துருத்தியாய்த் துயருறும் ஒருத்தி

ஏழு ஊர்களின் பொதுவினைப் பயன்பாட்டிற்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட உலையில் மாட்டிய துருத்தியைப் போல எல்லையறியாமல் என்நெஞ்சு வருந்துகிறது என்று தலைவி தோழியிடம் கீழ்கண்டவாறு உரைக்கிறாள்.


ஏழு ஊர்களின் பொதுவினைப் பயன்பாட்டிற்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட உலையில் மாட்டிய துருத்தியைப் போல எல்லையறியாமல் என்நெஞ்சு வருந்துகிறது என்று தலைவி தோழியிடம் கீழ்கண்டவாறு உரைக்கிறாள்.

ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் 
                                                          ஊர் யாத்த
உலைவாங்கு மிதி தோல்போலத் 
தலைவரம்பறியாது வருந்தும் 
                                                   என் நெஞ்சே 
(குறுந்தொகை: 172)

பிங்கல நிகண்டு துருத்தியென்பதற்குத் தோல் எனப் பொருள் உரைக்கிறது.

ஆற்றிடைக் குறைகாடுங் காவுங்கவின்பெறு துருத்தியும் (திருமுருகு. 223). இங்கு, துருத்தி எனும் சொல்லுக்குப் புலவர்பெருமான் நக்கீரர் பழமுதிர்சோலையில் உயர்ந்த குன்றுகளிடையே ஓடும் காட்டாற்றின் விளைவால் ஏற்படும் நிலத்திட்டு எனப் பொருள் கூறுகிறார்.

இந்நிலத்திட்டு வளைந்திருக்கும் அமைவே துருத்தியின் வடிவமாக இங்குக் கொள்ளப்பெறுகிறது. ஆம், உலைக்களத்தில் துருத்திக் கருவியில் பூட்டப்பட்டுள்ள தோல்பையின் வடிவம் போல, நக்கீரர் காட்டும் நிலத்திட்டும் அமைந்திருக்கும் போலும். காரணம், ஓடும் காட்டாற்றின் இடையே குவிக்கும் மணல் திட்டுகள் மலையின் வளைவுகளிடையே சேகரமாகிப் பெருத்திருக்கும் நிலமாகவும், புடைத்திருக்கும் வடிவமாகவும், பருத்திருக்கும் நிலையாகவும், முகிழ்த்திருக்கும் ஆற்றுமணலின் முனையாகவும் இந்தத் துருத்தியின் வடிவம் பல வகையான் அமைகிறது. 

கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் இங்கு, துருத்தி என்பது தோல்பை என அகநானூறு (224) பொருள் சுட்டுகிறது. கம்பராமாயணம்  நீர்வீசுங்கருவி மேகமென்றுதுருத்தி என்று உரைக்கிறது.

நீரைப் பீச்சிப் பாய்ச்சும் செயலைக்கொண்ட தோல்பையாகத் துருத்தி உள்ளதை நாம் அறியஇயலுகிறது.

இத்தகைய துருத்தியில் உலைத்துருத்தி, நீர்த்துருத்தி, மட்டத்துருத்தி, ஊதுருந்துருத்தி, நீர் வீசுந்துருத்தி எனப் பலவகைகள் உண்டு. உரி துவக்கு, தொக்கு, தொடு, தோடு, பச்சை, புறணி, புறவம், போர்வை என பலபெயர்களில் துருத்தி வழங்கப்படுகிறது.

அருணகிரிநாதர் தமது கந்தர் அலங்காரத்தில் 
துருத்தியெனும் படி கும்பித்து 
                                    வாயுவைச் சுற்றிமுறித் 
தருத்தியுடம்பை யொருக்கிலென்னார் 
                                        சிவயோகமென்னுங் 
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு 
                                                   நாதன் சொன்ன 
கருத்தை மனத்தி லிருந்துங்கண் 
                                  டீர்முத்தி கைகண்டதே 
(பாடல் 71)  
என்கிறார். 

இங்கு, தோலால் செய்யப்பட்ட துருத்தி எனும் யாக்கையால் கும்பதம் செய்து உயிர்வளியைச் சுழற்றி முறியச்செய்து அவ்வளியையே உணவாக உண்பித்து, இந்த உடலைத் துன்புறுத்துவதனால் விளையும் பயன்யாது எனில் சிவயோகச் சுடர்வழி செந்திலாண்டவர் திருவடியின்பம் நமக்குப் பெருஞ்சுடரொளி வழியே வாய்க்கப் பெறுவதைக் காணுங்கள் உலகோரே என விளிக்கிறார். 

துருத்தியெனும் கருவியில் அகப்பட்ட காற்று அலைபாய்ந்து இசையாக, நீர்த்துளி வீச்சாக, வளியின் இசையாக, ஒளியின் வளியாக, பலவினையாற்றி நல்வினை நல்கும்.  

ஆனால் துருத்தி நிலையில் உள்ள என்னிலையை, தீராத துன்பத்தை, ஓயாத நினைவால் வாட்டும் பொழுதை யாரிடம் சொல்வது தோழி என நினையும் வரைவிடைப் பிரிவால்  ஏற்பட்ட தலைவியின் துயரத்தை உலகோர்க்குக் காட்டும் வகையில் எவரும் எண்ணிடாத, இதுவரை எப்புலவரும் உரைக்காத  வகையில் துயர் எடுத்தியம்பலை ஏழூரின் பொதுவினைக்குப் பயனாற்றும் உலைக்களத்தின் மிதிதோலாம் துருத்தியைப் பொருத்திக்காட்டி கற்போர்மனத்தில் துயரத்தைப் புலம்பெயரச்செய்யும் புலவர் பெருமான் கச்சிப்பேட்டு (காஞ்சிப்புலவர்) நன்னாகையாரின் பாத்திறம் நம்மை வியக்க வைக்கிறது; மலைக்க வைக்கிறது.

உலைகளத்துருத்தி போன்ற பெரும் துயரம் தலைவிக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதைத் தலைவி வழியே புலவர் கூறுகிறார்: 

"பொருளீட்டச்சென்ற என் தலைவன் அவ்விடத்தில் தனிமையாக இருப்பாரே, அத்தனிமை அவரை வாட்டுமே என்ற எண்ணத்துயரால் வருந்தும் நான் அல்லும் பகலும் ஓயாத எனும் மிதிதோலின் நிலையைப் போல என் உள்ளம் இருக்கிறதென உரைப்பதைத் தவிர வேறென்ன செய்வேன் தோழி' என்கிறாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com