கம்பர் காட்டும் இராமனின் துயரம்

ஆரண்ய காண்டத்தில் அயோமுகி படலத்தில் இராமனது துயர மனநிலையைக் கம்பர் காட்சிப்படுத்தியுள்ள விதம் வியக்கத்தக்கது. 
கம்பர் காட்டும் இராமனின் துயரம்

ஆரண்ய காண்டத்தில் அயோமுகி படலத்தில் இராமனது துயர மனநிலையைக் கம்பர் காட்சிப்படுத்தியுள்ள விதம் வியக்கத்தக்கது. 
சடாயுவைத் தனது தந்தைக்கு இணையாகக் கருதினான் இராமன். இராவணனது வாளினால் இறக்கை வெட்டப்பட்டு மண்ணில் புரண்ட சடாயுவின் உயிர் பிரிந்தது.
தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமையைச் செய்ய இயலாமல் தவறவிட்ட இராமனுக்குத் தந்தைக்கு நிகரான சடாயுவுக்கு இறுதிக் கடமையைச் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அக்கடமையை நிறைவு செய்த பின்னர், சீதையைத் தேடிப் புறப்பட்டுச் சென்றனர் இராமனும் இலக்குவனும்.
தண்டக வனத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர்கள் கிரவுஞ்ச வனத்தை அடைந்தனர். அப்போது இராமனுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. தம்பியைப் பார்த்து, "குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா' என்று சொன்னான்.
உடனே தண்ணீர் தேடிப் புறப்பட்டான் இலக்குவன். பல இடங்களில் அலைந்த பிறகும் குடிநீர் கிடைக்கவில்லை. இலக்குவன் சோர்ந்து வந்த வேளையில் அங்கே அயோமுகி என்னும் அரக்கி தோன்றினாள். 
மனிதர்களையும் விலங்குகளையும் அடித்துக் கொன்று தின்னும் இயல்புடையவள் அவள். ஆனால் இலக்குவனைப் பார்த்ததும் "இவனைக் கொல்ல மாட்டேன்' என்று நினைத்து அவன்மேல் காதல் கொண்டாள்.
இலக்குவனுக்கு அருகில் வந்தாள் அயோமுகி. அவளது கொடிய தோற்றத்தைக் கண்ட இலக்குவன், "யார் நீ' என்று கேட்டான். "உன்மேல் கொண்ட ஆசையால் உன்னை அடைவதற்கு வந்தேன். என் பெயர் அயோமுகி. எனது எண்ணத்தை ஏற்றுக்கொண்டு என்னை நீ 
ஆதரித்தால் இப்போதே உனக்கு இங்கே கங்கை நீரைக் கொண்டு வந்து கொடுப்பேன்' என்றாள் அயோமுகி.
"இந்த எண்ணத்தோடு இங்கே நீ நின்றால் உனது மூக்கையும் காதையும் அறுத்துவிடுவேன்' என்று சினத்துடன் சொன்னான் இலக்குவன். இதற்குமேல் இவனிடம் பேசி நமது காதலை அடைய முடியாது என்று நினைத்த அயோமுகி அவனை மயக்கம் அடையச் செய்தாள். அப்படியே தூக்கிக் கொண்டு போய் தனது குகைக்குள் வைத்துக் கொண்டாள். 
தண்ணீர் கொண்டு வருவதற்குச் சென்ற தம்பி இன்னும் வரவில்லையே என்று வருந்தினான் இராமன். "சீதையைக் கவர்ந்து சென்ற அரக்கனை இலக்குவன் பார்த்திருப்பானோ? அவனுடன் போர் செய்கிறானோ? ஒருவேளை அந்த அரக்கனாகிய இராவணன், தம்பி இலக்குவனையும் கவர்ந்து கொண்டுபோய் விட்டானோ' என எண்ணி எண்ணிக் கலங்கினான். 
"சீதைக்குக் காவலாய் இருக்கும் பொறுப்பை இலக்குவனிடம் ஒப்படைத்து விட்டு, நான் பொன் மானைத் தேடிப் போனேன். ஆனால் அவனோ சீதையைத் தனியே விட்டுவிட்டு என்னைத் தேடி வந்துவிட்டான். தனியாக இருந்த சீதையை இராவணன் கவர்ந்து கொண்டு போய் விட்டான். சீதையைக் காப்பாற்ற முடியவில்லை என்ற கவலையினால் தற்கொலை செய்துகொண்டானோ?' என்று வருந்தினான்.
"தொடர்ந்து வரும் தீவினைக்கு ஆளாகிவிட்டேன் நான். இப்போது தன்னந்தனியன் ஆகிவிட்டேன். நீயும் என்னை விட்டு விட்டுப் போய்விட்டாயே! எனக்கு மகனைப் போன்றவனே! எனக்கு உண்மையை எடுத்துச் சொல்லி என்னைவிடவும் பெரியவனாய் இருந்தவனே! ஏதோ ஒரு காரணத்தால் நீ இறந்து போயிருந்தால் அதைவிடவும் கொடுமையானது எனக்கு வேறு எதுவும் கிடையாது. எனக்கு வரும் துன்பங்களை எல்லாம் போக்கும் ஆற்றல் கொண்டவனே! இப்போது எனக்கு நீயே துன்பத்தைக் கொடுத்து விட்டாயே! 
தந்தையைப் பிரிந்தேன், தாயரைப் பிரிந்தேன். உயிரைப் போன்ற என் மனைவி சீதையைப் பிரிந்தேன். நான் இன்னும் உயிருடன் இருப்பதற்குக் காரணமே நீ ஒருவன் தான். சீதையை நான் தேடி அலைகிறேன். இப்போது உன்னையும் சேர்த்துத் தேடும்படி ஆக்கி விட்டாயே!' என்று மனத்துக்குள்ளே 
புலம்பினான். 
"அறத்தின்படியே எல்லாம் நடக்கும் என்பது உண்மையானால், உனக்குத் தம்பியாக நான் பிறக்க வேண்டும் எனக்கு அண்ணனாக நீ பிறக்கவேண்டும். எனக்கு ஒரு கண் போல இருந்த சீதையைப் பிரிந்து ஒரு கண்ணை இழந்தவன் ஆகிவிட்டேன். இன்னொரு கண்ணாக இருந்த உன்னை இப்போது இழந்து விட்டேன். இந்த இருள் சூழ்ந்த வேளையில் இரண்டு கண்களும் இழந்த நான் எப்படி உன்னைத் தேடுவேன். இரண்டு கண்களும் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என்பதை என்னால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லையே' என எண்ணி வருந்தினான் இராமன்.

உண்டாகிய கார் இருளோடு ஒருவென்
கண்தான் அயல், வேறொரு கண் இலெனால்
புண்தான் உறுநெஞ்சு புழுங்குறுவேன்
எண்தான் இலென் எங்ஙனம் நாடுகெனோ  (67)

என்னும் பாடலில் இரண்டு கண்களையும் இழந்தது போல் இராமன் வருந்தி, தனக்குள்ளே புலம்பியதைக் கம்பர் உணர்த்தியுள்ளார்.

தந்தையை இழந்தான்; கண் போன்ற சீதையை இழந்தான்; இன்னொரு கண் போன்ற தம்பி இலக்குவனை இழந்தான். இவ்வளவு துன்பத்தையும் அனுபவிப்பவன் யார்? கோசல நாட்டின் அரசிளங்குமரனான இராமன். அந்த இராமனுக்கே இவ்வளவு துன்பம் என்றால் இந்த உலகத்தில் பிறந்தோர் அடையும் துன்பங்கள் எல்லாம் எம்மாத்திரம் என்பதை இந்தப் பகுதியின் மூலம் கம்பர் காட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com