அளியரோ அளியர் அளி இழந்தோரே!

பாண்டியன் மாறன் வழுதியின் போர்வீரம்

சங்ககாலப் புலவர்களில் ஐயூர் முடவனார் என்பவரும் ஒருவர். இவர் புறநானூற்றில் ஒரு பாடலில் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இந்த உலகத்தில் கடல் பொங்கி, தண்ணீர் ஊருக்குள் பெருக்கெடுத்து ஓடினால் அதனை அணைபோட்டுத் தடுக்க நம்மால் இயலாது. பெருந்தீயானது சுற்றிலும் பற்றி எரியும் போது அந்த நெருப்பிலிருந்து தப்புவதற்கென்று நமக்கு நிழல் இருக்காது. ஏனென்றால் நெருப்பிற்கு இரையாக மரங்கள்தான் முதலில் அழிந்து போயிருக்கும். காற்று, புயல் காற்றாகவோ சூறைக் காற்றாகவோ சுழன்று அடித்தால் அந்த வேகத்தைத் தடுக்கும் வலிமை நம்மிடம் இல்லை.

இவை எல்லாம் இயற்கையின் ஆற்றல். இந்த இயற்கையின் ஆற்றலைத் தடுக்கும் அளவிற்கு மனித ஆற்றல் இல்லை. இவற்றைப் போலவே பாண்டியன் மாறன் வழுதி, சினத்துடன் போருக்கு எழுந்தால் அவனை எதிர்த்து நிற்பதற்கு மன்னர் எவரும் கிடையாது என்று அவனது போராற்றலை ஐயூர் முடவனார் பாடியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மன்னர்கள், தமிழ்நாட்டின் பகுதிகளில் வாழலாம். ஆனால், இந்தத் தமிழ்நாட்டைத் தனக்கானது என உரிமை கோரினால் அவர்கள் யாரையும் விட்டு வைக்கும் தன்மை மாறன் வழுதிக்குக் கிடையாது. அவர்களை எல்லாம் போரிட்டு வென்று தமிழ்நாடு முழுவதையும் தனக்குரியதாக்கிக் கொண்ட பெருமைக்கு உரியவன் அவன். போருக்குச் சென்ற அவன், பிற மன்னர்களைப் பார்த்து "என் நாட்டிற்குக் கப்பம் செலுத்துங்கள்' என்று கேட்டால் எல்லோரும் பணிந்து கப்பம் செலுத்தவேண்டும்.

அவ்வாறு கப்பம் செலுத்துவோர் மட்டுமே துன்பம் இல்லாமல் நிம்மதியாகத் தங்கள் நாட்டைத் தாங்களே ஆள முடியும். அவ்வாறு பணியாத மன்னர்களைத் தனது போராற்றலால் அழிப்பான். அவ்வாறு பாண்டியன் மாறன் வழுதியின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எப்பாடு படுகிறார்கள் என்பதைக் கண்டால் நமக்கு இரக்கம்தான் வரும். அவ்வளவு கொடுமையான தாக்குதலை நிகழ்த்துவான்.

கறையான் என்னும் உயிரினம் பல உயிரிப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. மரத்தின் பட்டைகளில் தங்கி மரப்பட்டையை அரித்துத் தின்னும் கறையான் ஒரு வகை. இன்னொரு வகையான கறையான், தரையில் புற்றமைத்து வாழும். அந்தப் புற்றமைப்பை உற்று நோக்கினால் தரைக்கு மேலே இருக்கும் புற்றின் அளவிற்குத் தரைக்குக் கீழேயும் இருக்கும்.

புற்றின் மேல் பகுதியிலிருந்து காற்றும் வெளிச்சமும் புற்று முழுவதும் பரவும் வகையில் அவை அந்தப் புற்றினை உருவாக்கியிருக்கும். கறையானின் வாயிலிருந்து வரும் திரவத்தை மண்ணுடன் கலந்து உறுதியாகவும் மிகவும் நுட்பமாகவும் புற்றினை அமைக்கும். நன்றாகக் காய்ந்துவிட்ட புற்றினை நமது கையினால் உடைக்க இயலாது. சுட்ட செங்கல் அளவிற்கு உறுதியாக இருக்கும்.

இந்தக் கறையானின் இன்னொரு வகையே ஈசல் என்பது. கறையான் புற்றிலிருந்து வெளிப்படுவதுதான் ஈசல். ஆனால், அது கறையானுடன் சேர்ந்து வாழாமல் தனித்து வாழும் இயல்பு கொண்டது. ஒரு வகை எறும்பானது இறகு முளைத்துத் திரிவதைப் போல், கறையானின் இந்த வகையும் இறகுடன் ஈசலாய் வெளியேறுகிறது.

மழைக்காலத்தில் மட்டும் ஈசல் வெளியேறுவதற்குக் காரணம், மழையினால் அதன் புற்றில் சிதைவு ஏற்படுவதுதான். புற்றில் உயிர் விடாமல் அவை, புற்றுக்கு வெளியே பறந்து வந்து ஒரு நாளிலேயே உயிர்விடுகின்றன. அந்த ஈசலின் வாழ்க்கையைப் போல், பாண்டியன் மாறன் வழுதியை எதிர்த்த மன்னர்கள் மாண்டு போவார்கள் என்று பாடியுள்ளார்.

நீர்மிகின் சிறையும் இல்லை, தீமிகின்

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை

வளிமிகின் வலியும் இல்லை, ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி

தண்தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து

கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே

அளியரோ அளியர், அவன்அளி இழந்தோரே!

நுண்பல் சிதலை அரிது முயன்று எடுத்த

செம்புற்று ஈயல்போல

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோரே! (புறம்:51)

(சிறை-அணை, அன்ன-போன்ற, கொண்டி-கப்பம், நடுக்கற்றனர்-அச்சம் நீங்கினர், அளியரோ அளியர் மிகவும் இரங்கத்தக்கவர், சிதலை-கறையான், செம்புற்று-செம்மையான புற்று, உலமரு-உலகில் வாழ இயலா நிலை)

நாம் நம் வாழ்க்கையில் கண்ணால் காணும், இந்த ஈசலின் நிலையற்ற ஒரு நாள் வாழ்க்கையைப் பாண்டியன் மாறன் வழுதியின் பகைவர்களுக்குப் பொருத்திப் பாடியுள்ளார் ஐயூர் முடவனார்.

ஈசல் என்பது இரவில்தான் பெரும்பாலும் உயிர் விடுவதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆனால் ஐயூர் முடவனார் ஒரு பகல் வாழ்க்கை என்று ஈசலின் வாழ்க்கையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பகல் என்பதும் ஒரு பொழுது என்பதும் ஒரு நாளினைக் குறிக்கப்பயன்பட்ட சொற்கள்.

பேரா. முகிலை இராசபாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com