இந்த வாரம் கலாரசிகன் - 07-04-2024

இலக்கிய உலகிற்கு கௌரவம்: முனைவர் தெ.ஞானசுந்தரம், கு.வெ.பாலசுப்பிரமணியன் விருதுக்கு தேர்வு
இந்த வாரம் கலாரசிகன் - 07-04-2024

இந்த ஆண்டுக்கான "மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்' அறிவிக்கப்பட்டிருக்கிறது. குன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படும் இந்த விருதுகள், தமிழ் இலக்கிய உலகின் மிகப்பெரிய அங்கீகாரமாக மாறி இருப்பதற்குக் காரணம், விருதாளர்களின் தேர்வு.

எழுத்தாளர் மா.அரங்கநாதனின் நினைவையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 16ஆம் தேதி வழங்கப்படும் இந்த விருதின் மரியாதை சாதாரணமானதல்ல. இந்த ஆண்டுக்கான விருது முனைவர் தெ.ஞானசுந்தரத்துக்கும், எழுத்தாளர் கு.வெ.பால

சுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட உள்ளது என்கிற செய்தியைக் கேட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதிலும் குறிப்பாக முனைவர் தெ.ஞா. தேர்ந்தெடுக்கப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இன்றைய தமிழ் இலக்கியப் பரப்பில் அனைவராலும் மதிக்கப்படும், போற்றப்படும் இலக்கிய ஆளுமையாக வலம் வருபவர் முனைவர் தெ.ஞானசுந்தரம். அது சங்க இலக்கியமானாலும்; சமய இலக்கியமானாலும்; திருமுறைகளானாலும்; பிரபந்தங்களானாலும்; திருக்குறளானாலும்; தொல்காப்பியமானாலும்; கம்ப காதை என்றாலும்; சிலப்பதிகாரம் என்றாலும் ஆழங்காற்பட்ட புலமையுடன் வலம் வரும் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் தெ.ஞானசுந்தரம்.

தமிழ்த்தாய் விருது, திருவள்ளுவர் விருது, கம்பர் விருது, இலக்கிய மாமணி விருது என்று தமிழக அரசு வழங்கும் என்னென்ன விருதுகள் உண்டோ அவை அனைத்துக்கும் தகுதியான ஒருவர் உண்டென்றால், அது முனைவர் தெ.ஞானசுந்தரமாகத்தான் இருக்கும். எல்லா விருதுகளையும் ஒருசேர ஒருவருக்கு எப்படி வழங்குவது என்கிற தயக்கத்தாலோ என்னவோ, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அவருக்கு எந்த விருதையும் வழங்கித் தனக்குப் பெருமை சேர்த்துக்கொள்ளவில்லை.

முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் "கற்பக மலர்கள்' என்கிற திருக்குறள் கட்டுரைகளின் தொகுப்பும், அவரது வைணவக் கலைச்சொல் அகராதியும் தமிழுக்கு அவர் வழங்கி இருக்கும் கொடைகள். சென்னை, கோவை கம்பன் கழகங்கள் வெளியிட்ட கம்ப ராமாயணப் பதிப்புகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது.

விருதுபெறும் எழுத்தாளர் கு.வெ.பால சுப்பிரமணியன் நூறுக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். எனக்கு அவருடன் நேரிடையான தொடர்பும், பழக்கமும் இல்லை என்பதால் அவர் குறித்து அதிகம் சொல்லவில்லையே தவிர, அவருடைய இலக்கியப் பங்களிப்பும், படைப்புகளும் விருதுக்கான தகுதியை அவருக்குப் பெற்றுத் தருகின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. குன்றில் இலக்கிய அமைப்பு ஒருவரை விருதுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறது எனும்போது அதற்குமேல் அங்கீகாரம் வேறு என்னவாக இருக்க முடியும்!

-----------------------------------------------------------------------------------------------------------


எப்படி "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதய்யர் இல்லாவிட்டால் பழந்தமிழ் இலக்கியங்கள் தேடிக் கண்டறியப்பட்டு நிலை பெற்றிருக்காதோ, அதேபோல கல்லிடைக்குறிச்சி நீலகண்ட சாஸ்திரியார் இல்லாமல் போயிருந்தால் தென்னிந்தியாவின் வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்காது. தென்னிந்திய வரலாறு மட்டுமல்ல, பண்டைய இந்திய வரலாறும்கூட அவரது பங்களிப்பால்தான் ஓரளவுக்கு முழுமை பெற்றது எனலாம்.

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய "நாலந்தா' என்கிற புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. பி.ஆர்.மகாதேவனின் மொழியாக்கம். நாலந்தா குறித்தும், நாலந்தாவில் குப்தர்கள் காலத்தில் திகழ்ந்த பல்கலைக்கழகம் குறித்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேனே தவிர, முழுமையான வரலாற்றுப் பதிவை நான் இதுவரையில் படித்ததில்லை. அதனால் உடனே எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

நாலந்தா மடாலயமும், பல்கலைக்கழகமும் உலக வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளங்கள். பாலாதித்ய குப்தரின் காலம் தொடங்கி, கி.பி. 12ஆம் நூற்றாண்டில் முஹம்மது பக்தியார் கில்ஜியால் அழிக்கப்படும் வரை சர்வதேசப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது நாலந்தா. சீனா, பாரசீகம், கிரேக்கம் என்று பல்வேறு நாட்டு அறிஞர்களும் தேடிவந்த நாலந்தாவின் சிதைவுகள் இப்போதும் இருக்கின்றன.

நாலந்தா பௌத்த மடாலயத்தில் இருந்த பிக்குகள் விரட்டி அடிக்கப்பட்டு, அந்தப் பல்கலைக்கழகம் கி.பி.1193இல் தீக்கிரையாக்கப்பட்டபோது, அதிலிருந்த நூல் நிலையம் மூன்று மாதங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது என்றால் அங்கே எத்தனை ஓலைச்சுவடிகள் இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். நாலந்தா என்னும் வரலாற்றுப் பொக்கிஷத்தை, செங்கல் செங்கலாக அடுக்கி, நம் கண் முன்னால் விரித்துக் காட்டியிருக்கிறார் நீலகண்ட சாஸ்திரி. வெறும் ஆவணமாக மட்டுமே இல்லாமல் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார்.

இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நமது வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதற்கு இந்தப் புத்தகத்தைப் படித்திருக்க வேண்டும். நாலந்தாவுக்கு ஒருதடவை போகவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது இந்தப் புத்தகம்.

-----------------------------------------------------------------------------------------------------------

பட்டணத்துக்கு லட்சிய வெறியுடனோ, பிழைப்புத் தேடியோ வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் "ஆபத்பாந்தவனாக' (இடரில் உதவுபவனாக) இருப்பது அடகுக் கடைகள்தான். திருமணமாகியிருந்து, வாய்க்கும் வயிற்றுக்குமான போராட்டத்துடன் வாழ்க்கை நடத்தும் சாமானியர்களுக்கும் அடகுக் கடைகள் சமய சஞ்சீவிகள். இது எனக்கு அனுபவ உண்மையும்கூட.

நீண்ட நாள்களுக்குப் பிறகு, இயக்குநர் சீனு.ராமசாமி என்னைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். தேர்தல் நிலவரம் குறித்துத் தெரிந்து கொள்வதற்காக வெளியே சென்றிருந்த நான் அலுவலகம் திரும்பியபோது நள்ளிரவு கடந்து விட்டிருந்தது. எனக்காகச் சில மணி நேரம் காத்திருந்துவிட்டு, ஒரு கடிதத்துடன் தனது புதிய கவிதைத் தொகுப்பான "புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' புத்தகத்தை நிருபர் அசோக் குமாரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். (சீனு.ராமசாமி மன்னிக்க வேண்டும். நேரில் சந்திக்கிறேன்).

அந்தக் கவிதைத் தொகுப்பில் "பின்புலம்' என்று தலைப்பிட்டு இடம் பெற்றிருக்கும் கவிதை இது. முதல் பத்தியை ஒருமுறை மீண்டும் படித்துவிட்டு இந்தக் கவிதையைப் படியுங்கள். அதன் அர்த்தமும், ஆழமும், உணர்வும் புரியும்.

கம்மல்

மூக்குத்தி

தாலிக்கொடி

மூன்றும் மீட்கப்படும் இந்நாளில்

நீ

இவையனைத்தையும்

கழட்டிய

பின்னணியின் இசை

விவரிக்க முடியாத

பெருந்துக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com