தமிழுக்கு அழகூட்டும் சித்திரகவிகள்

செம்மொழியாம் தமிழ்மொழியிலுள்ள தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றான அந்தாதி என்பது யாப்பியலில் ஒருவகை.
தமிழுக்கு அழகூட்டும் சித்திரகவிகள்
Published on
Updated on
2 min read

செம்மொழியாம் தமிழ்மொழியிலுள்ள தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றான அந்தாதி என்பது யாப்பியலில் ஒருவகை.  அந்தம் என்பது முடிவு; ஆதி என்பது தொடக்கம். இவ்விரு சொற்களின் சேர்க்கையே அந்தாதி ஆகும். இதற்கேற்ப, ஒரு பாடல்  முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது, அந்தாதிச் செய்யுள் எனப்படும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது, அது அந்தாதித் தொடை எனப்படும்.

அந்தாதிப் பிரபந்தங்கள் பெரும்பாலும் இறைவன் மீதான பாடல்களாகவே உள்ளன. இவற்றுள் ஒன்று பலவகை விருத்தங்களாலாகிய திருவெவ்வுளூரந்தாதி என்பது. 

திரு எவ்வுள் எனும் தலத்தில் (தற்காலத்துத் திருவள்ளூர்) கோயில் கொண்டுள்ள வீரராகவப் பெருமான் மீதான அந்தாதியான இது, நூறு கட்டளைக் கலித்துறைகளில் அமைந்து, இனிய நடையுடன், சொல்லழகு, பொருளழகிற் சிறந்து, மடக்கு முதலான சொல்லணிகளும், நிரோட்டம், திரிபங்கி, பிறிதுபடுபாட்டு, கரந்துறைச் செய்யுள், காதைகரப்பு ஆகிய சித்திரகவிகளையும் கொண்டமைந்துள்ளது வியப்பை அளிக்கின்றது.

நிரோட்ட(க)ம்- உதடுகள் ஒட்டாத எழுத்துக்களை அமைத்துப் பாடுவது. பெருமாளின் பெருமையைப் பாடும் இவ்வகையிலான செய்யுளொன்று.

நினைத்த னையென்னி னினக்கேல் செயலினை நேரச்சிந்தை
தனைத்த னைந்தினனி டத்திற்செல் கலாத்திற் சார்தற்கென்னே
யினைத்த னையர்க்கென் றினியீக லாதெனை யீயநின்னிற்
றினைத்த னையென்னை நினைக்கிலை யேயென் றினகரனே.

அடுத்தது காதைகரப்பு எனும் கவிதைவகையானது சித்திரம் இல்லாத கவி வகை. காதை என்பது சொல்; கரப்பு என்றால் மறைந்துள்ளது. அவ்வகையிலான ஒரு பாடல். 

இதனை, ஒரு செய்யுளை முழுமையாக எழுதி அதன் ஈற்று மொழிக்கு முதலெழுத்தில் தொடங்கி ஒவ்வோரெழுத்தை இடை விட்டு வாசிக்கும்போது வேறொரு விதமான செய்யுள் வகையாக ஆவது என்கிறது தண்டியலங்காரம் (சொல்லணியியல்).

கராவுகச் சேதி தவந்தார் வலயம காநமவ
வராக ததுசோ ரதணிந் தனனீ வழுநணுக
பராவரு (மெ)மீச கணிக்கறு நாம பனகமனா
மராமிசை வாமத வந்தனின் முன்னந்த மானவனே.

இச்செய்யுளின் ஈற்று மொழிக்கு முதலெழுத்தில் (த) தொடங்கி ஒவ்வொரு எழுத்தாக இடைவிட்டு வாசிக்க, வஞ்சித்துறையில் வரும் செய்யுள் ஒன்று இதில் மறைந்திருப்பதனைக் காணலாம். அனைத்துப் பாடல்களும் பெருமாளின் பெருமை கூறுவன.

தனமுனிந்த வாமிம
மனமறுக்க மீருரா
கநவனந்த சோதரா
வநமலர்ந்த சேகரா.

அடுத்து திரிபங்கி என்னும் வகையிலான ஒரு செய்யுளைக் காணலாம். ஒரு செய்யுளாய் இருந்து ஒரு பொருளை மட்டும் அளிக்காமல், அதுவே மூன்று செய்யுட்களாகப் பிரிந்து, முடிந்து வெவ்வேறு பொருள்களை அளிக்குமாறு பாடப்படுவது (திரிபங்கி என்றால் மூன்று பேதங்களைக் கொண்டது என்று பொருள்).

ஆனந்த தாய்நின்னை யேயனை யாயிம்ப ராமெவ்வுளாய்
தானவள் ளால்மின்னை யேலு ரனேநம்பு தாளினனே
ஊனமுள் ளேனென்னை யாளுவை யேவெம்பு வோததிதீர்
ஈனமுள் ளேல்முன்னை மாதவ னேதம்ப மேயரியே.
மூன்றாய்ப் பிரிந்த வகை: மூன்று வஞ்சித்துறைகள்.

1. ஆனந் த(த)தாய்
தான வள்ளால்
ஊன முள்ளேன்
ஈன முள்ளேல்.

2. நின்னையே யனையாய்
மின்னையே லுரனே
என்னை யாளுவையே
முன்னைமா தவனே.

3. இம்பரா மெவ்வுளாய்
நம்புதா ளினனே
வெம்புவோ ததிதீர்
தம்பமே யரியே.

இவற்றையியற்றியவர் நாராயணதாசரெனும் பெயர் படைத்த புலவராவார். 

பாம்பன் சுவாமிகள் இயற்றியுள்ள அலங்கல் திரட்டில் திருவுருமலைக்கோமகன் பஞ்சவிம்சதியதிக சதபங்கி எனப் பாடியுள்ளதனைக் காணலாம். இதில் நான்கு கலைச்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களைப் பிரித்து அமைத்தால் 145 பாடல்கள் பலவிதமான (13) செய்யுள் யாப்புகளில் அமையும் விந்தையைக் கண்டு களிக்கலாம். 

தமிழ்ப் புலவர்களின் கவிபாடும் ஆற்றல் என்றென்றும் வியத்தற்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com