த இளைஞர்களின் எண்ணிக்கை அருகி வருகிறது எனும்போது, வேலை காரணமாகப் புலம்பெயர்ந்ததால், அங்கேயே படித்து வளரும் இளைஞர்கள் தமிழ் தெரியாதவர்களாக இருப்பதில் என்ன வியப்பு?

ஹிந்தி பிரசார சபைபோல, தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்பதை எல்லோரும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பை தமிழக அரசும் வெளியிட்டது. அது எந்த அளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

இதுபோன்ற பணிகளை, அரசுத் துறைகள் மூலம் நிறைவேற்ற முற்படுவது வெற்றியடையாது. அரசு ஊதியம் பெறும்போதே, உற்சாகம் குறைந்து விடும் என்பது அனுபவம் உணர்த்தும் உண்மை. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அல்லது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழகத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் தமிழ்ச் சங்கங்கள் அமைவதை ஊக்குவிக்க வேண்டும்.

அந்த அமைப்புகளுக்குத் தமிழ் வகுப்புகள் நடத்த நிதியுதவியும், பாடத்திட்ட உதவியும், பயிற்றுவிக்கப் பயிற்சியும் அளித்துப் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழில் படிக்கவும், எழுதவும் செய்ய வழிகோல வேண்டும். தமிழ் படிக்காமல் தமிழார்வம் ஏற்படாது. தமிழார்வம் இல்லாமல் தமிழுணர்வு சாத்தியமில்லை. இதை உணர்ந்துதான், ஏற்கெனவே சில தமிழ்ச் சங்கத்தினர் தமிழ் வகுப்புகள் நடத்துகிறார்கள். தாய்த் தமிழகத்தின் ஊக்கம் இல்லாததால், அவை எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியவில்லை.

நமது இலக்கியப் பேச்சாளர்கள் வெளிமாநில நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படும்போது, எதிர்பார்க்கும் வசதிகளும், சன்மானமும் இன்னொரு மிகப் பெரிய தடை. அந்த இலக்கிய அமைப்புகளுக்கு சன்மானம் கோராமல், நமது இலக்கியப் பேச்சாளர்கள் தமிழ்த் தொண்டாகக் கருதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்வந்தால், அந்தத் தமிழர்களின் தமிழுணர்வைத் தக்க வைக்க முடியும். இல்லையென்றால், "தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பதெல்லாம் பழங்கதையாக மாறிவிடும்.

------------------------------------------------------------

நான் நாகூர் ரூமியின் ரசிகன் என்று இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். அவரது புத்தகம் ஏதாவது விமர்சனத்துக்கு வந்தால், உடனடியாக எடுத்துப் படித்து விடுவது மட்டுமல்லாமல், தனியாக எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளவும் நான் தவறுவதில்லை. சூஃபித்துவம் குறித்த அவரது புத்தகங்களைப் படித்த பிறகுதான், அதன் அர்த்தமும், ஆழமும் எனக்குத் தெரியத் தொடங்கியது.

"இந்திய சூஃபிகள் வரிசை' என்கிற பெயரில் நிஜாமுத்தீன் அவ்லியாவில் தொடங்கி தொடர்ந்து பல சூஃபி ஞானிகள் குறித்த அவரது புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் புத்தகம், "ஹஸ்ரத் ஆஸாத் ரஸþல்'. ஹிந்து சமயத்தின் தத்துவங்களைத் தங்களது ஆங்கிலப் புலமை மூலம் மேலை நாடுகளில் புரிய வைத்த பல துறவிகளைப்போல, சூஃபி தத்துவத்தை உலகளாவிய அளவில் பரப்பிய பெருமை ஹஸ்ரத் ஆஸாத் ரஸþலுக்கு உண்டு.

"தத்துவம் சந்தேகத்தின் கதவுகளைத் திறக்கிறது. ஆனால், அக்கதவுகளை அதனால் மூட முடிவதில்லை. விஞ்ஞானமோ நிரூபிக்கப்பட்ட அத்தாட்சிகளை மட்டுமே தருகிறது. அதனால் நம்பிக்கையைக் கொடுக்க முடிவதில்லை. முழுமையாக ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால், அவனுக்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் மட்டும் போதாது. நம்பிக்கையும் வேண்டும்' என்பது அபுல் கலாம் ஆஸாதின் கருத்து.

அந்தக் கருத்தை உள்வாங்கிய ஹஸ்ரத்தின் வாழ்க்கையில் புதுப் பாதையைக் காட்டியவர், அவர் படித்துக் கொண்டிருந்த ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன். இஸ்லாம் சொல்லும் ஆன்மிகப் பயிற்சிகள் மட்டுமல்லாமல், மற்ற மதங்கள் குறித்தும் ஆழ்ந்து படித்துத் தேர்ந்தவர் ஹஸ்ரத் ஆஸாத் ரஸþல்.

பகவத் கீதையைப் பலமுறை ஆழமாகப் படித்தது மட்டுமல்ல, அதிலுள்ள பல ஸ்லோகங்களை அவர் மனனமும் செய்திருந்தார். "ஆன்மிகத்தையும், நிஜத்தையும் இணைப்பதில் பகவத் கீதைக்கு ஈடு இணையே இல்லை' என்று பாராட்ட அவர் தயங்கவில்லை. யோகா, வேதாந்தம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார் அவர்.

ஹஸ்ரத் ஆஸாத் ரஸþல், 36 ஆண்டுகள் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, முழுமூச்சாக ஆன்மிகப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தார். தன் ஞானகுருவான சயீத்கானின் அனுமதியுடன், 1975இல் "இன்ஸ்டிடியூட் ஃபார் த சர்ச் ஆஃப் ட்ரூத்' (உண்மையைத் தேடுவதற்கான நிறுவனம்) தொடங்கினார். 

சூஃபித்துவம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான பாதையல்ல. அது ஒரு பிரபஞ்சப் பாதை. யார் வேண்டுமானாலும், மதம் மாறாமல், அதில் பயணித்துப் பயனடையலாம் என்பதுதான் ஹஸ்ரத் முன்மொழிந்த செய்தி.

ஹஸ்ரத் ஆஸாத் ரஸþல் 2006இல் மறைந்தபோது, அவரது பள்ளியின் கிளைகள் உலகம் முழுவதும் பரவியிருந்தது. சூஃபித்துவத்தின் நோக்கம்தான் என்ன? "எந்த உண்மை உங்களுக்கு நெருக்கமாகத் தெரியுமோ அதையே அனுபவத்தின் விளக்கமாக அறிந்துகொள்வதுதான் சூஃபித்துவம்' என்கிறது நாகூர் ரூமியின் "ஹஸ்ரத் ஆஸாத் ரஸþல்' குறித்த புத்தகம்.

------------------------------------------------------------

நா. வீரராகவன், தில்லிவாழ் கவிஞர். இரம்பன், மதுவந்தி எனும் புனைபெயர்களில் எழுதுபவர். தில்லி தமிழ்ச் சங்கப் பவளவிழா மலரில் வெளிவந்திருந்தது "ஆனாலும்...' என்கிற அவருடைய இந்தக் கவிதை  
மாய்ந்து 
மாய்ந்து 
சுற்றினாலும்
காற்றாடிக்கில்லை
காற்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com