இந்த வாரம் கலாரசிகன் - (7/01/2024)
விஜயகாந்துக்கும் எனக்கும் இடையேயான நட்பும் தொடர்பும், ஒரு நடிகருக்கும் ஒரு பத்திரிகையாளனுக்கும் இடையேயானதாக இருக்கவில்லை.


விஜயகாந்துக்கும் எனக்கும் இடையேயான நட்பும் தொடர்பும், ஒரு நடிகருக்கும் ஒரு பத்திரிகையாளனுக்கும் இடையேயானதாக இருக்கவில்லை. 1970-களின் பிற்பகுதியில் சென்னை வந்தால் நான் தங்குவது பாண்டிபஜாரில் உள்ள உதயா லாட்ஜில். அதற்கு அருகில் ராஜாபாதர் தெருவில் அமைந்திருந்த ரோஹிணி லாட்ஜில் தங்கியிருந்தவர்கள் விஜயகாந்தும், இப்ராஹிம் ராவுத்தரும்.
அப்போது, பெயர் சொன்னால் தெரியும்படியான புகழை விஜயகாந்த் அடைந்திராத நேரமது. அந்த நிலையில்தான் நாங்கள் அறிமுகமானோம். அறிமுகமான முதல் சந்திப்பிலேயே நாங்கள் நெருக்கமானதற்கு, மதுரைக்காரர்கள் என்பதும், விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் என்பதும்தான் காரணம்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு மட்டும்தான் படித்தேன். எனது தந்தைக்குப் பணி மாறுதல் ஏற்பட்டதால் ஒன்பதாம் வகுப்பிலிருந்து மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துவிட்டேன். மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த், புனித மரியன்னை பள்ளியில் உறைவிட மாணவராக இருந்தவர்.
சம வயதினர் என்பதால், அநேகமாக ஒரே நேரத்தில்தான் நாங்கள் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் படித்திருக்க வேண்டும். ஆனால், பள்ளி நாள்களில் ஒருவரை ஒருவர் சந்தித்ததாகவோ, பார்த்ததாகவோ எங்கள் இருவருக்குமே நினைவில்லை. தலைமை ஆசிரியராக இருந்த அருள்சாமி ஐயா, ஆசிரியர்களாக இருந்த குழந்தைசாமி ஐயா, சடகோபன் சார் என்று ஆசிரியர்களை இருவருமே நினைவு வைத்திருந்தோம்.
பின் மாலைப் பொழுதுகளில் இருள் கவ்வும் வேளை வரை, ராஜாபாதர் தெருவில் மேலும் கீழும் கதை பேசியபடி நாங்கள் நடந்த நாள்கள் ஏராளம். ரோஹிணி லாட்ஜில், திரைப்படங்களில் தடம் பதிக்கத் தடுமாறிக் கொண்டிருந்தபோதுகூட, விஜயகாந்தை சந்திக்க பல இளைஞர்கள் வருவார்கள். அவர்களில் பலர் இயக்குநர் கனவுடன் சென்னைக்கு வந்தவர்கள். அவர்கள் ஆர்வத்துடன் சொல்லும் திரைக்கதைகளை, என்னையும் தங்களுடன் அமர வைத்து இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்தும் ரசித்துக் கேட்பார்கள். அவர்களைப் பாராட்டுவார்கள்.
விஜயகாந்திடம் கதை சொன்ன பல இளைஞர்கள் இயக்குநரானார்கள். வேறொருவர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்படும்போது, அதற்காக விஜயகாந்த் வருத்தப்பட்டதில்லை. அந்த இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டிருக்கிறார்.
நான் 'நியூஸ்கிரைப்' என்கிற செய்தி நிறுவனத்தைத் தொடங்கியபோது, அதற்காக மகிழ்ச்சி அடையாத, என்னை ஊக்குவிக்காத ஒரே நபர் விஜயகாந்த் தான். 'நம்ம திறமை நம்ம ஊரில விலை போகணும். இங்கிலீஷில எழுதி என்ன சாதிக்கப்போறீங்க?' என்று அவர் கேட்டபோது எனக்கே சற்று வருத்தமாகத்தான் இருந்தது.
'வைத்தி சார், எனக்குத் தமிழ்ப் படத்தில நடிச்சாப் போதும்' என்று கடைசிவரை மிகவும் தெளிவாக அவர் இருக்கவும் செய்தார்.
நான் 'தினமணி' ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில வாரங்களில், ஒருநாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'நானும் பண்ருட்டியாரும் உங்கள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருக்கிறோம்' என்று அவர் சொன்னதும் என்னால் என் காதுகளை நம்ப முடியவில்லை. சொன்னபடியே, அரை மணிநேரத்தில் வந்துவிட்டார்.
'உங்களை இப்படி 'தினமணி' போன்ற தமிழ் தினசரியின் ஆசிரியராகப் பார்க்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். அதனால்தான் நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்று வந்துவிட்டேன்' என்று எனது கைகளைப் பற்றியபடி விஜயகாந்த் சொன்ன வார்த்தைகளை நான் எப்படி மறக்க முடியும்?
தேர்தல் பிரசாரத்தில் இருக்கும்போது, ரிஷிவந்தியத்திற்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் சந்தித்தோம். அப்போது இருந்த அதே உடல்நிலை தொடர்ந்திருந்தால், இப்போது ஒருவேளை அவர் முதல்வராக இருந்திருக்கக்கூடும். நானும் மை.பா. நாராயணனும் அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து, பிறகு வேண்டாம் என்று தவிர்த்துவிட்டோம். ஏன் தெரியுமா?
நடிகர் விஜயகாந்தாக, தலைவர் கேப்டனாக இல்லாமல், எங்கள் நினைவில் அவர் எப்போதுமே விஜியாகவே நிலைத்திருக்கட்டும் என்று தீர்மானித்ததால்!
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிக்கு அறிமுகம் தேவையில்லை. ஏற்கெனவே அவரது சிறுகதைகளின் தொகுதி வெளிவந்திருந்தாலும், இப்போது இரண்டு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன அவரது 99 சிறுகதைகள்.
1978-ஆம் ஆண்டு 'சிம்மசொப்பனம்' என்ற பெயரில் 'சரஸ்வதி வெளியீடு' என்று அவரே பதிப்பித்தார். 2008-இல் தோழர் ரவீந்திர பாரதி அடுத்த தொகுப்பை வெளியிட்டார். இப்போது த. அறம், விடுபட்ட சில சிறுகதைகளையும் சேர்த்து மீண்டும் இரண்டு தொகுதிகளாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
தனுஷ்கோடி ராமசாமியின் பெரும்பாலான சிறுகதைகளை நான் 'ஆனந்தவிகடன்' இதழில் வெளிவந்தபோது படித்திருக்கிறேன். தனது அணிந்துரையில் பொன்னீலன் கூறியிருப்பதுபோலவே, ஏதாவது ஒரு கதையிலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்துத் தேர்ந்த ஒரு வாசகனிடம் கொடுத்தால், நாலு வரியைப் படித்தவுடன் 'அடடே இது தனுஷ்கோடி' என்று கூறுமளவுக்குத் தனித்தன்மையானவை அவர் கதைகளும், வரிகளும்.
ஒரு படைப்பாளியின் எழுத்தின் வலிமையை வெளிப்படுத்துவது புதினங்கள் அல்ல, சிறுகதைகள்தான். சிறுகதை எழுத்தாளர்தான் தேர்ந்த கதை சொல்லி. தனுஷ்கோடி ராமசாமி எழுதின ஒரே ஒரு புதினம் 'தோழர்' மட்டுமே!
கவிஞர் கவிச்சுடர் கவிதைப்பித்தனின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கும் ஆவுடை யூனுஸின் 'பட்டினங்காற்று' கவிதைத் தொகுதி, புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது. தனது 'கைபேசிக் கருச்சொல் அகராதி' நூலுக்கு 2017-இல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்பட்டினம் கிராமத்தில் பிறந்த ஆவுடை யூனுஸ் என்கிற முகமது யூனுஸின் முதல் கவிதைத் தொகுதி இது என்று அவரது தன்னுரைக் குறிப்பு தெரிவிக்கிறது.
அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 'நிழலும் உறவே' என்கிற கவிதையில் இருந்து எடுக்கப்பட்டவை இங்கே தரப்பட்டிருக்கும் வரிகள் -
அனுமதி இல்லாமலே
எப்போதும் என்னை
தொடரும் நிழலே...
நான் இல்லாமல்
நீ இல்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...