

அண்மையில் அடித்த ஃபென்ஜால் புயலால் இயல்புநிலை பாதிக்கப்பட்டு, வெள்ளம் வடியாத வேதனைப் பொழுதுகளை நினைக்கிறபோது, பாரதி காலத்தில் புதுவையைப் புரட்டிப் போட்ட நள வருஷத்துப் புயல் மீளவும் வந்து மனதைச் சூழ்ந்துகொள்கிறது.
காற்றென வந்த கூற்றம் ஆடிய ஊழிக் கூத்தால் நேர்ந்த அவலங்களையும் அவற்றை மாற்ற, சுதேசிகளும், உள்ளூர்த் தனவந்தர்களும், இளைஞர்களும் சேர்ந்து புரிந்த நிவாரணப் பணிகளையும் ஒரு பத்திரிகையாளர் என்கிற முறையில் பதிவு செய்திருக்கிற பாரதி, கொட்டித் தீர்த்த மழைச் சந்தத்திற்கேற்ப, "திக்குகள் எட்டும் சிதறி' எனத் தொடங்கும் பாடல் இசைத்திருக்கிறார்.
புயலில் தப்பிப் பிழைத்த தென்னந்தோப்பைப் பற்றியும் பாடியிருக்கிறார். "பாரதியார் பாடிய பிறகு, தென்னந்தோப்பு ஒரு கண்காட்சித் தோப்பாக ஆகிவிட்டது. ஊர் ஜனங்களெல்லாம் போய்ப் பார்த்து சந்தோஷித்தார்கள்' என்று வியப்பு மேலிட யதுகிரி அம்மாள் பதிவிடுகிறார்.
பாரதியின் புதல்வியர் தங்கம்மாள், சகுந்தலா, யதுகிரியோடு அவர்தம் தங்கை, ஆ.ஜி.ரங்கநாயகி, பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்டவர்கள் பாரதியர் கால நள வருஷத்துப் புயல் குறித்த, பல்வேறு சித்திரங்களைப் பதிவிட்டிருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் இன்னும் ஓர் இளைஞர் வருகிறார். மகாகவி பாரதியாரின் அன்புக்கும் மகான் ஸ்ரீஅரவிந்தரின் அருளுக்கும் பாத்திரமானவர். நள வருஷத்துப் புயலையும், பின்னர் நடந்த நிகழ்வுகளையும் அவர் பின்வருமாறு எழுதுகிறார்.
"1916-ஆம் வருடம் எனக்கு 18 வயது முடிவு. பள்ளிக்கூட வாழ்வு முடிவடைந்தது. கலாசாலையை விட்டு நீங்குவதற்குக் கடைசி அம்சமான பி.ஏ. பரீட்சைக்குத் தேதி குறித்தாய்விட்டது. இரவு பகலாய்க் கண்விழித்துப் படித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று நடுநிசியில் இடியும் மின்னலோடு கூடிய பெருமழையும் ஆரம்பித்தது. சில நாழிகைக்கெல்லாம் என்றுமில்லாத உக்கிரத்தோடு வாயு பகவானுடைய சண்டமாருதம் கலந்து கொண்டது. வீட்டு ஜன்னல்களும் கதவுகளும் படீரென்று அடிபடுகின்றன. வீட்டு அறையிலுள்ள அரிக்கன் விளக்கு கூட நின்று எரியவில்லை. பெரிய பெரிய மரங்களும், சுவர்களும் பெயர்ந்து விழும் சப்தம், காது செவிடுபடுகிறது. அதோடு, அடர்ந்த இருளும் சேர்ந்துகொண்ட பயங்கரக் காட்சியை நேரில் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
பொழுது சற்றே விடிய ஆரம்பித்தது. காற்றும் சற்றுக் குறைந்தது. வெளியில் வர வழியில்லை. என் வாசற்படியில் மட்டும் நான்கு தென்னை மரங்களும் இரண்டு பூவரசமரங்களும் விழுந்து கிடந்தன. அவற்றை நீக்கி வெளிவந்ததும் வீதி நெடுகிலும் கண்ட அலங்கோலக் காட்சி மிக்க பரிதாபமாயிருந்தது. மிக்க வனப்புடன் அடர்ந்து வளர்ந்து கோடைக்காலத்தில் குளிர்ந்த நிழலைத் தந்த நூற்றுக்கணக்கான மரங்களில் ஒன்று கூட எஞ்சி நிற்கவில்லை. புதுவையில் ஒரு வீதியில் கூட ஒரு மரமில்லை. எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.
என் பி.ஏ. பரீட்சையின் நினைவு மாறி, ஆண்டவனுடைய சோதனையின் காட்சியே என் முன் நின்றது.
என் புத்திக்கு அடங்காத எண்ணமோ, சம்பவமோ நிகழ்ந்தால், அதை உடனே ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமத்திலாவது திரு.பாரதியாரிடமாவது வெளியிடாவிட்டால் எனக்குச் சாந்தியேற்படுவதில்லை.
அன்று அதிகாலையில் 6 மணிக்கெல்லாம் பாரதியார் வீட்டுக்குப் போனேன். முன்னமே கதவு திறந்திருந்தது. இவ்வளவு சப்தத்திலும் ஒரு சமயம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணம் உதித்ததுதான் தாமதம், கணீரென்று அவர் குரல் கேட்டது. காளியின் நர்த்தனம், பராசக்தியின் ஆடல், இராட்சதப் புயல் காற்று என்று சரமாரியாகக் கவிகளை எழுதிக் கொண்டிருந்தார்.
நான் உள்ளே நுழைந்தவுடன், எழுதிய கவியை வாசித்துக் காட்டினார். "சுற்றுப்புறங்களுக்குச் சென்று கிராமங்களின் நிலையைப் பார்த்து வருவோம்' என்றார். உடனே இருவரும் புறப்பட்டோம். வழியில் சில நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். அன்று, ஏழைகளின் நிலையைக் கண்டு எங்கள் உள்ளம் பாகாய் உருகியது.
"இரக்கப்பட்டு என்ன பயன்? வெறுங்கை முழம் போடுமா? பொருள் படைத்தோரின் கல் மனமன்றோ கரைய வேண்டும்?' என்றேன்.
"பிறர் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி பேசிவிட்டு வாளாயிருப்பது ஆண் மகனுக்கு அழகன்று. கிடைத்ததைக் கொண்டு இவ்வேழைகளின் பசியைத் தீர்ப்போம்' என்றார் பாரதியார்.
"புயல் காற்று தருமம்' என்று ஒரு விளம்பரம் எழுதினார். "வீதி வீதியாகச் சென்று, வீடு வீடாக நுழைந்து காசு, பணம், ரூபாய் என்ற வேற்றுமையின்றி கிடைத்ததைச் சேகரிப்போம். காசில்லையென்போர் கால்படி அரிசியாவது தரட்டும்' என்றார்.
எங்கள் பி.ஏ. பரீட்சைக்குச் சில தினங்களே இருப்பதை நினைவூட்டி, இந்த உத்தம கைங்கர்யத்தில் நாங்கள் ஈடுபட இயலாமைக்கு வருந்தினோம்.
"வருடந்தோறும் பரீட்சையுண்டு. ஏழைமக்களின் பசி அதுவரை காத்திருக்குமா? பரமகுருநாதன் கண்பார்த்தால் பள்ளிக்கூட குருநாதன் உங்களை என்ன செய்ய முடியும்? அறிவுச்சுடர் கொடுக்கும் ஆண்டவனின் பொறுப்பில் அனைத்தையும் விட்டு விட்டு இப்பணியில் தைரியமாய் இறங்குங்கள்' என்று மறுக்க முடியாதபடி கட்டளையிட்டார்.
தலைக்கொரு தலையணை உறையும் உண்டியலும் தாங்கி வீதிக்கு நாலுபேர்களாகப் புறப்பட்டோம். ஏழைகள் தங்களால் இயன்றதை மனமுவந்து தந்தார்கள். நடுத்தர மக்கள் சிறிது ஆட்சேபணை கூறி, அரை குறையாகத் தருமம் செய்தார்கள். பொருள் படைத்த கல் நெஞ்சினர் அநேகர் உதவி செய்ய அறவே மறுத்தனர். இந்தக் காரியத்துக்கென முன் வந்த எங்களையும் சிலர் தூஷித்தனர். நாங்கள் செய்யும் வேலையில் தூஷணையையும் பூஷண பாகமாகக் கொண்டோம்.
எங்கள் விடாமுயற்சியைக் கண்டு ஆரம்பத்தில் தயங்கினவர்கள் தாராளமாக உதவி செய்ய முன்வந்தனர். ஒரு கோஷ்டி வசூல் செய்வதும், இன்னொரு கோஷ்டி கிராமங்கள்தோறும் சென்று துணியும், தானியமும் ஏழைகளுக்கு வழங்குவதுமாக பத்துத் தினங்கள் தொடர்ந்து கைங்கரியம் செய்தோம். சுயநலங் கருதாது பிறருக்கு உழைக்கும் மகத்தான ஆனந்தத்தை அப்போதே கண்டுகொண்டோம்.
சில தினங்களுக்குப் பின் பி.ஏ. பரீட்சைக்கு ஆஜரானோம். எங்களுக்கு விதித்த கேள்விகள் அனைத்தும் நாங்கள் அறிந்தவையாகவே இருந்தன. நான்காவது நாள் பரீட்சையின் முடிவு சர்க்கார் காரியாலத்தில் ஒட்டப்பட்டது. பரீட்சைக்கு ஆஜரான அநேகம் பேர்களில் சிவசுப்ரமண்யம், தைரியம் என்ற நாங்கள் இருவரே தேறினோம். அன்று பாரதியாரின் குதூகலத்துக்கு அளவேயில்லை.'
இவ்வாறு எழுதிய இளைஞர் சிவசுப்பிரமணியம், முதலில் பள்ளித் தேர்வில் வென்றார். பின்னர் படிப்படியாய்ப் படித்து உயர்ந்து நீதியரசராகவும் நிலைபெற்றார் என்பது வரலாறு.
வையாபுரி குப்புசாமிப் பிள்ளை- ராஜமாணிக்கம்மாள் தம்பதியருக்குப் புதல்வராய்ப் பிறந்த சிவசுப்பிரமணியம் என்கிற எஸ்.சிவா, கல்வி பெறுதற்காகப் புதுச்சேரி வந்த காரைக்கால் இளைஞர். படிக்கிற காலத்திலேயே ஸ்ரீஅரவிந்தர், பாரதியார் ஆகியோரிடம் அவர் பழகிய அனுபவங்கள் வேறெவருக்கும் வாய்க்காதவை. அந்த அனுபவங்களைத் தன் சொந்தக் குறிப்பாக, ""என்னை முன்னின்று காக்கும் தெய்வம்'' (தி எவர் புரொடெக்டிங் டிவைன்) என்ற தலைப்பில், அவர் எழுதியிருக்கிறார்.
இது நிகழ்ந்து 108 ஆண்டுகள் கடந்துவிட்டன. சிவா மறைந்து அரை நூற்றாண்டு முடிந்துவிட்டது. புதுவையில் அடித்த நள வருஷத்துப் புயலுக்குப் பின்னர் பொதுப்பணியில் ஈடுபட்ட பாரதி வாழ்வில் சக பயணியாக, சிவாவும் நிலை கொண்டுவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.